Tuesday, December 6, 2016

ஸ்ரீ நாராயண குரு – ஸ்ரீ தாண்டவராய சுவாமிகள்

ஸ்ரீ நாராயண குரு – ஸ்ரீ தாண்டவராய சுவாமிகள்

ஸ்ரீ நாராயண குரு மற்றும் ஸ்ரீ தாண்டவராய சுவாமிகள் ஆகியோரின் திருமேனி காத்தருளிய அதிஷ்டானப் பீடங்கள் அருகருகே அமைந்து ஸ்ரீ நாராயண தாண்டேஸ்வரம் எனும் பெயரில் நன்னிலத்தில் வழங்கி வருகின்றது.

ஸ்ரீ நாராயணர் கி.பி.1378 ஆம் வருடம் நன்னிலத்தில் தோன்றினார். தமது 21-ஆம் அகவையிலேயே இறைநாட்டம் கொண்டு சிருங்கேரியை அடைந்து 25 வருடம் வித்தியாரண்யர் என்பவரிடம் கல்வி பயின்று துறவறம் பூண்டு அங்கேயே தவக்குடிலமைத்து அருள்பாலித்து வந்தார்கள். காலப்போக்கில் ஸ்ரீ தாண்டவராய சுவாமிகள் நாராயண குருவுக்குச் சீடராக வாய்த்தார்கள். இவ்வாறு அருளாட்சி செய்துவந்த ஸ்ரீ நாராயணகுரு கி.பி.1449-ஆம் ஆண்டு வைகாசித் திங்கள் விசாகநன்னாளில் பரிபூரனமானார்கள். அடியார் குழாம் தவக்குடிலுக்கு அருகிலேயே சுவாமிகளுக்கு திருமேனிக்காப்பிட்டு அதிஷ்டானம் எழுப்பி நித்திய பூஜை நிகழ்த்தி வழிபடலாயினர். (வைகாசி விசாகம் குருபூஜை)

ஸ்ரீ தாண்டவராய சுவாமிகள்

ஸ்ரீ நாராயண குருவின் சீடராக விளங்கி, புகழ்பெற்ற சுவாமிகள் நன்னிலத்தில் கி.பி.1408-ஆம் ஆண்டு மாதவநந்தர்-அம்பிகை அம்மையார் ஆகியோருக்கு திருமகனாய் அவதரித்தார்கள்.

ஒரு நாள் தாண்டவராயர் தம் குருநாதரை வணங்கி சமாதி யோகத்தில் ஆழ்ந்தார். அப்பொழுது நாராயணகுரு தோன்றி, “அன்பனே! நீ உலகில் உள்ள மக்களின் துன்பங்கள் நீக்குவதற்கும், அவர்கள் தூயமெய்யறிவை அடைவதற்கும் நீ கற்ற வேதாந்த நூல்களின் சாரங்கள் முழுவதையும் திரட்டி, வேதாந்த நூல் ஒன்றை இயற்றுக! என்று அருள்பாலித்தனர். தம் குருவின் ஆணையைச் சிரமேற்கொண்ட தாண்டவராயர் “கைவல்ய நவநீதம்” எனும் ஒப்பற்ற நூலை இயற்றினார்.

அருளாட்சி நடத்திவந்த தாண்டவராய சுவாமிகள் தம் குருவைப்போல் அவர்மீது கொண்ட அளவற்ற பற்றினால் குருமறைந்த அதே வைகாசி விசாகத்திலே கி.பி.1534-ஆம் ஆண்டு பரிபூரணம் எய்தினார்கள்.

நாராயணகுருவிற்கு அருகிலேயே இவரது திருமேனியும் குகை செய்விக்கப்பட்டு ஸ்ரீ நாராயணத்தாண்டேஸ்வரர் ஆலயத்துள் ஒரே கருவறையுள் தென்புறமிருக்கும் லிங்கத்திருமேனி ஸ்ரீ நாராயணகுரு அதிஷ்டானமாகும். வடபுறமுள்ள லிங்கத்திருமேனி தாண்டவராய சுவாமிகள் அதிஷ்டானமாகும்.

“அவனன்றி ஓரணுவும் அசையாது” என்பதற்கு விளக்கம் கொடுக்கையில் வள்ளற்பெருமான், ‘கைவல்ய நவநீதம்’ என்னும் நூலில் உள்ள “இந்தச் சீவனால் வரும்…” எனத் தொடங்கும் பாடலை எடுத்துக்காட்டாக கூறியுள்ளார் என்பது சிறப்பு. (ச.மு.க. பிரபந்தத்திரட்டு – பக்கம்-93 – அ.திருநாவுக்கரசு பதிப்பு)

நன்னிலம் கும்பகோணத்திற்கு கிழக்கில் 20 கி.மீ. தொலைவிலும் மயிலாடுதுறைக்குத் தெற்கிலும் அமைந்துள்ள ஊர். ஸ்ரீ நாராயண தாண்டீஸ்வரர் ஜீவசமாதி ஆலயம். ஆலயத்துள் ஒரே இடத்தில் அருகருகே சிவலிங்க திருமேனிகளுடன் காட்சியளிப்பவை இரு மகான்களின் சமாதி பீடங்களாகும்.



No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.