நல்ல நோட்டும்
கள்ள நோட்டும்
நமது மத்திய
அரசு திடீரென உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டிருக்கும் இந்திய ரூபாய்களான ஐநூறு மற்றும்
ஆயிரம் ரூபாய் ஏடுகளை தடை செய்துள்ளது. (இந்தியாவில்
மட்டும் தடை எனவும் மற்ற உலக நாடுகளில் தடையில்லை எனவும் அறிவிக்கின்றது)
கருப்பு பணத்தை
ஒழிப்பதற்காகவும், கள்ள பணத்தை ஒழிப்பதற்காகவும் இதத் தடையை மத்திய அரசு செய்துள்ளதாக
அறிகின்றோம். இதற்காக தடை செய்யப்பட்டுள்ள பல கோடிக்கணக்காண ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய்
ஏடுகளை திரும்பப்பெற்றுக்கொண்டிருக்கின்றது மத்திய அரசு. அதுபோல ஐநூறு மற்றும் ஆயிரம்
ரூபாய் ஏடுகளை பல கோடிக்கணக்கில் புதியதாக வெளியிடுகின்றது மத்திய அரசு.
தற்போது இந்திய
நாட்டில் மட்டும் மக்களிடம் இருக்கின்ற அனைத்து ரூபாய் ஏடுகளையும் ஒன்றாக அடுக்கி வைத்தால்
அது இமய மலையையே விழுங்கிவிடும் அளவிற்கு இருக்கும் என ஒரு ஆய்வு கூறுகின்றது. அதில்
ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாயின் ஏடுகள் மட்டும் இமயமலையில் பாதி உயரத்திற்காவது வரும்.
அவ்வளவு பணத்தையும் அச்சிட எத்தனை கோடி கோடிகளை மக்கள் வரிப்பணத்திலிருந்து செலவிட்டிருக்கும்
நமது மத்திய அரசு என்ற கணக்கினை மத்திய அரசு மக்களாகிய நமக்கு தெரிவிக்குமா?
அதுபோல தற்போது
வெளியிட்டிருக்கும் புதிய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் ஏட்டிற்காக நமது வரிப்பணம் எத்தனை
கோடி கோடி செலவாகியது என்பதனையும் மத்திய அரசு நாட்டு மக்களுக்கு தெரிவிக்குமா? இப்படி
பல கோடிகோடிகளை இழந்து, இப்படிப்பட்ட நிதி நிர்வாகத்தை மத்திய அரசு செய்வதினால் உண்மையில்
கள்ள பணத்தையும், கருப்பு பணத்தையும் ஒழித்துவிட முடியுமா?
இன்னும் சில மாதங்களில் புதிய ஐநூறு மற்றும் ஆயிரம்
ரூபாய் ஏடுகளில் கள்ள பணம் வந்துவிட்டது என்று செய்தித்தாள்களில் பார்க்கத்தானே போகின்றோம்.
கருப்பு பணமும் அதுபோலவே மக்களிடையே முடங்கத்தானே போகின்றது. ரூபாய் நோட்டுகளாக முடங்குவதைவிட
இவை தங்கம், வெள்ளி, பிளாட்டினம், வைரம், அயல் நாட்டு கரன்சிகள் என்ற பல வழிகளில் கருப்பு
பணமாக இருப்பதை மத்திய அரசு அறியாததா?
கள்ளப்பணத்தை
ஒழிக்க நல்ல பணத்தை தடைசெய்வதுதானா, நிதி நிர்வாகம்? கருப்பு பணத்தை ஒழிக்க வெள்ளை
பணத்தை தடை செய்வதுதானா, நிதி நிர்வாகம்? இப்படி தடை செய்வதால் ஏற்படும் இழப்புக்கும்
செலவுக்கும் கணக்கு பார்த்தால், கருப்பு பணமும், கள்ள பணமும் ஒரு பொருட்டே இல்லை என்பதை,
மக்களுக்கு மத்திய அரசு தனது கணக்கை காட்டினால் புரியவரும். இந்த பணத்தடையால் உண்மையில்
இந்திய பொருளாதரத்திற்கு இழப்பு, இந்திய மக்களுக்கு இழப்பு.
கள்ள பணம் வெளிநாட்டிலிருந்து
வந்தாலும், உள் நாட்டில் அச்சடித்தாலும் அதனை எவ்வாறு கடுமையான சட்டம் இயற்றி தடுக்க
வேண்டுமோ? அவ்வாறு தடுப்பதுதான் அரசின் வேலை. கருப்பு பணம் எவ்வாறு உருவாகின்றது என்பதை
அறிந்து அதனை எவ்வாறு தடுக்க வேண்டுமோ? அவ்வாறு தடுக்க வேண்டியதுதான் அரசின் வேலை.
அதை விடுத்து மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்திவிட்டு, புதிய வீட்டினை கட்டுவதால்
வீட்டுக்காரருக்குதான் நட்டம் என்பதை வீடு கட்டியவன் நன்கு அறிவான்!
கள்ள பணமும்,
கருப்பு பணமும் வைத்திருந்தவர்கள் இத்தோடு ஒழிந்தார்கள்! என்று ஆனந்தப்படுகின்றோமே!
இந்த ஆனந்தம் நமது அறியாமையைக்காட்டுகின்றது. கள்ளப் பணமும் கருப்பு பணமும் அவர்களுடைய
சொத்து அல்ல. அதனை இழப்பதனால் அவர்களுக்கு ஒன்றும் நேர்ந்துவிடாது. ஒரு வகையில் அந்த
கருப்பு பணமும், மக்களாகிய நம்முடைய சொத்து தான். ஆனால் நல்ல பணம் என்பது இந்நாட்டிலுள்ள
நம்மைப்போன்றவர்களின் உரிமைச் சொத்து. அதனை இழந்து நாம் தாம் நிற்கின்றோம். இதன் இழப்பீட்டு
மதிப்பு எத்தனை கோடிகோடியோ! அத்தனை கோடி மதிப்புள்ள பணமும் நாட்டுமக்களாகிய நமது இழப்பு
என்பதை உணருங்கள்.
ஐநூறு ரூபாய்க்கு
ஐநூறு ரூபாய்தான் வங்கியில் கொடுத்துவிடுகின்றார்களே! என்று கணக்கு போடாதீர்கள். நீங்கள்
தற்போது வங்கியில் கொடுத்த, தடை செய்யப்பட்ட ஐநூறு ரூபாயின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
அந்த ஒரு ஐநூறு ரூபாய் ஏட்டை உருவாக்க இருநூறு ரூபாயாவது செலவாகியிருக்கும். அதுபோல
புதியதாக தற்போது வாங்கினீர்களே ஒரு ஐநூறு ரூபாய் ஏடு! அதன் மதிப்பு என்ன தெரியுமா?
அதனை உருவாக்க முந்நூறு ரூபாயாவது அரசிற்கு செலவாகி இருக்கும். ஆக, நாம் ஒரு பழைய ஐநூறு
ரூபாய் வங்கியில் செலுத்தி அதற்கு பதில் ஒரு புதிய ஐநூறு ரூபாய் வாங்கிச்சென்றால் மத்திய
அரசிற்கு ரூபாய் ஐநூறு செலவாகியிருக்கின்றது எனப்பொருள். இப்படி கோடிகோடியான ரூபாய்
ஏடுகளுக்குமான செலவுக்கு, மக்களாகிய நமது வரிப்பணம்தான் உதவியிருக்கின்றது. தற்போது
எண்ணிப்பாருங்கள் யாருக்கு உண்மையில் இழப்பு என்பதை.
எனதருமை மக்களே!
இதுபோன்ற அரசின் நிதி நிர்வாகத்தை நன்கு ஆராய்ந்து நடுநிலையோடு அரசிற்கு ஆதரவு தாருங்கள்.
மத்திய அரசின் நோக்கம் மிக மிக சரியானதுதான். அதனை யாராலும் மறுக்க இயலாது. ஆனால் அதற்கான
வழிமுறை நாட்டு மக்களை சுரண்டுவதாக உள்ளது. பணக்காரனை தண்டிக்க ஏழை மக்களின் வரிப்பணம்
வீணாகலாமா? என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நான் இங்கு அரசியல் ஏதும் பேசவில்லை. நிதி
நிர்வாகம் பற்றியே பேசுகின்றேன். நீங்களும் பேசுங்கள். உண்மை வெளிவரட்டும். TMR
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.