"சன்மார்க்க
விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
மாதம்
ஒரு மகான்
SEPTEMBER-2015
சதாசிவ
பிரமேந்திரர்
சதாசிவ பிரமேந்திரர் சமாதி
கரூர் அருகே உள்ள நெரூரில் அமைந்துள்ளது. நெரூர் கரூரில் இருந்து பஞ்சமாதேவி செல்லும்
சாலையில் காவிரி ஆற்றின் கரையில் உள்ளது. இங்கு காவிரி ஆற்றின் கரை அருகில் அக்னீஸ்வரர்
கோயில் அமைந்துள்ளது. நெரூர் அக்னீஸ்வரர் கோயிலுக்கு அருணகிரி நாதரே வந்து பதிகம் பாடியுள்ளதாக
கூறப்படுகின்றது. அக்னீஸ்வரர் கோயிலுக்கு பின்புறம் சதாசிவ பிரமேந்திரரின் சமாதி அமைந்துள்ளது.
சதாசிவ பிரமேந்திரர் மதுரை
மாநகரில் 17-18 ஆம் நூற்றாண்டில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை
சோமநாத அவதானியார், தாயார் பார்வதி அம்மையார். சதாசிவ பிரமேந்திரரின் இயற்பெயர் சிவராமகிருஷ்ணன்
என்பதாகும். இளம் வயதிலேயே இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவர் பரமசிவேந்திராள், வேங்கடேச
அய்யர் ஆகியோரிடம் முறையாக சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தார். பரமசிவேந்திராளிடம்
கல்வி கற்று வரும் போது இவரின் திறமைகளை கேள்விப்பட்டு மைசூர் மகாராஜா இவரை சமஸ்தான
வித்வானாக்கிக் கொண்டார்.
மைசூர் சமஸ்தானத்தில் மற்ற
வித்வான்களை எல்லாம் வாத திறமையில் தோற்கடித்தார். இதை கேள்வியுற்ற அவரின் குரு பரமசிவேந்திராள்
இவரை அழைத்து ஊர் வாயெல்லாம் அடக்க கற்றுக்கொண்ட நீ உன் வாயை அடக்க கற்றுக் கொள்ளவில்லையே
என்று கூறியுள்ளார். உடனே மைசூர் மகாராஜா சமஸ்தான பதவியை துறந்து இனி பேசுவதில்லை என்று
முடிவு செய்து மவுனத்தைக் கடைபிடித்து வந்தார். மேலும், மனிதர்கள் நடமாட்டம் அற்ற காடு,
மலைப் பகுதிகளில் சென்று வசிக்க ஆரம்பித்தார். தீவிர யோக சாதனைகளில் ஈடுபட்டார். தவத்தின்
விளைவாய் தான், தனது என்ற எண்ணங்கள் நீங்கப் பெற்று அது முதல் சதா பிரம்ம நிலையில்
லயித்திருப்பது சதாசிவ பிரம்மேந்திரரின் வழக்கமானது. உறக்கம் இல்லை, உணவு இல்லை, உடை
இல்லை, ஆசை அபிலாஷைகளைத் துறந்த அவதூதராக நடமாடத் துவங்கினார்.
ஒருமுறை கொடுமுடியில் காவிரி
ஆற்றின் குறுக்கே இருந்த பாறையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார் சதாசிவ பிரமேந்திரர்.
தூரத்தே இருந்து அவர் தவம் செய்வதை மக்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆற்றில்
திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மகானை அடித்துச் சென்றுவிட்டது. பல இடங்களில் தேடியும்
அவர் கிடைக்காததால் வெள்ளத்தினால் அவர் அடித்துச் செல்லப்பட்டு விட்டார் என்றே மக்கள்
கருதினர். பல நாட்கள் கழித்து வெள்ளம் வடிந்தது. அப்போது வீடு கட்ட மணல் எடுப்பதற்காக
வந்த சிலர் ஆற்றின் ஒருபுறத்தில் தோண்டினர். அப்போது திடீரென மண்வெட்டியில் இருந்து
ரத்தமாக வந்ததைக் கண்டு அஞ்சிய அவரகள் மேலும் தோண்டிப் பார்த்த போது, உள்ளே அமர்ந்த
நிலையில் கண்களை மூடி சதாசிவர் தவம் செய்து கொண்டிருப்பது தெரிந்தது. அவர் தலை மீது
மண்வெட்டி பட்டு, அந்தக் காயத்திலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. மக்கள் கூக்குரல்
கேட்டுக் கண் விழித்த சதாசிவர், எதுவும் நடக்காதது போல் அவ்விடம் விட்டு வேகமாகச் சென்று
விட்டார்.
இரண்டு நூற்றாண்டுகளுக்கு
மேல் வாழ்ந்தவராகக் கருதப்படும் இம்மகான் மானஸ ஸஞ்சரரே, சர்வம் பிரம்ம மயம், பிபரே
ராமரஸம், ப்ருஹி முகுந்தேதி போன்ற பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும், பிரம்ம சூத்ர விருத்தி,
பிரம்ம தத்வ பிரகாசிகா, யோக சுத்தாகரா, ஆத்ம வித்ய விலாஸம் போன்ற பல நூல்களையும் எழுதியிருக்கின்றார்.
பல்வேறு அற்புதங்கள் புரிந்து,
பலரது ஆனம ஞானம் சிறக்கக் காரணமாக இருந்த மகான் சதாசிவ பிரம்மேந்திரர், 1753-ஆம் ஆண்டில்
சித்திரை மாதத்து தசமி திதி அன்று, கரூரை அடுத்த நெரூரில், ஜீவ சமாதி ஆனார்.
"பெரியோர்கள் எழுந்தருளி யிருக்கும் இடங்களுக்குச் செல்லுதல்" என்பது இந்திரிய ஒழுக்கத்தில் ஒரு
கூறுஆகும். எனவே இப்படிப்பட்ட பெரியோர்கள் அடைந்த இடத்திற்கு சென்றுவருவது நல்லது.
OCTOBER-2015
படே சாஹிப்
விழுப்புரம் - புதுச்சேரி பிரதான சாலையில் (வில்லியனூர் வழி) உள்ளது கண்டமங்கலம்.
விழுப்புரம் மற்றும் புதுச்சேரியிலிருந்து தலா 20 கி.மீ. தொலைவில் உள்ளது இவ்வூர்.
ரயில்வே கேட் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ பயணித்தால் சின்னபாபு சமுத்திரம்
என்கிற ஊர் உள்ளது. இங்குதான் மகான் ஸ்ரீபடே சாஹிப் ஜீவ சமாதி அமைந்துள்ளது. இஸ்லாமிய
சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், இறை நிலையின் அற்புதமான பேராற்றலை உணர்ந்த பின் எல்லா
அடையாளங்களையும் துறந்தவர் இவர். ஜாதி, மதம், இனம் - இவற்றுக்கு அப்பாற்பட்டு விளங்கினார்.
சாயபு என்பது பொதுவான பெயர். படே என்றால் உயர்ந்த என்று பொருள். உயர்ந்த உத்தமமான
மகான் என்கிற பொருளில் இவர் படே சாயபு என்று அழைக்கப்பட்டு வருகிறார். மகான் படே சாஹிப்
எவரிடமும் பேசியதில்லை. எப்போதும் மெளனம் தான். தன் வாழ்நாளில் இவர் காத்து வந்த மெளனம்,
இவருடைய தியானத்துக்குப் பெரும் உதவியாக இருந்திருக்கின்றது. தன் வாழ்நாளில் இவர் நிகழ்த்திய
அற்புதங்கள் ஏராளம். மகானின் அருள் பெற்றுத் திரும்பிய பலரின் வாழ்வும் ஜகஜ்ஜோதியாகப்
பிரகாசித்தது.
அவரது ஆசீர்வாதத்தால் நோயாளிகள் குணமடைந்தனர். தீரவே தீராது என்று பலர் அனுபவித்து
வந்த நோய்கள், இவரது ஸ்பரிசத்துக்குப் பின் முற்றிலுமாக நீங்கி விட்டது. ஒருமுறை இவரை
கருநாகம் தீண்டியது. சிறிது நேரத்தில் விஷம் உடல் முழுவதும் பரவி நீல நிறத்தில் காணப்பட்டார்.
பக்தர்கள் அனைவரும் என்ன நடக்குமோ என்று பதறிய போது சாஹிப்பை தீண்டிய கருநாகம் அவர்
உடலிலிருந்து விஷத்தை உறிஞ்சிக்கொண்டு அவர் பாதங்களுக்கருகில் விழுந்து உயிர் விட்டது.
அந்த கருநாகத்திற்கு மோட்சம் அளித்தார் மகான்.
திருடுவதையே குலத்தொழிலாக வைத்திருந்த பல திருடர்கள் இவரால் திருந்தினார்கள். மொத்தத்தில்,
படே சாஹிப்பின் தரிசனம் பெற்று சகல ஜீவ ராசிகளும் பலனடைந்துள்ளன. மகான் அவர்கள் தன்வந்திரி
லோக தும்புரு வீணையுடன் மகிழ மரத்தின் அடியில் அமர்ந்து தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு
ஆசி வழங்குவார். இன்னும் சிலருக்கு நீர் முகந்து தருவார். நோயின் வீரியம் அதிகம் இருப்பவர்களிடம்
அங்குள்ள கொன்றை மரத்தை அடையாளம் காட்டி, அதைச் சுற்றி வா என்று ஜாடையால் சொல்வார்.
படே சாஹிப்பிடம் வந்தாலே, நோய்கள் மறைகின்றன என்று நம்பிக்கை எங்கெங்கும் பரவி, அவர்
வாழ்ந்த காலத்தில் தினமும் ஏராளமானோர் இவரைத் தரிசித்து அருள் பெற்றுச் சென்றனர்.
படே சாஹிப் எங்கே, எப்போது பிறந்தார்? அவருடைய அவதார தினம் எது? போன்ற தகவல்கள்
தெரியவில்லை என்றாலும், அவர் ஜீவ சமாதி ஆனது 1868-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 12-ஆம்
தேதி என்று ஒரு குறிப்பு இருக்கின்றது. அன்றைய தினம் செவ்வாய் கிழமை, ஆயில்ய நட்சத்திரம்.
எனவே, இவரது ஜீவ சமாதியில் செவ்வாய் கிழமை மற்றும் ஆயில்ய நட்சத்திர தினங்களில் வழிபாடு
விசேஷமாக இருக்கும். மகானின் அருளாசி வேண்டி திரளான பக்தர்கள் குவிவார்கள். வழிபாடுகளும்
சிறப்பாக இருக்கும். தவிர குருவாரம் என்பதால் வியாழக்கிழமைகளிலும், விடுமுறை நாள் என்பதால்
ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தர்கள் வந்து செல்கின்றார்கள்.
இன்றைக்கும் தன் ஜீவசமாதி தேடி வரும் பக்தர்களின் பிணியை அரூப மருத்துவராக இருந்து
தீர்த்து வருகின்றார் மகான் படே சாஹிப்.
"பெரியோர்கள் எழுந்தருளி யிருக்கும்
இடங்களுக்குச் செல்லுதல்" என்பது, வள்ளலார் அருளிய இந்திரிய ஒழுக்கத்தில் ஒரு கூறுஆகும். எனவே இப்படிப்பட்ட
பெரியோர்கள் அடைந்த இடத்திற்கு சென்றுவருவது நல்லது.
NOVEMBER-2015
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எனவும் முருகதாசர் எனவும் அழைக்கப்பட்டவரின்
இயற்பெயர் சங்கரலிங்கம் ஆகும். இவர் 28-01-1839 ஆம் ஆண்டு, சைவ வேளாளர் மரபில் தோன்றிய
செந்தில்நாயகம் பிள்ளைக்கும் பேச்சி முத்தமாளுக்கும் மகனாக திருநெல்வேலியில் பிறந்தார்.
சிறுவன் சங்கரலிங்கம் தனது ஆறரை வயதில் தனது தந்தையாரை இழந்தார். தனது பெரிய தந்தையார்
மூலம் தென்காசியை அடுத்த சுரண்டையில் கல்வி பயின்றார். அவ்வூரில் உள்ள பூமிகாத்தாள்
என்னும் அம்மனை தனது எட்டு வயதில் நேரிசை வெண்பாவால் பாடத்தொடங்கினார். அன்றுமுதல்
பாடல்களை பனை ஓலைகளில் புனையத்தொடங்கினார். சங்கரலிங்கத்தின் குருவான சீதாராம நாயுடு
விநாயக மந்திரம், லட்சுமி மந்திரம், ஆறெழுத்து மந்திரம் போன்ற மந்திரங்களை உபதேசித்தார்.
சங்கரலிங்கத்தின் மடை திறந்த வெள்ளம் போலப் பாடும் திறனைக் கண்ட ஆசிரியர், அவரை "ஓயா
மாரி" என அழைத்து பெருமை செய்தார். ஊர் மக்கள் அவரை முருகதாசர் என அழைத்தனர்.
திருப்புகழ் சந்தப் பாக்களையும், வண்ணப் பாடல்களையும் பாடியதால் வண்ணச் சரபம் எனவும்
அழைக்கப்பட்டார்.
அவரது கனவில் முருக
பெருமான் தோன்றி காட்சி கொடுத்ததால், அவர் குமரன் குடிகொண்ட இடங்களுக்கு சென்று வழிபட்டார்.
வள்ளியூர் மலைக்குச் சென்று முருக பெருமானின் சன்னதியில் கல்லாடை, இலங்கோடு, கவுபீணம்,
ருத்ராச மாலை, தண்டம் ஆகியவற்றை வைத்து வணங்கி, அவற்றை அணிந்து கொண்டார். அன்று முதல்
அவர் தண்டபாணி சுவாமிகள் என அழைக்கப்பட்டார். யாரும் இவருக்கு முறைப்படி தீட்சையளித்து
துறவியாக்கவில்லை.
ஒரு முறை
தென்காசி அருகிலுள்ள திருமசை குமாரசாமி கோயில் சந்நிதியில் நின்று, முருக பெருமான்
தன்னை ஆட்கொள்ள வேண்டும் என பணிந்து வேண்டினார். இறையருள் கிடைக்காததால், இனி உயிருடன்
இருந்து பயனில்லை என்று மலையிலிருந்து விழுந்து புரண்டார். ஆனால் முருகன் அருளால்,
இடது தோளில் புண் ஏற்பட்டதைத் தவிர அவருக்கு வேறு பெரிய தீங்கு நேரவில்லை. தமக்குத்
திருவருள் துணை மிகுதியாக இருப்பதை உள்ளுணர்வால் உணரத் தொடங்கினார். தண்டபாணி சுவாமிகள்
எழுத்தாணி கொண்டு எழுதத் தொடங்கினால், இவர் மனம் செல்லும் வேகத்துக்கு எழுத்தாணியால்
எழுத இயலாது. இவர் தமது பாடல்களில் முற்பிறவியில் தாம் அருணகிரியாகப் பிறந்தவர் என்றும்,
இதை முருகபெருமானே தம்மிடம் பலமுறை கூறியதாகவும் குறிப்பிடுகிறார்.
சுவாமிகள் திருப்பரங்குன்றம்,
மதுரை, சிதம்பரம், திருமயிலை ஆகிய திருத்தலங்களை வழிபட்டு சென்னையில் இருந்த சமயம்
யாழ்பாணத்து நல்லூர் ஞானப்பிரகாசம் வழிவந்த ஆறுமுக நாவலரை கண்டு உரையாடி மகிழ்ந்தார்.
திருநெல்வேலியில் இருந்தபோது முருகனின் கட்டளைப்படி பிரபந்தங்கள் பாடினார். முருகனின்
காட்சி கிடைக்காததால், தாம் இயற்றிய பிரபந்தங்களை பொருநை ஆற்றில் கிழித்தெறிந்தார்.
இப்படி அவசரப்பட்டு செய்தமைக்காக வருந்திய அவர், பதினாறு வகையான நூல்களைப் புனைந்து,
திருச்செந்தூரில் இறையன்பர்கள் கூடியிருந்த அவையிலே அரங்கேற்றினார். கடலூரில் இருந்தபோது,
திருவருட்பிரகாச வள்ளலாரை ஒரு அன்பர் வீட்டில் சந்தித்து, இருவரும் தங்களின் உறவுகளைப்
பரிமாறிக் கொண்டனர். அப்போது சுவாமிகள் வள்ளலாரிடம், "தாங்கள் தாயுமானவராக முற்பிறப்பில்
இருந்தவர்" என்றுணர்த்தினார். வள்ளலாரும் "இருக்கலாம்" என்றனர்.
வள்ளலாரின் அணுக்கத்தொண்டர்
காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்கள் அருளிய பிரபந்தத்திரட்டு என்னும் நூலின் சிறப்புப்பாயிரத்தில்,
இரண்டு நேரிசை வெண்பாக்களையும் தண்டபாணி சுவாமிகள் இயற்றியுள்ளார்கள். (பிரபந்தத்திரட்டு
- அ.திருநாவுக்கரசு பதிப்பு - பக்கம் - 5)
முருகதாச சுவாமிகளென்றுந், திருப்புகழ் சுவாமிகளென்றும் விளங்கிய
ஸ்ரீமத்-தண்டபாணிசுவாமிகள் அருளிச்செய்த
நேரிசை வெண்பா.
வடலூரா னண்பர்களில் வாய்மைகல்வி ஞானத்
திடமார்ந் தவிர்தருமோர் செல்வன் - கடல்சூழ்
பாருலுக முய்வதற்காப் பாடுமிசைப் பாடலமு
தாருமவர்க் குண்டே யருள்.
அந்தண் வடலூரா னன்பர்களிற் சீரியனாங்
கந்தசுவாமிக் கவிப் புலவ - னிந்த
வுலகத் தினர்மகிழ வோதுமிசைப் பாட
லிலகற்குஞ் சாட்சிதெய்வ மே.
காரணப்பட்டு ச.மு.க. அவர்கள் தாம் அருளிய பிரபந்தத்திரட்டில் தண்டபாணி
சுவாமிகளைப்பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார், "திருநெல்வேலியில் சைவவேளாண் மரபில் உதித்து ஒன்பது வயது
முதல் முருகப்பெருமானைச் செந்தமிழ்ச்சுவை பொலிந்த திருப்புகழ்களால் தம்காலம் முழுவதும்
துதித்த தண்டபாணி சுவாமிகள் என்று வழங்கும் முருகதாசர் ஒருகால் வடலூர்க்கு வந்து வள்ளலாரிடம்
சிலநாள் தங்கி முருகரது திருவருளை வியந்து கொண்டிருந்தனர். முருகதாசர் தாம்பாடிய திருப்புகழ்களை
வள்ளலார்க்கு எடுத்துக் காட்டிக்கொண்டேவர, வள்ளலார் ஏடுகளை ஒருசிறிது தள்ளினர். அதனால் அலட்சியங் கொண்டதாக அவர் எண்ணவே, வள்ளலார் முருகதாசரை அருணகிரிதாசரே
என்று சிறப்பித்துப் பேசினர். எனினும் அவர்க்குத் திருப்தியில்லை. ஏடுகளைத் தள்ளினதால் கணக்கிலாமற்பாடிக்
கொண்டிருப்பதோடு அனுபவஞானம் இருத்தல் வேண்டும் என்று வள்ளலார் எண்ணினரோ என்று அவர்
ஐயமுற்றனர். பின் ஒருகால்
முருகத் தியானத்தி லிருந்தபோது வள்ளலார் தாயுமானவரே யென்று அவர்க்கு விளங்கியது. ஒருநாள் முருகதாசர் உஷ்ணவாயுவால் சிறிது அபக்குவம் அடைய, வள்ளலார் கேட்க, வினையால் விளைந்தது என்றனர். வள்ளலார், "இங்கேயும் வினையுண்டோ?"
என்று முருகதாசர்க்குக் கூறிச் சந்நியாசிகளை
வினைதாக்குமோ என்பதைக் குறித்துப் பிரசங்கஞ் செய்தார். வள்ளலாரைக்குறித்து வினாப்பதிகமும்
அனுபவப் பதிகமும்பாடி ஜீவகாருணிய மூர்த்தியாகிய முருகதாசர் தமது நூல்களில் பல விடத்தும்
ஜீவகாருணியம் விளக்கவந்த வள்ளலாரைப் புகழ்ந்திருக்கின்றனர். (பிரபந்தத்திரட்டு - அ.திருநாவுக்கரசு பதிப்பு - பக்கம் - 129)
இவர் தனது தலப் பயணத்தின்போது புதுச்சேரி வேலாயுதம் பிள்ளை - திருமலையம்மை
என்னும் இணையருக்கு மூன்றாவது மகளாகப் பிறந்த சுந்தரம்மை என்பவரை வாழ்க்கைத் துணையாக
ஏற்றார். சுவாமிகள் நெல்லையில் இருந்தபோது அங்கே தவச்சாலை தொடங்க, இலங்கைக்குச் சென்று,
கண்டி கதிர்காமம் போன்ற இடங்களில் சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி பொருளீட்டினார். பழனிமலை
அடிவாரத்தில் ஆவினன்குடியில் சரவண பொய்கைக்கு அண்மையில் சுவாமிகள் ஒரு மடம் அமைத்தார்.
பல தலங்களுக்கு
சென்ற பின், புதுச்சேரிக்கு அருகிலுள்ள மதுரப்பாக்கம் வந்த சுவாமிகள், அங்கிருந்து
விழுப்புரத்திற்கு வடமேற்கே மூன்று மைல் தொலைவில் உள்ள திருவாமத்தூரில் தங்கினார்.
தற்காப்பிற்கு பசுக்களுக்கு கொம்பு வேண்டியபோது, "கவி பாடுவதை பின்னர் பார்க்கலாம்;
அருளைப் பெறும் முயற்சியில் முதற் கண் ஈடுபடுக" என ஈசன் அருளினார். "உனதருளைப்
பெறுகின்ற வரையிலும் இவ்வூர் எல்லையைத் தாண்ட மாட்டேன்" என்று ஆறெழுத்து மந்திரத்தை
மனதில் செபிக்கத் தொடங்கினார். அப்பொழுது விழுப்புரத்திலே வட்டாச்சியராக பணியாற்றிய
பணியாற்றிய சண்முகப் பிள்ளைக்கு வந்த கடுமையான வயிற்று வலியை சுவாமிகள் போக்கியதால்
மனம் மகிழ்ந்த சண்முகம் பிள்ளை திருவாமத்தூரில் புறம்போக்கு நிலங்களை இனாமாக வழங்க
ஏற்பாடு செய்தார்.
அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க,
பலருடைய ஒத்துழைப்பால் திருவாமத்தூரில் கெளமார மடாலயம் எழுப்பினார். விளம்பி ஆண்டு
பிறந்தது. சுவாமிகள் ஐயாயிரம் பிரபந்தம் என்னும் நூலை இயற்றத் தொடங்கினார். பாடல் பாடுவதிலும்
இறை வழிபாட்டிலும் கழித்த சுவாமிகளின் உடலில் சூடு மிகுந்து உடல்
தளர்ந்தது. பல்லாயிரம் பாடல்கள் பாடி தொண்டு செய்த தண்டபாணி
சுவாமிகள் விளம்பி ஆண்டு ஆனித் திங்கள் 23-ஆம் நாள் (1898-ஆம் ஆண்டு) செவ்வாய் கிழமை
திருவோண நட்சத்திரத்தில் வீடுபேறடைந்தார். அப்போது சுவாமிகளுக்கு 59 வயதாகும். சரவணபுரம்
கெளமார மடாலயத்தின் தலைவர் தவத்திரு இராமானந்த சுவாமி, தம் குருவின் உடல் நல்லடக்கம்
செய்யப்பட்ட இடத்தில் தண்டபாணி கடவுள் திருவுருவத்தினை பிரதிஷ்டை செய்தார். நாள் வழிபாடுகள்
நடைபெறவும் ஏற்பாடு செய்தார். இவ்வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தேவார மூவர், அருணகிரிநாதருக்குப்
பிறகு அதிகமான பதிகங்கள் பல பாடிய பெருமை தண்டபாணி சுவாமிகளுக்கு உண்டு. முருகப்பெருமான்
விநாயகர், சிவன், அம்பிகை, திருமால், சூரியன் மற்றும் கிராம தெய்வங்கள் மீது சமயாதீத
நிலையில் ஒரு லட்சம் பாடல்களுக்கும் மேல் கவி புனைந்துள்ள இவர், முருக பெருமான் மீது
ஊடல் கொண்டு கடலிலும், தீயிலும் எறிந்தது போக, தற்போது உள்ளவை 49,722 பாடல்களே. இதில்
பாதிக்கு மேல் அச்சில் வராமல் சுவடியிலேயே, கோவை சரவணம்பட்டி கவுமார மடாலயப் பாதுகாப்பில்
உள்ளன.
நன்றி: தவத்திரு
குமரகுருபர சுவாமிகள், சிரவையாதீனம், சரவணம்பட்டி, கோவை. 98421-66373 / 9842260609
"பெரியோர்கள் எழுந்தருளி யிருக்கும் இடங்களுக்குச் செல்லுதல்" என்பது, வள்ளலார் அருளிய இந்திரிய ஒழுக்கத்தில்
ஒரு கூறுஆகும். எனவே இப்படிப்பட்ட பெரியோர்கள் அடைந்த இடத்திற்கு சென்றுவருவது நல்லது
DECEMBER-2015
பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள்
பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகளின் தந்தையார் பெயர்
கந்தசாமி ஐயா, தாயாரின் பெயர் அர்த்தநாரி அம்மை. இவர் ஆந்திர மாநிலம்
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள உறவுகொண்டா
அல்லது உருவிகொண்டா என்றழைக்கப்படும் ஊரில் கந்தசாமி ஐயாவிற்கும் அர்த்தநாரி அம்மையாருக்கும்
மகனாக பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் பிறந்தார்.
தாம் வளர்ந்ததும் ஆந்திராவை விட்டு தமிழ்நாடு மாநிலம்
கோவையில் உள்ள மஞ்சம்பாளையத்துக்குக் குடிபெயர்ந்து இவ்வூரில் வசிக்கத் தொடங்கினார்.
பெல்லாரியில் செள்ளகுரிக்கி என்கிற இடத்தில் வசித்து வந்த எரிநாதா சுவாமிகளின் சீடராக
சில காலம் இருந்தார். அவரது உத்தரவுப்படி கும்பகோணம் வந்தடைந்தார். அங்கே பாடகச்சேரி
என்னும் ஊரில் பல ஆண்டுகள் தங்கியதால் இவருக்கு இப்பெயர் வந்தது.
நேபாள மன்னரும் பைரவ உபாசகருமான ராஜாராம் சுவாகிகள்,
இவருக்கு உபதேசம் செய்து வைத்தார். பாடகச்சேரியில் தாம் இருந்த காலத்தில் சுவாமிகள்
பைரவ வழிபாட்டை தினமும் நடத்தி மகிழ்வார். பைரவ வழிபாடு என்பது ஏதோ பூஜை, புனஸ்காரம்
என்று நினைத்துக் கொள்ளக்கூடாது. தினமும் ஏராளமான நாய்களைக் கூப்பிட்டு சாப்பாடு போடுவதுதான்
அது! சுவாமிகளின் கருத்துப்படி இவை எல்லாம் நாய்கள் அல்ல! நாய் உருவில் இருக்கும் தேவர்கள்
என்பாராம் சுவாமிகள். பைரவ வழிபாட்டுக்கு முதல் நாள் மாலை பாடகச்சேரிக்கு அருகில் இருக்கும்
ஆலங்குடி, செம்மங்குடி, புளியங்குடி, அம்ருதவல்லி போன்ற கிராமங்களுக்குச் சென்று அங்கு
இருக்கும் நாய்களுக்குத் தகவல் சொல்லிவிட்டு வருவாராம் சுவாமிகள்!
மறுநாள் மதியம் சுமார் முந்நூறு பேருக்குச் சமையல்
தயாரிக்கச் சொல்வார். வடை, பாயாசம் என்று சமையல் அமர்க்களப்படும். 'இவ்வளவு பேருக்கு
சாப்பாடு சொல்கிறாரே?, யார் வந்து சாப்பிடப் போகிறார்கள்? இந்தப் பகுதியே பொட்டல் காடாயிற்றே?
என்று சமையல் செய்யும் அன்பர்கள் ஆரம்பத்தில் குழம்பினார்கள். பின்னர்தான், விவரம்
அறிந்து வியப்படைந்தார்கள். சமையல் முடிந்ததும், அந்த இடத்தில் வாழை இலையை விரித்து,
மனிதர்களுக்குப் பரிமாறுவதுபோல சமைக்கப்பட்ட அனைத்து பதார்த்தங்களும் வைக்கப்படும்.
தன் கையில் வைத்திருக்கும் ஒரு கோலால் தரையைத் திடீரென்று
சுவாமிகள் தட்டிய மாத்திரத்தில், எங்கிருந்துதான் வருமோ தெரியாது, நூற்றுக் கணக்கில்
நாய்கள் வந்து இலையின் முன்பாக சமர்த்தாக அமர்ந்து கொள்ளும். இதை வேடிக்கை பார்க்க
வந்திருக்கும் கிராம வாசிகளுக்கு இவை எல்லாம் நாயாகத்தான் தெரியுமே தவிர, சுவாமிகளுக்கு
மட்டும் அனைத்தும் மனிதர்களாகவே தெரிவார்கள்.
எத்தனை
இலைகள் அங்கு போடபட்டனவோ அத்தனை இலைகளுக்கும் சரியாக நாய்கள் அங்கு வந்து அமர்ந்திருந்து
உண்டுவிட்டு செல்லும். ஒரு இலை கூடவோ அல்லது குறையவோ இருக்காது என்பது அதிசயம்.
தங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு வேண்டியும் நோய்கள்
அகல வேண்டியும் சுவாமிகளிடம் ஏராளமான பக்தர்கள் வருவார்கள், 'ஆபத்சகாயம்...' என்று
சொல்லி அவர்களது நெற்றியில் திருநீறு பூசுவார். அவ்வளவுதான், அடுத்த நொடியே அவர்களைப்
பீடித்திருந்த பிணிகள் பஞ்சாகப் பறந்துவிடும்.
தமது 12-வது வயதில் சுவாமிகள் பாடகச்சேரிக்கு வந்தார்.
எரிதாதா சுவாமிகளின் அறிவுரைப்படி இங்கே வந்ததும் பட்டம் என்கிற கிராமத்தில் மாடு மேய்க்கும்
பணியை மேற்கொண்டார். பாடகச்சேரியில் இருந்து 3 கி.மீ தொலைவில் இருக்கும் பட்டம் என்ற
கிராமத்தில் இருந்தபோதுதான் இவருக்கு, சூட்சும ரூபமாக வடலூர் வள்ளல்பிறான் வந்து ஞான
உபதேசம் செய்து வைத்தார். நவகண்டயோகம் சுவாமிகளுக்கு அப்போதுதான் சித்தியானது. அதாவது
உடலை ஒன்பது பாகங்களாக துண்டு துண்டாக்கும் ஒரு சித்துவேலை இது.
சுவாமிகள், கடைசி காலத்தில் தான் இருந்த கும்பகோணம்
முத்துப்பிள்ளை மண்டபத்திலேயே சமாதியாக வேண்டும் என்று விரும்பினார். ஆனால், அவரின்
சென்னை பக்தர்கள் சிலர் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 1949-ஆம் வருடம்
அம்பாளுக்கு உரிய ஆடிப்பூர தினத்தில் திருவொற்றியூரில் ஜீவ சமாதி அடைந்தார்.
சுவாமிகள் தன் பக்தர்களுக்கு அருளிய உபதேசம் என்ன
தெரியுமா?
"நான் மறைந்தாலும்,
என்னை நம்பி இருப்பவர்களுக்கு நான் என்றும் துணையாக இருப்பேன், என்னை நம்பாதவர்களுக்கும்
நம்பிக்கை வரும் பொருட்டு உதவிகள் செய்து வருவேன்!"
தி.ம.இராமலிங்கம்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.