Saturday, December 26, 2015

ஆருத்ரா தரிசனம்



"சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
ஆருத்ரா தரிசனம்

DECEMBER - 2015

ஆருத்ரா தரிசனம்

     13-12-1867 - ஆம் வருடம் வேட்டவலம் ஜமீனைச் சேர்ந்த சேது என்பவர் யாத்திரை செய்யும் காலம், அடிகள் தருமச்சாலையில் தங்கியிருந்ததை அறிந்து அடிகளைக்கண்டு வணங்கினார். அன்றைய தினம் மார்கழி மாதம் திருவாதிரை தினம். அடிகளின் கூட இருந்த அன்பர்கள் பலர் சமயப்பற்று அதிகம் உள்ளவர்களாக இருந்த காரணத்தால் பலர் காலையிலேயே சிதம்பரம் நடராஜப் பெருமானின் ஆருத்ரா தரிசனம் பார்க்கச் சென்றுவிட்டார்கள். தருமச்சாலை தரிசனம்தான் இறை தரிசனம் என்று வள்ளல் பெருமான் உணர்த்துவதை அவருடன் இருந்த சமய பற்றாளர்கள் உணரவில்லை. அதனால் மற்றசில அன்பர்கள் தருமச் சாலையிலேயே இருந்தாலும் அவர்கள் மனம் ஏனோ தில்லை நடராஜப் பெருமான் ஆருத்ரா தரிசன காட்சியின் நினைவாகவே இருந்தார்கள். இதை அறிந்த அடிகள் அன்று சிதம்பர நடராஜன் ஆருத்ரா தரிசனம் நடக்கும் அதே சமயம் தருமச்சாலையில் ஒரு துணியை திரைபோல் கட்டி, அத்திரையில் சிதம்பரத்தில் நடந்த நடராசப் பெருமானின் அத்தனை நிகழ்ச்சிகளையும், அபிசேகங்களையும், ஆருத்ரா தரிசனத்தையும் இருந்த இடத்திலிருந்தே காட்டினார்கள்.



அன்றைக்கே நேரடி ஒளிபரப்பு கலர் டி.வி.யில் பார்ப்பதுபோல் பார்த்தாகிவிட்டது. இதைக் கண்ட வேட்டவலம் ஜமீன்தார் மற்றும் பலரும் ஆச்சரியத்தில் அதிசயித்துப் போனார்கள். அடிகள் இதுபோன்ற பல அற்புதங்களை வெகு சுலபமாக செய்து காட்டினார்கள். இதைக் கேள்விபட்ட சிதம்பரம் தீட்சிதர்கள் அடிகள் மீது பெரும் பொறாமையும் கோபமும் அடைந்தார்கள்.
     
      இதைவிட என்ன அவலம் என்றால்..., நாமெல்லாம் இன்றைய பொழுது வள்ளலாரின் காட்சிக்காக காத்திருக்கிறோம். ஆனால் அன்று அவருடன் இருக்க பாக்கியம் பெற்றவர்கள், அவரை புரிந்துக்கொள்ளாமல், அவரைவிட பெருந்தெய்வம் எங்கோ இருக்கிறது என்று இவரை விட்டுவிட்டு அங்கு சென்றுவிட்டனர். தம்முடன் இருக்கும் சிலராவது நிம்மதியடையட்டும் என்றும் மக்கள் கடவுள் என்று நம்பக்கூடிய அந்த தரிசனம் இதோ எனது கை அசைவில் அடங்கும் என்றும் மனம் நொந்தப்படியே, அந்த ஆருத்ரா காட்சியை அங்குள்ளோருக்கு தமது அருள் செயலால் காட்டினார். "கடைவிரித்தேன் கொள்வாரில்லை" என்பதை வள்ளல் பெருமான் தமது 44-ஆம் வயதிலேயே  கண்டுகொண்டார். 

      வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்களின் பிரபந்தத்திரட்டு நூலில் இந்த அற்புத நிகழ்ச்சியினை மிக சுருக்கமாகவே கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

      ஆனித் திருமஞ்சனத்திற்கும் திருவாதிரைத் திருவிழாவிற்கும் வெளியூர் அன்பர்கள் பலர் வள்ளலாரை ஆண்டுதோறும் சிதம்பரத்துக்கு அழைத்துக்கொண்டு போவது வழக்கம். ஒரு சமயம் கூட வருவதாக உத்தேசித்திருந்த பலரும் வள்ளலார் உற்சவத்திற்கு விரைவில் புறப்படாமையால் ஒவ்வொருவராக உற்சவம் நெருங்க நெருங்கச் சிதம்பரத்திற்குச் சென்றனர். திருவிழாக் கடைசி நாள் வரையும் காத்திருந்த சிலர் சிதம்பர தரிசனம் தவறியதே என்று மனம் வருந்தினர். அவர்களது பேரவாவை நிறைவேற்றும் பொருட்டு வள்ளலார் சத்திய தருமச்சாலையில் மத்தியில் திரைபோடச் செய்வித்துத் திரைக்குள்ளே சென்று தரிசனம் செய்யும்படி ஏவினர். அவ்விதமே அவ்வன்பர்கள் சிதம்பர தரிசனம் கண்டு களித்து மாறிலாப் பெருமகிழ்ச்சியில் மலர்ந்தார்கள். (.மு.க. பிரபந்தத்திரட்டு-அ.திருநாவுக்கரசு   பதிப்பு-பக்கம்-113)
 ====================================================================================
தி.ம.இராமலிங்கம்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.