Saturday, December 26, 2015

ஆசிரியரின் தலையங்கம் - OCTOBER-2015



“சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
ஆசிரியரின் தலையங்கம்

OCTOBER - 2015

வள்ளலார் வருகை 

      "நூற்று தொன்னூற்று இரண்டு வயதிலும் உயிரோடு இருந்துக்கொண்டு, வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி தமது நூற்று தொன்னூற்று மூன்றாம் பிறந்த நாளை எதிர்நோக்கும் திருவருட்பிரகாச வள்ளற்பெருமானுக்கு, பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் அளவிற்கு இவ்வுலகில் அவரைவிட வயதில் மூத்தோர் யாரும் இல்லை எனலாம்."  

      இப்போது நான் கூறின மேற்கண்ட வார்த்தைகள் அளவு குறிக்க முடியாத இனி வரப்போகின்ற காலங்களிலும் பொருந்தும். இவ்வுலகில் உள்ள தெய்வங்களுக்கோ, அருளாளர்களுக்கோ, ஞானிகளுக்கோ, தலைவர்களுக்கோ, மனிதர்களுக்கோ கொண்டாடப்படுகின்ற பிறந்தநாள் போன்றது அல்ல, வள்ளலாரின் பிறந்தநாள். ஏனெனில் மேற்குறிப்பிட்டவர்களுக்கெல்லாம் பிறந்த நாள் வருவது போன்று இறந்த நாளும் வரும். ஆனால் வள்ளற்பெருமானுக்கு பிறந்த நாள் மட்டுமே மீண்டும் மீண்டும் வரும். இறந்த நாள் என்ற ஒன்று எக்காலத்திலும் வரப்போவதில்லை, என்பது அவரது உயரிய சிறப்பு.  

      ஓதாமல் உணர்ந்த வள்ளற்பெருமான், தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை படிக்கவும், அம்மொழிகளில் செய்யுள் இயற்றவும் வல்லமை உடையவராக இருந்தார். வள்ளற்பெருமான் உருவுடன் உலாவிய காலத்தில் ஆதீனத் தலைவர்களைப் புகழ்ந்து செய்யுள்கள் இயற்றிச் சன்மானம் பெறாத புலவர்களோ, வித்வான்களோ இல்லை என்றே சொல்லி விடலாம். (உதாரணம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை) ஆனால் வள்ளற்பெருமான் தமது வறுமையிலும் கூட இறைவனைத் தவிர வேறு யாரையும் பாடி பரிசல் பெற்றது கிடையாது.  

      யாழ்ப்பாணம் ஆறுமுகம் பிள்ளைக்கு "நாவலர்" பட்டமும், மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு "மஹா வித்வான்" பட்டமும் திருவாவடுதுறை ஆதீனம் வழங்கி கெளரவித்தது. ஆனால் அதே காலக்கட்டத்தில் கருங்குழி, வடலூர், மேட்டுக்குப்பம் பகுதிகளில் சுத்த சன்மார்க்கக் கொள்கையின்படி புதிய ஜீவகாருண்ய ஒழுக்கம், மரணமிலாப் பெருவாழ்வு, ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை, ஒளி வழிபாடு, சாதி சமய மத சாத்திர ஒழிப்பு என்று சங்கம், சாலை, சபை மூலமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த வள்ளற்பெருமான் என்பவரைச் சைவ மடங்கள் மதித்து ஏற்கவில்லை. வள்ளற்பெருமானும் மடங்களின் பக்கம் தலைவைத்துப் படுக்கவும் இல்லை. 

      வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்கள் ஒரு முறை மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களை சந்தித்தபோது, ச.மு.க. அவர்களின் கையிலிருந்த திருவருட்பா நூலை வாங்கி பார்த்துவிட்டு "காட்டுப் பிரதேசங்களென்று நாம் சொல்லும், அங்கேதான் ஜீவகாருண்யமும் அன்பும் நிரம்பியிருக்கின்றன. நாகரிகம் அதிகமாக ஆகச் சுயநலமும் அதிகமாகின்றது" என்று மீனாட்சிசுந்தரம் பிள்ளை தன்னோடு உள்ள மடத்தாருக்கு குறிப்பிட்டார். அன்று வடலூரை "காட்டுப் பிரதேசம்" என்றே மற்ற வித்வான்கள் குறிப்பிட்டனர்.  

      பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சராசரி வித்துவானுக்கும் கூடுதலான புலமையை வள்ளற்பெருமான் பெற்றிருந்தார். அவர் ஒரு வித்துவானாகவே காலத்தை கடத்தியிருந்தால், அந்த நூற்றாண்டில் மஹாவித்துவான் என்ற பெயரைத் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை பெற்றிருக்க முடியாது. அன்று வித்துவான்கள் கையாண்ட வழக்கமான யாப்பு வகைகளை வள்ளற்பெருமானும் கையாண்டார். அகவற்பாவிலிருந்து கும்மிப்பாட்டு வரை அவர் கையாளாத பாவகைகளே இல்லை. 

      இவ்வாறு இறை பாடல்களை அருள் பாடலாகப் பொழிந்து, அருள்தேகம் பெற்று தற்போது தமது 193-ம் பிறந்தநாளை கொண்டாட இருக்கும் வள்ளற்பெருமானின் வாழ்த்துக்கள் இவ்வுலக உயிர்கள் அனைத்திற்கும் சென்று சேரட்டும். இறவா நலம் மனிதர்களை ஆட்கொள்ளட்டும். சன்மார்க்கக் குழந்தைகளே மண்ணில் பிறக்கட்டும். சுத்த சன்மார்க்கம் உலகை ஆளட்டும். எல்லா உயிர்களும் இன்புற்று வாழட்டும்.


காந்தியின் கருணை 

      ஆங்கில நாட்டாருக்கு அடிமைபட்டுக் கிடந்த நமது இந்தியாவை ஜீவகாருண்ய வழியில் மீட்டு சுதந்தரம் வாங்கி கொடுத்தவர் காந்திஜி. சுதந்தரம் பெறுவது முக்கியமல்ல, அதனை எவ்வழியில் நாம் பெற்றோம் என்பதே இங்கு கவனிக்கத்தக்கது. ஜீவகாருண்ய வழியில் நமக்கு சுதந்தரத்தை பெற்றுத் தந்ததால்தான் "காந்திஜி" என்பவர் "மகாத்மா" என்றும் "இந்திய நாட்டின் தந்தை" என்றும் இவ்வுலகம் கொண்டாடுகின்றது. 

      வருகின்ற அக்டோபர் இரண்டு காந்தியின் 147-வது பிறந்த நாளாகும். அவரது பிறந்த நாளை தேசிய விடுமுறையாக இந்தியா கொண்டாடுகின்ற அதே வேளையில் "சர்வதேச அஹிம்சை தினமாக" இவ்வுலகமும் கொண்டாடுகின்றது. காந்திஜியைத் தவிர வேறு எந்த ஒரு நாட்டின் தலைவர்களின் பிறந்தநாளும் உலக அளவில் கொண்டாடப்படுவதில்லை. ஒரு இந்தியருக்கே அப்பெருமை கிடைத்துள்ளது என்றால் காந்திஜியின் கருணை ஜீவகாருண்யமாக இருந்ததால்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

       நான் மது அருந்த மாட்டேன், மாமிசம் உண்ண மாட்டேன், பெண் சுகத்தை நாடமாட்டேன் என்ற மூன்று தர்மங்களையும் மீறமாட்டேன் என தாம் படிப்பதற்காக இந்தியாவை விட்டுக் கடல் கடந்து செல்லுகையில், தமது தாயிடம் காந்திஜி அவர்கள் சத்தியம் செய்து கொடுத்தார். இந்த சத்தியத்தை இந்தியா திரும்பும்வரை அவர் எண்ணற்ற துயரங்களுக்கு இடையிலும் காப்பாற்றினார் என்பதை அவரது "சத்திய சோதனை" நூல் கூறுகின்றது. 

      இந்த சுய கட்டுப்பாடுதான் அவரை சுதந்தரப் போராட்ட வீரராக மாற்றியது. தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் ஆனார். தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால், 1894 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கி, அதற்கு அவரே பொறுப்பாளரானார். அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்ட மகாத்மா காந்தி, இந்தியா திரும்பியதும், ஆங்கிலேயர்களிடமிருந்து நமது நாட்டை மீட்க அஹிம்சை வழியில் போராடினார். 

      அதன் பின்னர், இந்தியா திரும்பிய அவர், ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதன் நோக்கமாக, 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார்.  

      1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினைத் தொடங்கிய அவரின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில், காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது. 

      தற்போது சுதந்தர இந்தியாவில் இருக்கும் நாம், அடிமை இந்தியாவின் வலியினை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வலியினை உணர்ந்தவர்கள், அன்றைய முப்பது கோடி இந்திய மக்கள். அவர்களின் தியாகத்தில்தான் இன்றைய நூற்று இருபது கோடி இந்திய மக்களும் நிம்மதியாக வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றோம் என்பதனை புரிந்துக்கொண்டு நாமெல்லாம் மிகவும் நேர்மையாகவும், ஜீவகாருண்ய முள்ளவர்களாகவும், வாய்மை உள்ளவர்களாகவும் நடந்துக்கொள்வதே, காந்தியின் பிறந்த நாளுக்கு நாம் செய்யும் மரியாதையாகும். வாழ்க இந்தியா! வளர்க இந்தியா வழியில் உலகம்.

தி.ம.இராமலிங்கம்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.