Saturday, December 26, 2015

"சன்மார்க்க விவேக விருத்தி" கண்மூடிப் பழக்கம்



"சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
கண்மூடிப் பழக்கம்

AUGUST - 2015

சகுனம் பார்ப்பது சரியானதல்ல
       'முன்னோர்கள் செய்தார்கள்' என்பதற்காகவும் காலங் காலமாகச் செய்யப் பட்டு வருகின்றன என்பதற்காகவும் பெரும் பாலானவர்கள் செய்கிறார்கள் என்பதற்காகவும் மூடப் பழக்கங்களை ஒரு போதும் நியாயப் படுத்தக் கூடாது.
       ஏதேனும் காரியமாக வெளியில் புறப்படும்போது 'எங்கே போகிறீர்கள்?' என்று யாராவது கேட்டு விட்டால் போகிற காரியம் நடக்காது என்று நம்புவதும் - நடந்து செல்லும்போது காலில் ஏதேனும் தடுக்கினால் சிறிது நேரம் நின்று விட்டுச் செல்வதும் -போகிற வழியில் பூனை குறுக்கிட்டால் போகிற காரியம் தடங்கல் ஏற்படும் என்று கருதுவதும் -விதவைப் பெண்கள் எதிரில் வந்தால் அபசகுனம் என்று நினைப்பதும் தவறு.
       நாம் நமது வேலையாகப் போகிறோம். பூனை தனது வேலையாகப் போகிறது. நமது வேலையைக் கெடுப்பது பூனையின் வேலையல்ல. பேசிக் கொண்டிருக்கும் போது சுவர்க்கடிகாரம் மணி அடித்தாலோ பல்லி சப்தமிட்டாலோ சொல்வது உண்மை என்று கடிகாரத்தையும் பல்லியையும் சாட்சிகளாக்குவதும் - 'பாலன்ஸ்' தவறி பல்லி விழுந்துவிட்டால் பதறித் துடித்து காலண்டரைத் திருப்பி 'பல்லி விழும் பலன்' பார்ப்பதும் மூட நம்பிக்கை ஆகும்.
            நல்லதும் கெட்டதும் நமது வினைப்பயனால் எற்படுகின்றது. நல்லது என்று நாம் நினைத்திருந்த காரியம் நடக்காமல் போகலாம். இதை விடச் சிறந்ததை தருவதற்காகவோ அல்லது இதன் மூலம் கெடுதி ஏற்படலாம் என்பதற்காகவோ இறைவன் தடுத்திருக்கலாம்.  நாம் விரும்பாத ஒன்று நடந்திருக்கலாம். நமக்கு அது தான் சிறந்தது என்று இறைவன் நாடியிருக்கலாம். அல்லது இதைவிடப் பெரிய தீமையிலிருந்து நாம் காப்பாற்றப் பட்டிருக்கலாம். நடந்து முடிந்த அனைத்து காரியங்களையும் இப்படித்தான் அர்த்தப் படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர சகுனத்தின் அடிப்படையில் நடந்ததாகவோ நடக்காமல் போனதாகவோ ஒரு போதும் நம்பக் கூடாது.

SEPTEMBER - 2015

மரணம் மனிதனுக்கு இல்லை

இம்மண்ணில் பிறந்த எல்லா உயிர்களையும் மரணம் என்ற பிணியானது இறுதியில் ஆட்கொண்டுவிடுகின்றது. "பிறக்கும் எல்லா உயிரும் இறந்தே ஆகவேண்டும். இறக்கும் எல்லா உயிரும் பிறந்தே ஆகவேண்டும்" என்பது இயற்கை பேருண்மையாகும். இறக்கும் எல்லா உயிரும் பிறந்தே ஆகவேண்டும் என்பதில் வள்ளற்பெருமானும் ஒப்பு கொள்கிறார். ஆனால் பிறக்கும் எல்லா உயிரும் இறந்தே ஆகவேண்டும் என்பதில், மனித உயிர்களுக்கு மட்டும் அதில் விதிவிலக்கு உண்டு என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் தமது அனுபவத்தின் மூலமும் நிரூபித்துக் காட்டுகின்றார் வள்ளற்பெருமான்..

எனினும் மனிதர்களாகிய நாம், எதிர்காலத்தில் நமக்கு மரணம் உண்டு என்றே நம்பியுள்ளோம். காரணம் நாம் வள்ளற்பிரான் கூறிய சன்மார்க்க சங்கத்தை அடையவில்லை, சன்மார்க்கிகளாக ஆகவில்லை. எனவே நமது மூடநம்பிக்கையின் படி நாம் ஒரு நாளில் இறக்கப்போகின்றோம். "நாம் இறப்போம்" என்கிற அந்த கண்மூடிப் பழக்கத்தை அறவே விடவேண்டும் என்கிறது சுத்த சன்மார்க்கம். இறந்த பின்பு நீங்கள் எங்கே செல்வீர்? ஏது புரிவீர்? அந்தோ அந்த இறப்பை தடுக்கலாம் இங்கே வாரீர்... வாரீர்! என்று அழைக்கும் குரலை நம்புங்கள். "என்னால் உங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம்" என்ற அழுத்தமான குரலை நம்புங்கள்.
கண் திறந்து அழுத நாம், பிறர் அழுவ, கண்மூடிப்போகும் கண்மூடிப் பழக்கத்தை விடவேண்டும். அதற்கு இரக்கமே உருவாக இருக்க முயலவேண்டும். இரக்கம் இருந்தால் இறப்பு இல்லை, என்பதே சுத்த சன்மார்க்கம். திருவருட்பிரகாச வள்ளலார் என்கிற சிதம்பரம் இராமலிங்கம் பிறந்த இந்த அக்டோபர் ஐந்தாம் தேதியில், மரணம் என்கிற அந்த கண்மூடிப் பழக்கம் மண்மூடிப் போகவேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் சபதமெடுப்போம். அதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் நமக்கு உறுதுணையாக இருப்பார். மீண்டும் சொல்கிறேன், மரணம் மனிதனுக்கு இல்லை.   

OCTOBER - 2015

துலுக்க சாமந்தி

இந்து மதத்தினர் தங்களது வீடுகளில் பலதரப்பட்ட சுவாமி படங்களையும் சிறியவகை சுவாமி சிலைகளையும் வைத்து வழிபடுவர். அப்படங்களுக்கும் சிலைகளுக்கும் தினமும் பூக்களால் அலங்கரித்தும் வழிபடுவர். (இது பக்தி மார்க்கம். சுத்த சன்மார்க்கம் என்பது ஞான மார்க்கம், எனவே சுத்த சன்மார்க்கத்தில் இப்படிப்பட்ட அலங்கரிக்கும் புற வழிபாடு கிடையாது)

பூக்கடைகளில் சாமந்திப்பூ அதிக அளவில் விற்பணைக்கு வரும். அதனையே பலர் வாங்கி தங்களது வீடுகளிலுள்ள சுவாமி படங்களுக்கு வைப்பர். இந்த சாமந்தி பூக்களில் சில ரகங்கள் உண்டு. இந்த ரகங்கள் எல்லாம் தற்போது விஞ்ஞான அறிவைக்கொண்டு நாம் உருவாக்கியதுதான். இதில் துலுக்க சாமந்தி என்ற வகைப்பூவும் உண்டு. இப்பூ மற்ற வகை சாமந்திப்பூவை விட மிக அழகாகவும், அடர்த்தியாகவும், வாசம் உள்ளதாகவும், பெரியதாகவும் இருக்கும். இவ்வகைப்பூ மற்ற வகை சாமந்திப்பூவின் விலையைவிடக் குறைவாகவும் இருக்கும்.

ஆனால் இப்பூவினை வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் விரும்பமாட்டார்கள். துலுக்க சாமந்தியை சுவாமிப்படத்திற்கு வைக்கக்கூடாது என்று இதனை வாங்கவே மாட்டார்கள். ஏன் என்று கேட்டால், யாரும் இதனை வைப்பதில்லை, அதனால் நாமும் வைப்பதில்லை என்ற பதில்தான் வரும். பூ மாலை செய்ய இந்தப்பூக்களையே பெரும்பாலும் உபயோகிப்பர். அதனால் பிணத்திற்கு போட வாங்கப்படும் மாலைகளில் இவ்வகைப்பூ காணப்படுவதால், நாளடைவில் இதனை வீட்டு உபயோகத்திற்கு வாங்க மறுத்தார்கள் போலும்.

சுவாமி படங்களில் வைத்து வழிபட அனைத்து வகைகளிலும் இந்தப் பூ ஏற்றதே. பிரபஞ்ச சக்தியால் இப்பூமியில் விளையக்கூடிய எந்தப் பூவும் பூசைக்கு ஏற்றதே. துலுக்க சாமந்திக்கு நமது மனத்திற்கு சக்தியை கொடுக்கும் வல்லமை உண்டு. நாம் எந்த வகைப் பூக்களையும் வெறுக்கக்கூடாது. ஒவ்வொரு வகை பூவுக்கும் ஒவ்வொரு வாசனை, வேறுபட்ட அழகு உள்ளது. நமக்கு பிடித்தமான எதனையும் பூசையில் வைத்து வழிபடலாம். இறைவன் நமது அன்பைத்தான் எதிர்பார்ப்பான், அலங்காரத்தை அல்ல.

. NOVEMBER - 2015
விதவை
நாம் காலையில் வேலைக்குச் செல்லும்போதோ அல்லது வெளியில் எங்கேனும் செல்லும்போதோ, வீட்டை விட்டு வெளியில் வந்து நமது வாகனத்தை எடுத்துக் கிளம்பும்போதோ அல்லது நடக்கும்போதோ நமக்கு எதிரில் விதவைப் பெண் வர நேர்ந்தால் அவ்வளவுதான் நமக்கு அதுவரை இருந்த உற்சாகமெல்லாம் மலை ஏறிவிடும்.

உடனே திரும்ப வீட்டுக்கு வந்து சிறிது நேரம் அமர்ந்துவிட்டு தண்ணீர் அருந்திவிட்டு அந்த விதவைப் பெண்ணை சபித்துவிட்டு, மீண்டும் ஒருமுறை வீதியை ஜாக்கிரதையாக நோட்டமிட்டு விட்டு கிளம்பிச் செல்வோம் இல்லையா.

இல்லை... இல்லை... என்று சொல்பவர்கள் சன்மார்க்கிகள். ஆம் எனச் சொல்பவர்கள் கண்மூடிப் பழக்கத்தில் சிக்கியுள்ளார்கள். புறப்படும்போது விதவைகளைக் கண்டால் அன்றைய காரியங்கள் நிறைவேறாது அல்லது ஏதேனும் ஆபத்து நேரிடும் என்றெல்லாம் நமது முன்னோர்கள் நம்மை பழக்கப்படுத்தி விட்டனர். இது பெண்களை அடிமைப் படுத்தும் அல்லது அசிங்கப்படுத்தும் கொடூரமான சமூக சீர்கேட்டு வழக்கமாகும். இப்பழக்கத்தினை தொடர்ந்து காப்பாற்றுபவர்களும் இந்த பெண்ணினமே என்றால் அது மிகை இல்லை. அதாவது பெண்ணிற்கு பெண்ணே எதிரி என்பதுபோல!

விதவைப்போல விதவன் என்பவனுக்கும் அதே நிலைப்பாடு பொருந்தும் அல்லவா? விதவன் என்பவனின் அடையாளங்கள் இந்த சமூகத்தில் இல்லாமல் போனது எப்படி?

பெரும்பாலும் மூதாட்டிகளையே நாம் இப்பழக்கத்தின் பொருட்டு அவமதிக்கிறோம். அவர்கள் செய்த பாவம் என்னவோ? கணவனை இழந்து வாழ்வது அவர்கள் செய்த பாவம் என்றால், ஏன் இச்சமூக ஆடவர்கள் நம்மை விட மூத்த பெண்களை திருமணம் செய்துக்கொள்ளக்கூடாது? இவ்வாறு மூத்தப் பெண்களை திருமணம் செய்துக்கொண்டால் விதவைப் பெண்களின் எண்ணிக்கை பெரும்பாலும் இச்சமூகத்தில் குறையும். விதவன்கள் பெருகுவார்கள். இவர்களால் இச்சமூகத்தில் பாதிப்பேதுமில்லை. எனவே இப்பழக்கமுடையோர் இனிமேல் அவர்களது குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு மூத்தப் பெண்களையும், பெண்களுக்கு இளைய ஆண்களையும் மணம் முடித்துவைத்து புரட்சி செய்யுங்கள்.

அல்லது பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். விதவை என்று அவர்களை சுப காரியங்களில் ஒதுக்கிவைப்பது அடிமுட்டாள்தனம். பெரும் பாவமும்கூட. இச்சமூகத்தில் பெற்றத்தாயையே, அவள் விதவை என்ற காரணத்தால் தன் வீட்டு சுப காரியங்களில் தனது தாயை முன்னிலை வகித்து பங்கேற்க தடை விதிக்கும் மகன்களை உடைய சீர்கெட்ட சமுதாயம் இது. இதில் படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் வித்தியாசம் என்பதே கிடையாது. அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே செய்வர். என்னே... இவர்களது அறிவு!!

இனிமேலாவது விதவைகளுக்கு முன்னுரிமையையும் மரியாதையையும் கொடுத்துப் பழகுங்கள். அவர்கள் தரிசனத்தால் நன்மை நிகழுமே ஒழிய தீமை ஒருபோதும் நிகழாது. அப்படி நிகழ்ந்தால் அதற்கு காரணம் அவர்கள் அல்ல என்பதனை உணருங்கள்.

இதற்காகத்தான், "கணவன் இறந்தால் மனைவி தாலியை அறுக்க வேண்டாம்" என்று கட்டளை இட்டுள்ளார்கள் வள்ளற்பிரான். அவர் 'விதவை' என்ற சொல்லே மண்மூடிப்போக வேண்டும் என்று கனவு கண்டார். கணவனை இழந்தப் பெண்கள், எப்போது தாலியை மட்டுமல்ல, வளையலும் அணிந்துக்கொண்டு பூவும் பொட்டும் கூட வைத்துக்கொண்டு எப்பவும்போல் இச்சமூகத்தில் உலாவுகிறார்களோ, அப்போது சன்மார்க்க காலம் வந்துவிட்டது எனப் பொருள். எம்மருமை மூதாட்டிகளே... விதவைகளே... ஒரு வேளை தாலியை நீங்கள் முன்னரே அறுத்திருந்தால், தயவுசெய்து மீண்டும் அந்தத் தாலியை கழுத்தில் அணியுங்கள், பொட்டு வைத்துக்கொள்ளுங்கள், பூச்சூடுங்கள். மீண்டும் புத்துயிருடன் இம்மாநிலத்தே வலம் வாருங்கள். கலியுகம் சென்றுவிட்டது, இனி நீங்கள் என்றுமே சுமங்கலிதான். இது தாலிக்கயிற்றில் நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்கு மட்டும்தான். தாலிக்கயிறே இல்லாத சன்மார்க்கத் திருமணங்களை வரவேற்போம். ஒருவருக்கொருவர் அடிமை படுத்தும் சடங்குகள் ஒழியட்டும். அது அருமை.  


DECEMBER – 2015

மஞ்சள் நீராட்டு

நமது சமுதாயத்தில் பல மூடப்பழக்கங்கள் சடங்குகளாக வழிவழி செய்யப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சடங்குகளை எப்படியெல்லாம் நாம் நியாயப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம், உட்கார்ந்து ரூம் போட்டு யோசித்து அதற்கு அறிவியல் பூர்வமான விளக்கங்களை எல்லாம் வெளியிட்டு, அதனை நாம் முன்னதைக் காட்டிலும் மிகச்சிறப்பாக வெட்கங்கெட்டு செய்து வருகின்றோம். அதில் ஒன்றுதான் இந்த புனித நீராட்டு விழா என்கிற மஞ்சள் நீராட்டு விழாவாகும்.

பெண் மற்றும் ஆண் பால்முதிர்ச்சி அடைவது என்பது இயற்கையாக நிகழுகின்ற ஒரு வளர்ச்சியாகும். இதனை வெளியில் சொல்வதே மானங்கெட்ட செயலாகும். இதனைப்போய் பத்திரிக்கை அடித்து ஊரார், நண்பர்கள், உறவினர்களை அழைத்து விழா கொண்டாடி விருந்து அளிப்பது, பெற்றோர்களுக்கு அசிங்கமாக அல்லவா இருக்க வேண்டும். மறைக்கப்பட வேண்டிய ஒன்றை அப்பட்டமாக வெளிப்படுத்தி அதற்கான நிகழ்ச்சியினை நடத்துவது அசிங்கத்திலும் அசிங்கம்.

தனக்கு ஏற்படும் இயற்கை மாற்றத்தை ஒரு பெண் தன் தாயுடன் பகிர்ந்துக்கொண்டு ஆலோசனை பெறலாம். அது தந்தைக்குக்கூட தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஒரு பெண்ணில் இருந்து வெளிப்படும் முதல் தீட்டை (தீட்டு எனச்சொல்வதே தவறு.) பிறர் பார்க்கா வண்ணம் குளியல் அறையில் நீராட்டி ஆடை மாற்றிக்கொண்டால் முடிந்தது அந்நிகழ்வு. அதற்கு மேல் ஒரு தாயானவள், அந்நிகழ்வினைப்பற்றி சிறிது விளக்கம் அளித்து இனிமேல் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டுமென தன்மகளிடம் கூறிவிட்டால் முடிந்தது கதை. ஆனால் இதற்காக நாம் போடும் கூப்பாடு எழுதத் தீராது. சொந்தங்களின் சீர்வரிசை, அதனால் ஏற்படும் உறவினத்துக்குள் ஏற்படும் சச்சறவுகள் என இன்னல்கள் ஏராளம். காசு கொடுத்து சூனியம் வைத்தக் கதைதான் இது.

பெண் பூப்படைந்த தினத்திலிருந்து பதினாறாவது நாள் அல்லது முப்பதாவது நாள் வரை வீட்டின் ஒதுக்குப்புறம்தான் அவளின் இருப்பிடம். அவள் என்னப்பாவம் செய்தாள் எனத் தெரியவில்லை. ஒதுக்குப்புறமாக இருக்கும் அத்தனை நாளும் அவளுக்கென்று உண்ணுவதற்கு தனித் தட்டு, படுக்கத் தனிப்படுக்கை ஆகியவைகளும் வழங்கப்படும். அதனை மற்றவர்கள் யாரும் தொட்டுவிட்டால் தீட்டாகிவிடும், என்ற கதை வேறு விடுவார்கள். இவை எல்லாம் பெண்களை அடிமைப்படுத்தும் வழக்கம் என்று அந்தப் பெண்களே நினைப்பது இல்லை என்பதுதான் வருத்தத்திற்குறியது.

அந்தப் பெண்ணிற்கு மேற்படி தீட்டை கழித்து புனிதத்தைக் கூட்ட அதற்கு ஒரு புரோகிதர் தேவை. சமஸ்கிருத மந்திரம் ஓத அந்த புரோகிதர் நடத்தி வைக்கும் விழாதான் இந்த மஞ்சள் நீராட்டு விழாவாகும். இவ்விழா, அந்தந்த சாதிக்கேற்ற ஆசாரங்கள்படி நடந்தேறும். இறுதியில் அந்த புரோகிதர், கும்பத்திலிருந்து புனித நீர் கொண்டு முதலில் பூப்படைந்த பெண்ணின் மேல் தெளிப்பார். பிறகு பூப்படைந்த பெண்ணின் பெற்றோர், அங்கு வந்திருக்கும் அனைவர் மீதும் தெளிக்க எல்லாம் புனிதமாகி விடுமாம். இதுவரை தீண்டத்தகாதவர்களாக இருந்தவர்கள் இனிமேல் தீண்டத்தக்கவர்களாக மாற்றிவிடும் ஒரு புனித நிகழ்ச்சியே இது.

இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வை தீட்டு என்று ஒதுக்குவதே மிகத்தவறு. இதனை முன்னிட்டு அந்நாட்களில் மகளிர்களை கோவிலுக்குள் செல்லத் தடைவிதிப்பதும் தீது, வீட்டிற்குள் சகஜமாக இருக்க தடைவிதிப்பதும் தீது. இவ்வுலக உயிர்களெல்லாம் அந்தத்தீட்டிலிருந்து பிறந்தவர்கள்தானே. அப்படியானால் அது எவ்வாறு தீட்டு ஆகும். புனிதம் என்று போற்றாவிடினும் அதனை அலட்சியம் செய்துவிடுவதே நல்லது.

இப்படிப்பட்ட விழாக்கள் எல்லாம், நமக்கு தயவை விருத்தி செய்ய தடையாக இருப்பதாக நமது வள்ளற்பெருமான் கூறுவதை நினைவில் நிறுத்துங்கள். நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு சடங்கிலும் அறிவியல் இருக்கத்தான் செய்யும். அதற்காக அதனை நாம் செய்தால் தயவு தடைபடும். தயவு இல்லையென்றால் சன்மார்க்கம் இல்லை. நமக்குத் தீட்டு என்பது வேத சடங்குகள்தான். எனவே சன்மார்க்கிகள் மஞ்சள் நீராட்டு விழாவினை நடத்துதல் கூடாது.

உடனே சன்மார்க்க முறைப்படி நடத்துகிறோம் என்று அனைத்து மூடப்பழக்கங்களையும் அருட்பெருஞ்ஜோதி அகவல் ஓதி நடத்தும் ஒரு புதியக் கலாச்சாரம் தற்போது சன்மார்க்க இல்லங்களில் நடந்தேறி வருவதும் வருந்தத்தக்கது. மூடப்பழக்கம் மண்மூடிப் போகவேண்டுமேயொழிய அது வடிவம் மாறி கொண்டாடப்படுவதும் மூடப்பழக்கமே என்று அறிய வேண்டும்.

தி.ம.இராமலிங்கம்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.