Saturday, December 26, 2015

சுத்த சன்மார்க்க நீதி



"சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
சுத்த சன்மார்க்க நீதி

SEPTEMBER-2015

சுத்த சன்மார்க்க நீதி

சன்மார்க்கிகள் தினம் ஆறு முறை இறைவனைத் தொழுதல் வேண்டும்.

தொழும் நேரங்கள்:

காலை      06.00 மணி -      சூரிய உதயம்
மதியம்      12.00 மணி -      உச்சி பொழுது    
மாலை      04.00 மணி -      சாயரக்ஷை
மாலை      06.00 மணி -      மாலை
இரவு       12.00 மணி -      யாமம்
காலை      04.00 மணி -      வைகறை

சன்மார்க்கிகள் தினம் மூன்று மணிநேரம் மட்டுமே உறங்குதல் வேண்டும். இரவு 12.00 மணிக்கு தொழுதுவிட்டு உறங்க வேண்டும். காலை 03.00 மணிக்கு எழவேண்டும்.

சன்மார்க்கிகள் தங்களது ஆன்ம பிரகாசத்தையே சபை எனக்கொண்டும், அதன் உள்ளொளியினை இறைவனாகவும் வணங்கி, உள்ளொளியின் அசைவான நடனத்தைக் காணவேண்டும். எக்காலத்திலும் புருவமத்தியின் கண்ணே நம்முடைய மனதை செலுத்த வேண்டும்.

விருப்பு வெறுப்பு அற்று அருள்வடிவாவதே சுத்த சன்மார்க்கம்.

விருப்பு என்பது யாது?

ஒன்றை வேண்டி ஆசைப்பட்டு, முழு இலட்சியத்தை விட்டு அதிசமாய் பார்த்து நிற்றல். இந்த ஆசையால் தானுங்கெட்டு, இதர வஸ்துவுங் கெட்டு, நமது சாதனம் தடைபடும். ஆதலால் எவ்வகையில் விருப்பம் என்பது கூடாது.

வெறுப்பு என்பது யாது?

வேண்டாமை, துவேஷம், இதர வஸ்துவைப் பற்றாதிருத்தல். இந்த வெறுப்பால் இதர வஸ்துவிடத்தில் துவேஷம் தோன்றி ஜீவ உபகாரத்தைத் தடை செய்யும். ஆகையால் வெறுப்பும் கூடாது.

மேற்குறித்த இரண்டும் அற்று சத்துவமயமாய் நிற்றல் வேண்டும்.

OCTOBER-2015

சுத்த சன்மார்க்க நீதி

மனிதர்களாகிய நாம், ஒருமுறை ஆகாரங்கொண்ட பிறகு மூன்று மணிநேரம் கடந்த பிறகே மறு ஆகாரம் கொள்ள வேண்டும். (ஆக ஒரு நாளைக்கு எட்டு முறை சாப்பிடலாம் என்று நினைக்க வேண்டாம். நாம் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுகின்றோம். அந்த மூன்று வேளை உணவு உட்கொள்ளும்போதும், இடைப்பட்ட கால இடைவெளி குறைந்த பட்சம் மூன்று மணி நேரமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே சுத்த சன்மார்க்க நீதி.)
.
# ஏனெனில், தினம் ஆகாரங்கொண்டால் அவ்வாகாரம் மார்பிடத்தில் ஓர் தட்டில் தங்கும்.

# அந்தத் தட்டின் மேல் கடவுள் கடவுளி என்றிரண்டாகி யிருக்கிறது.

# நாம் உண்ட அன்னத்தை ஒரு மணிநேரத்தில் அந்த அன்னத்தில் உள்ள அமுதைப் பிரித்து, ஊட்ட வேண்டிய தத்துவத்திற்கு ஊட்டுகின்றது.

# மறுபடியும் இரண்டு மணிநேரத்திற்குள் மேற்படி அன்னத்தினது மத்திய தரமாகிய நெகிழ்ச்சியினை சுக்கிலமாக்குகிறது.

# அச்சுக்கிலத்தை இரண்டரை வராகனெடையில் கோசநுனியில் (லிங்கநுனி) ஒன்றும், நாபியில் (கொப்பூழ்) ஒன்றும், பிரமரந்திரத்தில் (தலையின் உச்சித்துளை) அரையுஞ் சேர்த்து, மற்றவைகளைக் கொண்டு அங்கங்கு விளக்கத்தை உண்டு பண்ணி ஈளை, குரும்பை, நகத்தூசு, தொப்புளழுக்கு, கண்பீளை முதலான அழுக்கை வெளிப்படுத்துகின்றது.

# மேற்படி அன்னத்தை மூன்று மணிநேரத்தில் அதிலுள்ள திரவாம்சத்தைப் பிரித்து, உதிரமாக்கி யூட்டுகின்றது.

# மூன்று மணிநேரத்திற்கு மேற்பட்டு சக்கையை மலபாகத்தில் தள்ளி விடுகின்றது. இதுபோலவே எல்லா உணவையும் பிரிக்கின்றது.

NOVEMBER-2015

சுத்த சன்மார்க்க நீதி

காது, மூக்கு குத்தல்

சுத்த சன்மார்க்கிகளே! வள்ளலார் வழியில் நடைபோடும் நண்பர்களே! நம்மில், நமது குடும்பங்களில் தொன்று தொட்டு நடைபெற்று வருகின்ற சில இல்ல விழாக்களில், குலதெய்வ கோவிலில் குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது, மூக்கு குத்தும் விழாவும் ஒன்றாக இருக்கும். சுத்த சன்மார்க்கிகள் என்று கூறிகொள்ளும் நம்மில் எத்தனை அன்பர்கள், இவ்விழாவினை தமது குழந்தைகளுக்கு செய்யாமல் நிறுத்தியுள்ளனர் எனத்தெரியவில்லை. சிலர் நிறுத்தியும் உள்ளனர். இன்னும் பலர் தொன்றுதொட்டு செய்து வரும் அந்த விழாவினை சில காரணங்களுக்காக நடத்தியும் வருகின்றார்கள்.

இவர்கள் எல்லாம் சுத்த சன்மார்க்க நீதிகளை புரிந்துக்கொண்டு அதிதீவிரமாக அதனை கடைபிடிக்க முன்வருதல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கியத் தடைகளாக இவ்விழாக்களெல்லாம் உள்ளன என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் இனி இப்படிப்பட்ட விழாக்களை செய்யப்போவதில்லை என்ற குறிக்கோளை மனதில் உறுதியாக நாம் நிலைநிறுத்த வேண்டும்.

"காதில் இரண்டு பெரிய பொத்தல் செய்து வர விடுத்தவர் - ஆணுக்குக் கடுக்கனிடுதலும் பெண்ணுக்கு மூக்குத்தி முதலியவை போடுதலும் தமக்குச் சம்மதமானால் - காதிலும் மூக்கிலும் அதற்கு வேண்டிய பொத்தல்களிட்டு வரவிட்டிருக்க மாட்டாரா" என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளுகிற பக்ஷத்தில், காதில் கடுக்கனிடவும் மூக்கு முதலியவற்றில் நகையிடவும் சம்மதம் வருமா? என நம்மை கேட்கிறார் வள்ளற்பெருமான்.

இவ்வாறு நாம் செய்துக்கொண்டிருக்கின்ற விழாக்களில் ஜீவகாருண்யத்துடன் விசாரணையும் செய்துவந்தால், நாம் அனைத்தையும் விட்டுவிடுவோம் என்பது சந்தேகமில்லை. இதனால் நமக்கு கிடைப்பது என்ன என்றால்?

சுத்த சன்மார்க்கத்தில் நான்காவது சாதனமான ஞானத்தில், மூன்றாவது படியாகிய ஞானத்தில் யோகம் செய்கின்ற பலனாகிய நிராசை உண்டாகும். இவ்வளவு எளிமையாக நாம், ஞானத்தில் யோகத்தை சுத்த சன்மார்க்கப் பாதையில் மட்டுமே பெறமுடியும். ஒன்றைப்பெற ஒன்றை விடத்தானே வேண்டும். அனைத்தையும் பெற வேண்டுமானால், நாம் அனைத்தையும் விடத்தான் வேண்டும்.

DECEMBER-2015

சுத்த சன்மார்க்க நீதி

கடவுள் தேகமும் மனித தேகமும்

என்ன? ஓய்... கடவுளுக்கு தேகம் உண்டா?

உண்டு.

கடவுளுக்கு கை, கால்கள் முதலியன உண்டா? கை, கால்கள் இருந்தால்தானே அதனை தேகம் என சொல்ல முடியும்! கடவுளுக்கு தேகம் உண்டென்றால் கை, கால்களும் அவருக்கு இருக்கும்தானே! நமக்கே இருக்கும் போது கடவுளுக்கு இருக்காதா? ஓய்...

இதே கேள்வியினை 'ஞானிகள்' என்றும் 'முனிவர்' என்றும் 'சற்குரு' என்றும் 'சாதுக்கள்' என்றும் 'குரு' என்றும் 'தவத்திரு' என்றும் 'சுவாமிகள்' என்றும் 'பெரியவர்' என்றும் 'புனிதர்' என்றும் 'சங்கராசாரியார்' என்றும் 'பாதிரியார்' என்றும் 'அருள்தந்தை' என்றும் இன்னும் பலதரப்பட்ட பெயர்களை கொண்டு இவ்வுலகில் வாழ்பவர்களிடம் கேட்டால் முன்னுக்குப் பின் முரணான பதில்களுடன் திருதிருவென விழிக்கவே செய்வர். காரணம் இவர்களில் யாரும் கடவுளின் தரிசனத்தை கண்டிருக்க மாட்டார்கள். இவர்கள் கண்ணை மூடிக்கொண்டு உளறுவதற்கும் ஏதேனும் ஆதாரம் இருக்க வேண்டுமல்லவா? இருக்கிறது, அதுதான் பல்வேறுபட்ட புராணக்கதைகள், இதிகாசங்கள், மதப்புத்தகங்கள் என்கிற யாரோ எப்பவோ எழுதிய கதைப் புத்தங்கள்தான் அது. இப்படிப்பட்ட கதை புத்தகங்களில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள்தான் மேற்காணும் பெயர்களுக்குரியவர்கள். நாமெல்லாம் இவர்கள் கூறும் கதைகளை உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்.

சரி! கடவுளுக்கு தேகம் உண்டா? இல்லையா? அதை சொல்லும்! ஓய்...

அதை சொல்வதற்கு நான் என்ன, கடவுளை பார்த்திருக்கிறேனா? பார்த்திருந்தால்தானே சொல்வதற்கு! இருந்தாலும் இருக்கலாம்! இல்லாமலும் போகலாம்! அவர் எப்படி இருந்தால் நமக்கென்ன வரப்போகிறது? எப்படியாவது இருந்துவிட்டு போகட்டுமே... ஓய்..., இப்படித்தான் நான் பதில் சொல்ல முடியும்!

பிறகு ஏன் ஓய்... இப்படி ஒரு தலைப்பை கொடுத்தீர்?

காரணம் இருக்கிறது. கடவுளுக்கு உண்மையில் தேகம் இல்லை ஓய்... ஆனால் அவருக்கு என ஓர் வடிவம் இருக்கிறது!

வடிவமா? வடிவம் என்றால் அதுவும் உருவம் தானே! 

ஆமாம் உருவம்தான்... உருவம்தான்.... ஆனால்,

உருவமாக இருக்கிற நாம் ஏதேனும் ஒரு உருவத்தை மட்டுமே காணமுடியும். அருவுருவத்தையும் காணமுடியும். ஆனால் அருவத்தைக் காணமுடியாது.

அருவுருவமாக இருப்பவை உருவத்தையும் அருவுருவத்தையும் காணமுடியும். அதிதீவிரம் இருந்தால் ஏகதேசத்தில் அருவத்தையும் காணும்.

அருவமாக இருப்பவை யாவையும் காணும்.

என்ன ஓய்... குழப்புகிறீர்!

நாம் உருவமாக இருக்கும் வரை நம்மைப் போன்ற உருவங்களையும், சற்று முயன்றால் அருவுருவ தேகிகளான நம்மில் சற்று மேம்பட்ட சித்தர் பெருமக்களையும், தேவர்களையும் காணலாம்.... என்று சொன்னேன் ஓய்...

அருவுருவ தேகிகளான சித்தர்கள் மற்றும் தேவர்கள் எல்லாம் அவர்களை யொத்த அருவுருவ தேகிகளையும் உருவமான நமது தேகத்தையும் காண்பார்கள். அவர்களே அதிதீவிரமாக முயன்றால்தான் எப்போதாவது அருவுருவுமான அவர்களது ஆன்மாவையே காணமுடியும்.... என்று சொன்னேன் ஓய்...

அருவமாக இருக்கும் இறைவன் ஒருவனால் மட்டுமே, அதே அருவமாக இருக்கும் தன்னையும், அதே அருவமாக இருக்கும் கணக்கில் அடங்கா ஆன்மாக்களையும், அருவுருவ தேகிகள் மற்றும் உருவ தேகிகளையும் காணமுடியும்... என்று சொன்னேன் ஓய்...

இறைவன் அருவம் என்றால் அதற்கு எப்படி வடிவம் வரும்... ஓய்...

வருகிறதே... அந்த வடிவம் எப்படி இருக்க்கும் என்றால்?... அறிவே இறைவனின் வடிவமாக இருக்கின்றது!!

என்னய்யா.... இது... இப்போ அறிவுக்கும் வடிவம் இருக்கிறது என்கிறாயே...!!

ஆமாம் ஓய்... அறிவுக்கும் வடிவம் உள்ளது. அதாவது இந்த அறிவானது அருளே உருவமாகக் கொண்டுள்ளது... ஓய்...

போச்சுடா... இப்போ அருளுக்கும் உருவம் உள்ளது என்கிறாயே...!!!

ஆமாம் ஓய்... உள்ளது! இங்கு வடிவம் மற்றும் உருவம் என்பது நாம் நினைப்பது போன்று ஒரு திடப்பொருள் அல்ல.... ஓய்...

என்னது... திடப்பொருளுக்குத்தானே உருவம் மற்றும் வடிவம் இருக்கும்... ஓய்...

சரி தான்... ஓய்... நான் சொல்ல வந்தது என்னவென்றால்... இவ்விடத்தில் வடிவம் என்பது அதனது செயல்பாட்டை குறிக்கும். அதன் செயல்பாட்டையே நாம் இங்கு வடிவம் என்கிறோம். அதாவது 'அருளுருவமான அறிவே வடிவமாக இறைவன் இருக்கிறான்' என்றால், இறைவனது செயல்படும் அறிவானது அருளை மட்டுமே சார்ந்ததாக இருக்கிறது எனப்பொருள். எனவே இறைவனது வடிவம் அருளுருவமான அறிவு வடிவம் என்கிறோம்.

இதற்கு உதாரணமாக வள்ளற்பிரானின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியினை சொல்லலாம்...

வள்ளலார் திருவொற்றியூர்க்குச் செல்லும்போ தெல்லாம் நேராகத் தேரடித் தெருவழியாய்ச் செல்லாது தென்னண்டை மாடவீதியிலுள்ள நெல்லிக்காய்ப் பண்டாரச்சந்துவழியாய்த் தரிசனார்த்தம் செல்வது வழக்கம். (நெல்லிக்காய் ஊறுகாய் மிகப் பக்குவமாய்ச் செய்து அச்சைவபண்டாரம் அன்பர்களுக்கு இடுவர். பிள்ளைபெருமானும் அவரது அன்பர்களும் அச்சைவர் வீட்டிலேயே உண்பது வழக்கம்.) ஒருநாள் பிள்ளைப்பெருமான் தேரடி வீதியாய்ச் சென்றனர். அங்கு நெடுநாளாகத் திண்ணைமீதிருந்த நிர்வாணசந்நியாசி யொருவர் அவ்வழியே போக்குவரவுள்ள ஜனங்களைக் கண்டு 'கழுதை போகிறது, மாடு போகிறது' என்று இகழ்ந்துகொண்டிருப்பர். பிள்ளைப்பெருமான் அந்நாள் தன்னெதிரே வருவதை உற்று நோக்கி அந்நிர்வாண சந்நியாசி "இதோ உத்தம மனிதன் வருகிறான்" என்று கூறிவிட்டு, உடனே தன் கையால் தன் தேகத்தை மறைத்துக் கொண்டனர். பிள்ளைப் பெருமான் சில வார்த்தைகள் கூறினவுடன் சந்நியாசி அன்றிரவே அவ்விடம் விட்டுச் சென்றனர். (பிரபந்தத்திரட்டு - அ.திருநாவுக்கரசு பதிப்பு - பக்கம்-70)

இந்த நிகழ்ச்சியில் வள்ளற்பெருமானைத் தவிர மற்ற மனிதர்களை அந்த நிர்வானசந்நியாசி எவ்வடிவம் கொண்டு நோக்கினார் என்று ஆராய்ந்தால், அவ்வடிவமானது அதன் செய்லபாடாக இருப்பதை நாம் அறியலாம் அல்லவா. எனவே இறைவனுக்கும் வடிவம் உண்டு என்றால் அது திடப்பொருள் போன்றதைக் குறிக்காது. அதன் செயல்பாட்டை குறித்து நிற்கிறது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்... இவ்வாறு அருளின் உருவம் எப்படிப்பட்டதென்றால்? அது - கருணை, தயவு, உருக்கம், ஜீவகாருண்யம், இரக்கம் போன்ற வடிவமாக இருக்கிறது. இப்படிப்பட்ட வடிவத்தைக் கொண்ட அறிவே (அறிவு என்பது செயல்பாடு) இறைவனின் வடிவமாக இருக்கின்றது ஓய்...

ஆஹா... இதுவும் கதைதானே... நீதான் இறைவனையே பார்த்ததில்லை என்றாயே!, இப்போது பார்த்ததுபோல் நீயும் கதை விடுகிறாயே!... இதற்கு என்ன ஆதாரம் ஓய்...

வள்ளலார் அருளிய திருவருட்பாதான் ஆதாரம் ஓய்...

ஏன்!... திருவருட்பாவும் மற்ற மதப்புத்தகங்கள் புராணங்கள் போல் கதையாக இருக்கக்கூடாது?...மதங்களையும் புராணங்களையும் பொய் என கூறியதால் மட்டும் திருவருட்பா உண்மையாகிவிடுமா?... ஓய்...

மதங்களையும், புராணங்களையும் எழுதியவர்கள் இறந்துவிட்டார்கள். ஆனால், திருவருட்பாவை அருளிய திருவருட்பிரகாசர் இறவா நிலையை எய்தினார். மற்ற நூலெல்லாம் மனிதர்கள் இப்பூமியில் இனி பிறவாமல் இருக்க என்ன செய்யலாம்? என்ற சிந்தனையில் தோல்வியுற்றன. திருவருட்பா மட்டுமே மனிதன் இப்பூமியில் இறக்காமல் இருக்க என்ன செய்யலாம்? என்ற சிந்தனையில் சென்று வெற்றியும் பெற்றது. உருவமான இந்த மனித உடல் படிப்படியாக சுவர்ணதேகம், பிரணவதேகம், ஞானதேகம் என்று முன்னேறி உருவத்திலிருந்து அருவுருவமாகி அதிலிருந்து அருவமாகவே ஆகியதை நாம் திருவருட்பிரகாசர் வாழ்க்கையிலிருந்து அறிகிறோம். மேலும் இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் இறக்காமல் இருக்க முடியும் என்று வலியுறுத்துவது திருவருட்பா மட்டுமே. மற்ற நூல்களில் சில இறவாவரத்தைப் பற்றி சொல்லியுள்ளன, ஆனால் அவை அருவுருவ நிலையைக் குறிக்குமே அல்லாது இறைவனோடு இரண்டறக்கலக்கும் அருவ நிலையைக் குறிக்காது என அருட்பிரகாசரே முழங்கியுள்ளார். அதனால்தான் இத்திருநூல் நமக்கெல்லாம் சத்தியம் சொல்கிறேன்... சத்தியம் சொல்கிறேன்... என மற்ற மத நூல்கள் போல் இல்லாமல் சத்தியம் ஒன்றினையே ஒலித்துக்கொண்டிருக்கிறது. எனவே திருவருட்பாவின் சத்தியத்தை நம்பி நாம் நமது அனுபவத்தை அதன் வழியே துணிந்து செயல்படுத்தலாம் ஓய்...

அப்போ... சிலைகள், உலோகங்கள், மரங்கள், தந்திரங்கள், யாகங்களில் வழியே இறைவன் காரியப்படவில்லையா? ஓய்...

இல்லைவே இல்லை... மார்க்கங்கள் நான்கின் விரிவில் சரியை கிரியை என்கிற எட்டு படிகளில் சரியையில் சரியை, கிரியையில் சரியை ஆகிய இவ்விரண்டையும் செய்கின்ற சோம்பேறிகளின் செயல்பாடு இது. நீர் கூறிய இவைகளில் எல்லாம் இறைவன் காரியப்படுவது போன்று காட்டப்படுவது எல்லாம் மாயாஜாலமே... ஓய்...

பின்பு,  இறைவனை நாம் எப்படி அறிவது? அவன் எங்குதான் காரியப்படுவான்? ஓய்...

இறைவன் அருளுருவமான அறிவாக இருப்பதால், நாமும் அந்த இறைவனை நமது ஆன்ம அறிவைக்கொண்டே அறிய வேண்டும், அறிய முடியும். மற்ற எவ்வகையிலும் இறைவனை நாம் காணமுடியாது. முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும் என்பது போல, அறிவை அறிவால்தான் அறியமுடியும். அதற்கு நமது சிற்றறிவை பேறறிவாக மாற்ற வேண்டும். அப்படி நமது ஆன்ம அறிவு தயாஅறிவாக மாறியவுடன், அங்கே அப்போதே, அதாவது நமது மனித தேகத்தில் இறைவன் காரியப்படுவதை நாமே காணலாம். அவ்வாறு காரியப்பட்டால் அத்தருணமே நாம் மூன்று தேகமும் பெற்றுவிடலாம். ஐந்தொழில் முதற்கொண்டு இறைச் செயலை எல்லாம் நாமும் செய்யலாம். எனவே இறைவன் காரியப்படுவது நமது தேகத்தில் மட்டுமே என்று அறிய வேண்டும். எப்படி கர்ப்பூரம், பஞ்சு, கரி, கட்டை முதலியவிடத்தில் அனலானது உடனே காரியப்படுகிறதோ அவ்வாறு பக்குவ ஆன்மாவிடத்தில் இறையாண்மா காரியப்படும். பக்குவமில்லாதவர்களுக்கு இறைவன் காரியப்படுவது எப்படி என்றால், வாழையினடத்தில் அக்னி காரியப்படுவது போன்றதாகும். ஆகையால் நாம் நமக்குள் இறைவனைக்கண்டு, அவனது காரியம் நமக்குள் செயல்பட நமது செயற்கை குணமான விருப்பு, வெறுப்பு போன்ற தீங்கான குணங்களை நீக்கல் வேண்டும். கோபம், கோபத்தால் உடம்பு துடித்தல் போன்ற தீய குணங்களையும் முதலில் விட வேண்டும்... ஓய்... இதுதான் சுத்த சன்மார்க்க நீதி...

நல்லா இருக்குதய்யா உங்க நீதி!!??? .... ம்ம்..ம்ம்ம்.. இதுதான் உண்மையோ...!!!

முத்திறல் வடிவமு முன்னியாங் கெய்துறு (237)
த்திறம் னக்கருள் ருட்பெருஞ் ஜோதி

பிறிவே தினியுனைப் பிடித்தன முனக்குநம் (285)
மறிவே வடிவெனு மருட்பெருஞ் ஜோதி

அருள்வடி வதுவே யழியாத் தனிவடிவு (997)
வருள்பெற முயலுகென் றருளிய சிவமே

அருளே நம்மிய லருளே நம்முரு (999)
அருளே நம்வடி வாமென்ற சிவமே

அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை (1017)
அருளர சியற்றுகென் றருளிய சிவமே

தன்வடி வனைத்தையுந் தன்னர சாட்சியில் (1137)
என்வடி வாக்கிய என்றனித் தந்தையே

தன்னையுந் தன்னருட் சத்தியின் வடிவையும் (1145)
என்னையு மொன்றென வியற்றிய தந்தையே

இவ்வாறு அருளப்பட்டுள்ள திரு அருட்பெருஞ்ஜோதி அகவலை உணர்ந்தால்.... உண்மை புரியுமைய்யா... பொய்மை விலகுமைய்யா....

தி.ம.இராமலிங்கம்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.