Saturday, December 26, 2015

புத்தம்



"சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
புத்தம்

SEPTEMBER - 2015

                                                  மேன்மையான அட்டாங்க மார்க்கம்

துக்கம், அது தோன்றக் காரணம், அதன் முடிவு, முடிவுக்கு எடுத்துச் செல்லும் மார்க்கம் - இவையே நான்கு மேன்மையான உண்மைகள். இவற்றை "யானைக்கால் பாதச் சுவடுகள்" என்பார்கள். ஏனென்றால் யானையின் பாதச்சுவட்டினுள் மற்ற எல்லா மிருகங்களின் பாதச் சுவடுகளும் அடங்குவதைப்போலப் புத்தரின் அடிப்படைப் போதனைகள் எல்லாம் இந்த நான்கு மேன்மையான உண்மைகளுள் அடங்கிவிடும். இந்த நான்கினுள் ஒன்று மற்றதைவிட முக்கியமானது என்று சொல்வது தவறாகும். ஏனென்றால் இவை ஒவ்வொன்றும் முழுமையின் ஒரு பகுதியாகவே ஒன்றோடொன்று இணைந்து செயற்படுகின்றன. ஆனால் தம்மத்தை விளங்கிக் கொள்ள ஏதாவது ஒரு உண்மையைத் தனிப்படுத்திக் காட்ட வேண்டுமென்றால் நாம் மேன்மையான நான்காம் உண்மையையே குறிப்பிட வேண்டும். அதுவே துக்கத்தின் முடிவுக்கு எடுத்துச் செல்லும் மார்க்கம். அதுவே அட்டாங்க மார்க்கம்.

1. நற்காட்சி        5. நல்வாழ்க்கை  
2. நல்லூற்றம்            6. நல்லூக்கம் 
3. நல்வாய்மை           7. நற்கடைப்பிடி  
4. நற்செயல்             8. நல் ஒருக்கம்

    புத்தரின் போதனைகளுள் அட்டாங்க மார்க்கமே மிக முக்கியமானதெனக் கூறுவதற்குக் காரணம், இதுவே தம்மத்தை நமக்குத் தினசரி வாழ்க்கை அனுபவமாக வெளிப்படுத்துகிறது. மார்க்கம் இல்லாவிட்டால் தம்மம் ஒரு வெறுமையான கோட்பாட்டுக் குவியலாக மட்டுமே இருக்கும். மார்க்கம் இல்லாவிட்டால் துக்கத்திலிருந்து விடுபடுவதென்பது ஒரு கனவாகத்தான் தோன்றும்.

   அட்டாங்க மார்க்கம் என்ற தலைப்புக் குறிப்பது போல, அது எண்
வகையான பிரிவுகளைக் கொண்டது. அந்த எட்டுப் பிரிவுகளையும் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர வேண்டும் என்பதில்லை. மார்க்கம் இந்த எட்டுப் பிரிவுகளையும் ஒரே சமயத்தில் வளர்க்கின்றது. ஒவ்வொரு பிரிவும் தனித்தனியாக முற்றிலும் வேறுபட்ட செயல்களைச் செய்கின்றது. ஒவ்வொன்றும் அதனதன் வழியில் துக்கத்தின் முடிவுக்கு எடுத்துச் செல்லத் துணை புரிகின்றது.

                      புத்தமத பொன்மொழிகள்

      “ஆயிர ஜன்மங்களில் நீங்கள் சேர்த்த புன்னியம் -
      தயாள செயல்கள், புத்தர்களுக்கு நன்கொடை கொடுத்தது   போன்றவை, நீங்கள் செய்த நல்ல காரியங்கள் - எல்லாமே
      ஒரு கன கோபத்தினால் அழிக்கப்படும்.”

      "இரண்டில் எது நடந்தாலும், பொறுமையாக இரு."
      அதாவது துயரமான சூழ்நிலையில் பொறுமையாக இரு,
      மகிழ்ச்சியான சூழ்நிலையிலும் பொறுமையாக இரு.
      ஒரு முடிவு வரவேண்டுமென்பதால் இவ்விரு சூழ்நிலைகளிலும் நாம் துள்ளிக் குதிக்கிறோம். எனவே நாம்
      மகிழ்ச்சியாக இருக்கும் போதும் ஆனந்த மயக்கத்தில்,
      சிந்திக்காமல் செலவுசெய்வது, சிந்திக்காமல் பேசுவது
      சிந்திக்காமல் நடந்துக்கொள்வது பொன்ற செயல்களைச்     செய்யாமல் பொறுமையாக இருப்பதே நல்லது.”

      பிரச்சனையை தீர்க்க முடியுமென்றால்
      மன குழப்பத்திர்க்கு காரணமென்ன?
      தீர்வெ இல்லையென்றால்
      துக்கத்தில் ஆழ்ந்திருப்பதின் பயன் என்ன? 

OCTOBER - 2015

                                                                புத்த பகவானின் முதல் உபதேசம்

      'பிக்குகளே, இல்லறத்தைத் துறந்து பரிவிராஜகனாகச் சென்ற துறவி, இந்த இரு தீவிர மார்க்கங்களையும் பின்பற்றக்கூடாது. இவ்விருமார்க்கங்கள் எவை? புலன்வருமின்பங்களில் ஈடுபட்டு அதில் மூழ்கி இருக்கிறார்கள். இது கீழானது, சாதாரணமானது, பொதுமக்கள் அனுசரிப்பது, தகுதியற்றது, பயனற்றது. மற்றது தன்னை ஒறுத்து கொடுந்தவஞ் செய்வது. இது துன்பந் தருவது, தகுதியற்றது, பயனில்லாதது.

      இந்த இரு தீவிர மார்க்கங்களையும் கைவிட்டுத் ததாகதர் மத்தியவழியை உணர்ந்து கொண்டார். இது காட்சி தருவது. அறிவைக் கொடுப்பது, சாந்தியும் அகக்காட்சியும் உதவி, ஞானஒளி தந்து நிர்வாணத்துக்கு இட்டுச் செல்வது. இந்த நடுவழி என்ன? இதுவே ஆரிய அட்டாங்க மார்க்கம்.

      துக்கம் என்ற உயர் வாய்மை இதுவே. பிறப்பு துக்கம், மூப்பு துக்கம், பிணி துக்கம், சாக்காடு துக்கம், அவலக்கவலைக் கையாறு எல்லாம் துக்கமே. வேண்டாதாரோடு சேர்வது துக்கம், வேண்டியவரை விட்டுப் பிரிதல் துக்கம். விரும்பியதைப் பெறாவிட்டால் துக்கம். சுருக்கமாகக் கூறுவதானால் உபாதானப் பஞ்சக்கந்தமும் துக்கமே.

      பல தெய்வங்களையும் மாரர்களையும், பிரம்மாக்களையும், துறவிகளையும், அந்தணர்களையும், அரச குமாரர்களையும், மனிதரையும்  கொண்டுள்ள உலகில் மிக உயர்ந்ததுமாகக் கருதப்படும் பூரண ஞான ஒளியை நான் பெற்றுவிட்டதாக உரிமை பாராட்டினேன். அப்போது உண்மையான அறிவின் காட்சி இவ்வாறு என்னகத்து எழுந்தது. என் உள்ளத்தில் உண்டான விடுதலை அசைக்கமுடியாதது. இதுவே கடைசிப் பிறப்பு. எனக்கு இனி புனர்ப்பவம் இல்லை.
 ஆத்மா இன்மை (தான் என்று ஒன்றும் இல்லை)

      பக்தியுள்ள வயதான பெண்மணி ஒருவர் பக்கத்து மாநிலத்திலிருந்து யாத்திரை நிமித்தம் வாட் பா பொங் விகாரைக்கு வந்தார். அவர் அஜான் சாவிடம், "என்னால் குறுகிய காலம் தான் இங்கு இருக்கமுடியும், எனது பேரக்குழந்தைகளை கவனிக்க விரைவில் திரும்பிச் செல்ல வேண்டியிருப்பதாலும், எனக்கு வயாதாகி விட்டதாலும், ஒரு சிறு தரும போதனை செய்ய முடியுமா?" என்று கேட்டார். அஜான் சா அழுத்தமாகச் சொன்னார், "கேளுங்கள்! இங்கு யாருமே இல்லை, இது மட்டுமே! வீட்டுக்குச் சொந்தக்காரன் யாரும் இல்லை, வயதாவதற்கு யாரும் இல்லை, வாலிபமாக இருக்க யாருமில்லை, நல்லவராகவும், கெட்டவராகவும் இருக்க யாருமில்லை, பலவீனனாகவும் பலசாலியாகவும் யாருமில்லை. இது மட்டுமே, அவ்வளவு தான் – உடம்பு மண், நீர், வாயு, தீ ஆகிய கூறுகளால் ஆனது. அக்கூறுகள் தங்கள் இயல்பைத் தொடர்ந்து செல்கின்றன. இவை எல்லாம் வெறுமையானவையே. பிறக்கவும் யாரும் இல்லை இறக்கவும் யாரும் இல்லை! பிறப்பு இறப்பு பற்றிப் பேசுபவர்கள் ஒன்றும் அறியாக் குழந்தைகளின் மொழியில் பேசுகிறார்கள். உள்ளத்தின் மொழியில், தருமத்தின் மொழியில் பிறப்பு இறப்பு என்று ஒன்றும் இல்லை."

      சுத்த சன்மார்க்கத்தில் பரமாத்மா, ஜீவாத்மா என்ற இரண்டும் உண்டு. மேலும் எல்லாம் வல்ல இறைவனும் உண்டு. இவையாவும் புத்தத்தில் இல்லை. எனவே வள்ளற் பெருமான் புத்த மதத்தாரைக் கண்டாலே நடுங்கினார். "சமண ஆதரைத் தேரவறியரை (பெளத்தர்), வைண நத்தரை... கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே." (திருவருட்பா - 907) .

NOVEMBER - 2015

நான்

1. "பௌத்த போதனைகளின் உண்மையான அடித்தளம் "நான்" என்று நாம் நினைப்பது வெறுமையானது என்பதுதான். ஆனால் மக்கள் தருமத்தைக் கற்க வருவது "நான்" என்னும் ஆணவத்தை அதிகரிக்கச் செய்யத்தான். அவர்கள் துன்பப்படாமலும், தடைகளைச் சந்திக்காமலும் வாழ விரும்புகிறார்கள். அவர்கள் வசதியாக இருக்கவும் துக்கத்தைக் கடந்து செல்லவும் விரும்புகிறார்கள். ஆனால் "நான்" என்னும் ஆணவம் இருக்கும் வரை அவர்களால் எப்படி அதைச் செய்ய முடியும்?"

மிகச்சரியான பெளத்த போதனை இது. ஆனால், "நான்" என்பதை இல்லாமல் செய்யமுடியுமா? என்பது மிகப்பெரிய கேள்வி. இந்த மின்னிதழின் ஆசிரியர் "நான்" என்கிற தி.ம.இராமலிங்கம் என்கிற நானாகும். இந்த நான் இல்லாவிடில் இந்த மின்னிதழ் ஏது? எனவே நான் இருப்பதை இந்த மின்னிதழ் உலகிற்கு எடுத்துரைக்கின்றது. ஏன் இந்த மின்னிதழினை "ஆசிரியர் என்ற நான்" என்பதை வெளிக்காட்டாமல் வெளியிடக்கூடாது? வெளியிட முடியும். ஆனால் "நான்" என்கிற இயற்கை இருப்பு அதனை தடுக்கின்றது. எனவே "நான்" என்பது வெறுமை அன்று. அது நமது ஆன்ம இருப்பைக் குறித்து நிற்கின்றது. அது தவறல்ல. ஆனால் "நான்"  என்கிற ஆணவம் அங்கே தலைகாட்டாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

தமது பெயருக்கு முன்னாலும், பின்னாலும் நாமே அகந்தையிலும், பிறர் பட்டம் கொடுத்தார்கள் என்பதற்காகவும் அலங்காரம் செய்கிறோமே அதுதான் "நான்" என்கிற ஆணவம். அதாவது, "தவத்திரு", "சுவாமிகள்", "அடிகள்", "சாதி பெயர்கள்" போன்ற வெற்றுச் சுவடுகளை நாம் நமது பெயருடன் சேர்க்க, அங்கு ஆணவம் மேலோங்குகின்றது. இதனைத்தான் வள்ளற்பெருமானும் கண்டித்தார். அவர் தம்மை தமது இயற்பெயரை கொண்டே அழைக்க வேண்டும் என்றார். சுவாமிகள், அடிகள், என்கிற அலங்காரத்தை கண்டித்தார்கள். இதுதான் "நான்" என்பதற்கும், "நான்" என்கிற ஆணவத்திற்கும் உள்ள வேறுபாடு. "தன்னை மதியாதிருக்க வேண்டும்" என்று வள்ளற்பிரான் சொன்னதும் இதனைக்குறித்தே.

2. "புரிந்த கொண்ட பின் எல்லாம் சுலபமாகி விடுகிறது. எளிதாகவும், நேராகவும் இருக்கிறது. மகிழ்ச்சியான செயல்கள் நிகழ்ந்தால் அவை வெறுமையானவை என்று அறிந்து கொள்ளுங்கள். துன்பகரமான செயல்கள் நிகழ்ந்தால் அவை உங்களுடையது அல்ல என்று ஒதுக்குங்கள். அவை கடந்து செல்கின்றன. அச்செயல்கள் உங்களோடு தொடர்பு கொண்டவை என்றோ நீங்கள் அவற்றின் சொந்தக்காரன் என்றோ நினைக்காதீர்கள். அந்த பப்பாளி மரம் உங்களுடையது என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் அந்த மரத்தை வெட்டினால் ஏன் உங்களுக்கு வலிப்பதில்லை? இது உங்களுக்குப் புரிந்தால் இதுவே சரியான பாதை, புத்தரின் சரியான போதனை. இந்தப் போதனை உங்களை ஞான நிலைக்கு இட்டுச் செல்லும்."
    
"நன்றும் தீதும் பிறர் தர வாரா" என்பது கணியன் பூங்குன்றனாரின் பொன் மொழியாகும். மேற்காணும் பெளத்த உபதேசத்தை இந்த ஒற்றை வரியானது எதிர்த்து நிற்கின்றது. நாம் செய்யும் கரும வினைக்கேற்பவே நாம் எதிர்கொள்ளும் அனைத்து நல்லது கெட்டதும் நம்மை அண்டுகின்றன. அப்படியிருக்க நாம் எவ்வாறு வெறுமையுடனும், அவை நம்முடையன வல்ல என்றும் ஒதுக்கித் தள்ளமுடியும்? முடியாதல்லவா? ஆனால் இது ஞானிகளுக்கு முடியும் என்கிறார் வள்ளற்பெருமான். "எல்லாம் அவன் செயல்", "அவனன்றி ஓர் அணுவும் அசையாது" என்கிற பொன்மொழிகள் ஞானிகளுக்கே பொருந்தும் என்பதனை ஒரு கதையின் மூலம் வள்ளற்பெருமான் விளக்குகின்றார். அதனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அருளிய பிரபந்தத்திரட்டில் (அ.திருநாவுக்கரசு பதிப்பு) பக்கம் 93-இல் படிக்கவும். எனவே நம்மைப்போன்ற மனிதர்கள் எதிர்கொள்ளும் இன்பத் துன்பங்களுக்கு நாமே பொறுப்பு என்கிறது சுத்த சன்மார்க்கம்.

எவ்வுயிரும் தம்முயிர் போல நினைக்கும் ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமை சுத்த சன்மார்க்கிகளுக்கு உரியது. எனவே அவர்களுக்கு, பப்பாளி மரத்தை வெட்டினாலும் வலிக்கத்தான் செய்யும். எனவே மேற்காணும் புத்தரின் போதனை ஞான நிலைக்கு இட்டு செல்லுமா? என்பது கேள்வி குறியே. 

DECEMBER - 2015

உடல் மீது ஆசையா?

      'ஆசையே துன்பங்களுக்குக் காரணம்' என்பதே புத்தத்தின் அடிப்படை சித்தாந்தாம். பிற உடல் மீது ஆசைவைப்பதே காமம். உன் உடம்புமீதுகூட ஆசை வைக்கக்கூடாது என்கிறது புத்தம். அப்படியிருக்க நமது உடம்பிற்கும் எதிர்மறையான உடம்பின் மீது ஆசை வைப்பது விபரீதம் இல்லையா. இதனால்தானே ஒழுக்க சீர்கேடுகள் இந்த சமுதாயத்தில் தினமும் நடந்துக்கொண்டிருக்கின்றன.

      பிற உடல் மீது காதல் கொள்ளலாமா? அந்த இரு உடல்களும் முறையாக விரும்பும் பட்சத்தில் காதல் கொள்ளலாம். ஆனால் இந்த காதல் கூட காமத்தால்தானே வருகிறது. காதல் என்பது முறைபடுத்தப்பட்ட காமம் அவ்வளவுதான். காமம் என்பது முறைபடுத்தப்படாத காதல். இரண்டுமே வேண்டாம் என்கிறது புத்த மதம். இதோ புத்தம் கூறுவதைக் கேளுங்கள்,

      "எல்லா உடம்புகளும் நிலம், நீர், வாயு, தீ ஆகியவைகளால் உண்டானவை. இவை ஒன்று சேரும் போது உடல் உருவாகி அந்த உடலுக்கு ஆண், பெண் என்றும் பிற பெயர் சூட்டவும் செய்கிறோம். இது ஒருவருக் கொருவர் அடையாளம் காண்பதை எளிதாக்குகிறது. ஆனால் உண்மையில் அங்கு யாரும் இல்லை - மண், நீர், வாயு, தீ ஆகியவை மட்டுமே இருக்கின்றன. ஆகவே உடல் மீது கிளர்ச்சியடையாதீர்கள் மோகங் கொள்ளாதீர்கள். உண்மையில் நுணுகிப் பார்த்தீர்களென்றால் அங்கு யாரையும் நீங்கள் காணப் போவதில்லை."

      ஆஹா... என்ன அருமையான போதனை. இவ்வுடலுக்கு அடையாளங்களாக இருக்கவே பெயர் சூட்டப்படுகிறது. ஆண், பெண் என்ற பாகுபாடு - பெயர்களுக்கும் உண்டு. நாம் நம்மை முதலில் பெயர் இல்லாத உடலாக காண பழக்கப்படுத்திக்கொண்டு படிப்படியாக அதேபோல் பிறரையும் பெயர் இல்லாத உடல்களாக பார்க்க பழக்கப்படுத்தினால் நாளடைவில் அவ்வுடலின் அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. பிறகு அது உடல் என்கிற பொது அடையாளமும் அழிக்கப்பட்டு அங்கு நாம் காண்பது ஒன்றுமில்லை என்றாகிறது.

      நாம் எப்பொருளை பார்த்தாலும், நம் எண்ணத்தில் முதலில் தோன்றுவது அதன் பெயரே. நாம் அதற்கு கொடுத்தப் பெயரை மறந்துவிட்டு அந்தப் பொருளை பாருங்கள்...அவ்வாறு பார்க்க முடிகிறதா? இரவு நேரத்தில் தூர வானில் வட்ட நிலவு அழகாக காட்சியளிக்கிறது. அதனை நாம் பார்க்கும்போது நிலவு அல்லது சந்திரன் என்ற பெயரை நினைக்காமல் நம்மால் பார்க்க முடிகிறதா? நம்மால் முடியாது. ஆனால் ஏதுமறியாத ஒரு குழந்தையால் அவ்வாறு பார்க்க முடியும். நாமும் அவ்வாறு பார்க்க பழகிக்கொண்டால் அதன்மீது கிளர்ச்சி உண்டாகாது.

எல்லாமுடைய அற்புதக் கடவுளை நாம் அடையாளப்படுத்தினோம். விளைவு அதற்கு என ஆயிரம் பெயர்கள் வந்துவிட்டன கூடவே ரூபங்களுங்களும் வந்துவிட்டன. அதற்கேற்றாற்போல் புராணக்கதைகள் ஓதப்பட்டன. இந்தப் பெயர்தான் உண்மை, இந்த ரூபம்தான் உண்மை, இந்தக்கதைதான் உண்மை என நாம் அடித்துக்கொண்டிருக்கிறோம். இவ்வளவுக்கும் காரணம் ஒன்றுமில்லாதவனை அடையாளபடுத்தியதே. ஆகையால் ஒன்றுமில்லாதவனை ஒன்றுமில்லாததாகவே பாருங்கள். அதற்கு 'அருட்பெருஞ்ஜோதி' என்று பெயர் வைத்தால்கூட அது மக்களிடையே பேதப்படுத்தப்படுகிறது. கிளர்ச்சி உண்டாகிறது. எனவே, கடவுள் ஒருவரே...., அவர் ஒன்றுமில்லாதவர்... என ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது நாமும் இங்கு ஒன்றுமில்லாதவர்களாக உணர்வோம். நான் என்ற பேதம் ஒடுங்கும். பிறகு கிளர்ச்சிக்கு வழியில்லை. எல்லாமுடையவர்களாக இறைவனும் நாமும் சேர்ந்தே இருப்பதை அப்போதுதான் நாம் உணரலாம்.

காற்றுருவோ கனல்உருவோ கடவுள்உரு என்பார்
      காற்றுருவும் கனல்உருவும் கண்டுரைப்பீர் என்றால்
வேற்றுருவே புகல்வர்அதை வேறொன்றால் மறுத்தால்
      விழித்துவிழித் தெம்போல்வார் மிகவும்மருள் கின்றார்
தோற்றும்அந்தத் தத்துவமும் தோற்றாத் தத்துவமும்
      துரிசாக அவைகடந்த சுகசொருபம் ஆகி
மாற்றமனம் உணர்வுசெல்லாத் தலத்தாடும் பெருமான்
      வடிவுரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி. (திருவருட்பா-5638)
  
புத்தம் சரணம் கச்சாமி!
சங்கம் சரணம் கச்சாமி!
தர்மம் சரணம் கச்சாமி!
தி.ம.இராமலிங்கம்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.