Saturday, December 26, 2015

"சன்மார்க்க விவேக விருத்தி"



"சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான வள்ளற்பெருமானின் உபதேசங்களும் அதற்கான விளக்கங்களும்.

AUGUST - 2015

கெளரவ ஆசிரியர்

      றிவுடைய நண்பர்க்கு அன்போடு வந்தனஞ் செய்து அறிவிக்கை நண்பர்களே! உலகில் வழங்கும் பிறப்புகளுள் உயர் பிறப்பாகிய மனிதப் பிறப்பைப் பெற்றுக்கொண்ட நாமனைவரும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகைப் பொருளின் அனுபவங்களைக் காலமுள்ள போதே அறிந்து அனுபவித்தல் வேண்டும். அங்ஙன மறிந்து அனுபவிப்பதற்குச் சன்மார்க்க விவேக விருத்தியே சாதனமாதலின், அதனையடைதற்குத் தக்க நன்முயற்சிக்கோர் முன்னிலையாகச் சன்மார்க்க விவேக விருத்தி யென்னும் பத்திரிகை யொன்று வழங்குவிக்கும் நிமித்தம், இம்மின் நூலினை நமக்கும் பிறர்க்கும் பயன்படும்படி வழங்குவிப்போமாக. 

                                              இங்ஙனம்
                                      சிதம்பரம் இராமலிங்கம்

ஆசிரியர்

      ன்புடைய யாவருக்கும் எனது வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த மின்னூலின் கெளரவ ஆசிரியர் திருவருட்பிர வள்ளலார் அவர்கள் 1867-ஆம் ஆண்டு இச்சமுதாயத்திற்கு சுத்த சன்மார்க்க கருத்துக்கள் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில் "சன்மார்க்க விவேக விருத்தி" என்ற பத்திரிகை ஒன்றை துவங்கினார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சன்மார்க்க விவேகமானது சமுதாயத்தில் சென்று சேர்ந்து விருத்தியாகவேண்டும் என்ற வள்ளலாரின் நோக்கம் வெற்றிபெற, இந்த மின்னூலை உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவுடன், ஒரு சிறந்த சமுதாய மின்னூலாக எடுத்துச்செல்ல முனைந்திருக்கின்றேன்.         

                                                அன்புள்ள 
       தி.ம.இராமலிங்கம்
  
========================================================================================

                                                                                SEPTEMBER - 2015

கெளரவ ஆசிரியர்
தர்மமென்பதற்குப் பொருள் சீவதர்மம், குலதர்மம், சாஸ்திர தர்மம், ஆசார தர்மம், ஆசிரமதர்மம், சாதிதர்மம் முதலியவாக விரியும். இதில் அதிணுண்மை அதின் தன்மை... தன்மை என்பது அதின் சுபாவம். சுபாவமென்பது இயற்கைக் குணம். தயையென்பது ஆன்மா. ஆதலால், ஆன்மாவுக்கு இயற்கை குணம் தயை. ஆன்மாவின் இயற்கை என்பதே தர்மத்திற்குப் பொருள். ஆன்மா இயற்கையோடு இருந்தால் சிவமாகலாம். தருமத்தோடு கூடியவன் தேக நஷ்டத்தை அடைய மாட்டான்.

  இங்ஙனம்
                                      சிதம்பரம் இராமலிங்கம்


ஆசிரியர்

ஆன்மா தனது இயற்கை குணத்தோடு இருப்பதுதான் தருமம். தருமத்தோடு இருப்பவனுக்கு மரணம் இல்லை. ஆன்மாவின் இயற்கை குணம் தயவு. நமது தயவு என்னும் தருமம் இவ்வுலக மாயையில் சிக்கி அதர்மமாகி செயற்கையாகி விடுகின்றதா? எனவே ஆன்மா இயற்கையோடு இருக்க பழக்கப்படுத்த வேண்டுமா? இது எப்படி இருக்கின்றது என்றால்?, இயற்கையைப் பார்த்து, "நீ இயற்கையாக இருக்கக் கற்றுக்கொள்" என்று இயற்கையிடமே சொல்வது போன்று உள்ளதல்லவா? இயற்கை எப்படி மாறும். மாறாதல்லவா? அப்படி இருப்பின், நமது ஆன்மாவின் இயற்கை மட்டும் எங்ஙனம் மாறியது? மாற்றியது எது? மாறியது ஏன்? அல்லது ஆன்மா இயற்கையோடுதான் அதாவது தயவோடுதான் உள்ளதா? அப்படி இருந்தால் நாம் ஏன் மரணமடைகிறோம்? ஆன்மா என்றும் தயவோடுதான் உள்ளது. அந்த தயவு மறைக்கப்பட்டுள்ளது. வெளியின் இயற்கை நிறம் கருப்பு. ஆனால் அதனை நீல நிறம் மறைப்பதினால் நமக்கு வெளி நீல நிறமாகக் காட்சிகொடுப்பது போல், நமது மறைப்பிற்கு தகுந்தாற்போன்று நமது ஆன்மாவின் செயல்பாட்டை நாம் காண்கிறோம். எனவே மறைப்புத் திரைகளை அகற்றினால் ஆன்ம தயவை நாம் கண்டு தயாமயமாகலாம்.

அன்புள்ள 
                                    தி.ம.இராமலிங்கம்
========================================================================================
OCTOBER - 2015

கெளரவ ஆசிரியர்
ஜீவகாருண்யத்தால் பிரமன் ஆயுசும், பாசவைராக்கியத்தால் விஷ்ணு ஆயுசும், ஈசுர பக்தியால் ருத்திரன் ஆயுசும் பிரம்மஞானத்தால் என்றுமழியாத சுவர்ண தேக முதலியவைகளைப் பெற்றுக்கடவுள் மயமாகலாம். எப்படியெனில்: கடவுள் சர்வ ஜீவதயாபரன், சர்வ வல்லமையுடையவன்; ஆகையால், நம்மையும் சர்வ ஜீவதயையுடையவர்களாய்ச் சர்வவல்லமையையும் பெற்றுக் கொள்ளும்படி மனித தேகத்தில் வருவித்தார்.

                                                                                                                 இங்ஙனம்
                                      சிதம்பரம் இராமலிங்கம்


ஆசிரியர்

நமது மனித தேகம் மட்டுமே இறைவனின் சர்வ வல்லமையையும் பெறுவதற்கான தகுதிவாய்ந்த இடமாகும். அந்த சர்வ வல்லமையை பெறுவதற்காக இந்த இடத்தில் (மனித தேகம்) நம்மை எல்லாம் குடியமர்த்தியவர் அந்த சர்வ வல்லபர். அந்தக் குடியை கெடுத்துவிடாமல் குடும்பம் நடத்துபவர்கள் சுத்த சன்மார்க்கிகள். அவ்வாறு குடும்பம் நடத்தி வருபவர்தான் நமது திருவருட்பிரகாச வள்ளலார்.

அக்டோபர் ஐந்தாம் தேதி வள்ளலாரை இறைவன் இப்பூமிக்கு வருவிக்க உற்றதாக நாம் எல்லாம் நினைக்கிறோம். அதற்கு அவரது பாடலும் சான்றாக உள்ளது. அது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு நமது பிறந்த நாள் அன்றும், நாமும் அதே இறைவனால்தான் இப்பூமிக்கு வருவிக்க உற்றோம் என்ற நினைவு நமக்கு வர வேண்டும். நாம் வள்ளலாரை சிறப்பு செய்வதாக நினைத்து, அவரை மட்டுமே இறைவன் வருவிக்க உற்றதாக நினைத்து பெருமை செய்வது தவறு. சுத்த சன்மார்க்கத்தில் பேதம் தவறு. அபேதம் வரவேண்டும். நம்மை எல்லாம் இறைவன் மனித தேகத்தில் வருவித்தார் என்று, இதற்கு சாட்சியாக மேலே நமது கெளரவ ஆசிரியர் அவர்களே கூறுவதை கவனிக்கவும். எனவே நாமும் வள்ளலாரைப் போன்று பிரம்மஞானம் பெற்று என்றுமழியாத சுவர்ண தேகம் பெறுவேண்டும் என்பதே திருவருட்பிரகாசர் நமக்கு, தமது 193 பிறந்த நாள் அன்று விடுக்கும் செய்தியாகும்.

                                                அன்புள்ள 
                                     தி.ம.இராமலிங்கம்


NOVEMBER - 2015

கெளரவ ஆசிரியர்

அமுதக்காற்று இவ்வண்டத்தில் இரவில் அருணோதயந் தொடங்கி உதயபரியந்தம் வியாபகமாய் இருக்கின்றது. அக்காலத்தில் ஜீவர்கள் நன்முயற்சியி லிருப்பது விசேஷ நலம். தேகாதி பிண்டத்தில் மேற்படி அமுதக்காற்று வியாப்பியமாயிருக்கும். ஒருகால் ஒரு க்ஷண நேரம் அந்தக்காற்று வியாபகமாயிருக்குங்கால், ஜீவர்களுக்கு இது வரையில் தாங்களறியாததான கடவுள்விளக்கம் உண்டாகும்.

                                                இங்ஙனம்
                                           சிதம்பரம் இராமலிங்கம்

ஆசிரியர்

ூமியின் ஒரு பாதி பகலாகவும், அதே நேரத்தில் மறு பாதி இரவாகவும் இருக்கும். அப்படி இரவாக இருக்கும் பகுதியின் அண்டத்தில்தான் அமுதக்காற்று தோன்றுகின்றது. இந்த அமுதக்காற்றை அனுபவித்தால்தான் நமக்கு கடவுள் விளக்கமும் அதனால் உண்டாகும் மரணமிலா பெருவாழ்வும் சித்திக்கும். பகல் நேரத்தில் நாம் அனுபவிப்பதெல்லாம் விஷக்காற்றுகளே. அதனால்தான் உலக ஜீவர்கள் சொற்ப ஆயுளில் இவ்வுலகைவிட்டு விடைபெறுகின்றன. எனவே சுத்த சன்மார்க்கிகள் இரவுப்பொழுதை தூங்கிக் கழிக்காமல் அந்நேரத்தை நன்முயற்சியில் ஈடுபடுத்த வேண்டும். பகல் தூக்கமும் கூடாது, கவனம்.

நமது உடம்பிலும் அதே அமுதக்காற்று செயல்படாமல் மறைப்பாய் உள்ளது. அந்தக் காற்றை செயல்பட வைக்க, அண்டத்தில் உள்ள அமுதக்காற்று வந்து அதன்மீது வீச வேண்டும். வீசிவிட்டால் இரண்டும் கூடிய ஒரு சஷண நேரத்தில் நாம் கடவுளின் நிலையை அறிந்துக்கொள்ளலாம். ஆகவே நாம் இரவு நேரத்தில் இறை நினைவுடன் நன்முயற்சியில் இருக்க பழகுவோம்.

                                      அன்புள்ள 
                                         தி.ம.இராமலிங்கம்


DECEMBER - 2015

கெளரவ ஆசிரியர்

ஜீவ காருண்யத்தால் பிரமாவினுடைய ஆயுசும், பாசவைராக்கியத்தால் விஷ்ணுவுடைய ஆயுசும், ஈசுரபத்தியால் ருத்திரனாயுசும், பிரமஞானத்தால் என்று மழியாத சுவர்ண தேகம் முதலியவையும் பெற்றுக் கடவுள் மயமாகலாம்.

  இங்ஙனம்
                                      சிதம்பரம் இராமலிங்கம்


ஆசிரியர்

உயிர்களிடத்தில் அன்போடு இருக்கப் பழகிக்கொண்டால், அதன் விளைவாக நமக்கு 4,32,000 வருடங்கள் வரை வாழக்கூடிய சுவர்ண தேகம் கிடைக்கும். இது பிரமனுடைய வயதை ஒத்தது. படைத்தல் தொழிலை செய்யலாம். இத்தேகத்தை அடைந்து இறந்தவர்கள் பல கோடி, தற்போது இருப்பவர்களும் பல கோடி.

வி+ராகம்=விராகம்=வைராக்கியம். யான், எனது என்பதே பாசம் ஆகும். எனவே நாம், நான் என்கிற அகங்காரத்தையும் எனது என்கிற பொருள்களின் மேல் வைத்துள்ள பற்றினையும் விட்டு நீங்குவது பாசவைராக்கியம் ஆகும். இதனை விட்டு நீங்கினால் நமக்கு 8,64,000 வருடங்கள் வரை வாழக்கூடிய சுவர்ண தேகம் கிடைக்கும். இது விஷ்ணுவுடைய வயதை ஒத்தது. காத்தல் தொழிலை செய்யலாம். இத்தேகத்தை அடைந்து இறந்தவர்கள் பல கோடி, தற்போது இருப்பவர்களும் பல கோடி.


எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் நிறைந்து விளங்குவதை உணர்தலே ஈசுர பக்தியாகும். அவ்வாறு உயிர்களை எல்லாம் கடவுளாகக் கருதுவோருக்கு 12,96,000 வருடங்கள் வரை வாழக்கூடிய சுவர்ண தேகம் கிடைக்கும். இது ருத்திரனுடைய வயதை ஒத்தது. அழித்தல் தொழிலை செய்யலாம். இத்தேகத்தை அடைந்து இறந்தவர்கள் பல கோடி, தற்போது இருப்பவர்களும் பல கோடி.


பிரமஞானம்=கடவுளைப் பற்றிய அறிவு. கடவுள் நிலையறிந்து அம்மயமாதல். நானே பிரமம் என்று அறிதலே பிரமஞானம். இதனை நமது மனத்தினால் அறிய முடியாது. ஆன்ம அறிவால் மட்டுமே அறியமுடியும். எதையும் தானாக அறிதல் ஆன்ம காட்சி, இதற்கு பதி அறிவு எனப்பெயர். ஒரு பொருளைப் பற்றின உண்மை தெரியாது அதனை அப்படியே பார்த்தல் இந்திரிய அறிவு. அந்தப் பொருளின் பெயரையும் அதன் லாப நட்டங்களையும் ஆராய்தல் மன அறிவு. அந்தப் பொருளை எப்படி உபயோகிப்பது என்று தெளிதல் ஜீவ அறிவு. அந்தப் பொருளினது உண்மையினை அறிதல் ஆன்ம அறிவு. இந்த ஆன்ம அறிவு கொண்டோருக்கு என்றும் அழியாத சுவர்ண தேகம் கிடைக்கும். இது நமது வள்ளல் பெருமானுடைய நிலையை ஒத்தது. ஐந்தொழிலையும் தமது சுதந்தரத்தில் செய்யலாம். என்றும் மரணமிலா பெருவாழ்வில் வாழலாம்.  இந்த தேகத்தை இது வரை அடைந்தவர் ஒருவரே. அவரே சிதம்பரம் இராமலிங்கம்.
மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு!!

                                           அன்புள்ள 
                                        தி.ம.இராமலிங்கம்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.