Saturday, December 26, 2015

சமணம் / ஜைனம்

"சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
சமணம் / ஜைனம்

SEPTEMBER - 2015

அஹிம்சை

உயிர்களை அன்பு செய்யுங்கள் என்ற கோட்பாட்டைத் தலையில் சுமந்து நாடெங்கும் அலைந்தவர்கள் சமணர்கள். அகிம்சை என்றால் உயிர்களைக் கொல்லாமை என்று நாம் கூறுகிறோம். சமணர்களின் கருத்துப்படி உயிர்களைக் கொல்லாமல் இருப்பது மட்டும் அகிம்சை அல்ல. அவ்வுயிருக்கு நன்மை செய்வதும் சேர்ந்ததுதான் அகிம்சை.
ஆபத்து நிலையில் இருக்கின்ற ஓர் உயிரைக் காப்பாற்றாமல் போவது கூட அவ்வுயிருக்கு இழைக்கப்படும் அநீதிதான் என்ற கொள்கை உடையவர்கள் சமணர்கள்.

உலகப் படைப்பு

உலகம் படைப்பட்டது இல்லை, அது காலத்தைப் போன்று அந்தமும் இல்லாதது, ஆதியும் இல்லாதது, அது கொள்கைகளின், வாழ்க்கையின், அமைதியின் அடிப்படையிலானது. அது உருவாக்கப்படவும் இல்லை, அழிக்கப்படப் போவதும் இல்லை, அது தன்னியல்பில் இயங்கி வருகின்றது.

சந்தாரா

கடவுள் இல்லை

உலகத்தில் உள்ள அனைத்தையும் உயிர் உள்ளவை என்றும் உயிர் அற்றவை என்றும் பிரித்துவிட முடியும். இப்படி உலகை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறார்கள் சமணர். இதில் உயிர் உள்ளவற்றைச் சீவன் என்றும் உயிர் அற்றவற்றை அசீவன் என்றும் குறிப்பிடுகின்றனர். உயிர் உள்ளன, உயிர் அற்றன ( சீவன், அசீவன் ) இரண்டுமே அழிவற்றவை. இரண்டுமே நிரந்தரமானவை. சீவனையும் அசீவனையும் தாண்டி கடவுள் என்றொருவர் இல்லை என்கிறது சமண சித்தாந்தம்.

உயிர்

உயிருக்கு எடையும் அளவும் உண்டு. தான் சேர்கின்ற உடலுக்கு ஏற்ற எடையையும் அளவையும் உயிர் பெறுகிறது. உயிருக்குத்  தான் சேர்கின்ற உடலுக்கு ஏற்பத் தன் அளவைப் பெருக்கிக் கொள்ளவும் சுருக்கிக் கொள்ளவும் முடியும். எனவே சிறிய எறும்பின் உடலில் இருக்கும் உயிரானது அவ்வுடலை விட்டு நீங்கி மறுபடியும் ஒரு யானையின் உடலில் புகுமானால் அந்த யானையின் உடலுக்கேற்ப தன் உயிரின் அளவைப் பெருக்கிக் கொள்ளும். இதைப் போலவே யானையின் உடம்பை விட்டு எறும்பின் உடலுக்குள் நுழைகின்ற உயிர் தன் அளவைச் சுருக்கியும் கொள்ளும். உயிருக்கு வடிவம் இல்லை. அது தான் ஏற்கின்ற உடலின் வடிவத்தைப் பெறுகிறது என்பது சமணர் நம்பிக்கை. ஒரு குழந்தையின் உடலில் இருக்கும் உயிர் அந்த உடல் வளர வளரத் தானும் அளவில் பெருக்கம் அடைகிறது.

“ஒரே விளக்கின் ஒளி எப்படி ஒரு குடத்துக்குள்ளும் ஒரு அறைக்குள்ளும் வெவ்வேறு அளவில் பரந்து பிரகாசிக்கிறதோ அதைப் போன்றதே சிற்றுடலின் உள்ளும் பெரிய உடலின் உள்ளும் இருக்கும் உயிர், அவ்வுடலின் அளவிற்கேற்பத் தன்னைப் பெருக்கியும் சுருக்கியும் கொள்கிறது ”

முற்றிலும் உயிரற்ற சடப்பொருளோ அல்லது முற்றிலும் உயிர்த்தன்மை மட்டுமே கொண்ட சித்துப் பொருளோ உலகில்  இல்லை. கல்லிலும் மண்ணிலும் மட்டுமல்ல காணும் எல்லாப் பொருளிலும்  உயிரின் அம்சம் உள்ளது.

தங்கத்தில் குறைந்த அளவு செம்பு கலந்திருந்தாலும் அதைத் தங்க நகை என்றுதானே கூறுகிறோம்.? செம்பு நகை என்று கூறுவதில்லை அல்லவா? அதைப்போலத்தால் எந்த இயல்பு ஒரு பொருளில் அதிகமாக இருக்கிறதோ அதன் அடிப்படையில் சமணம் அப்பொருள் சித்தா ( உயிரா ) அல்லது அசித்தா (சடமா) என்பதைப் பாகுபடுத்துகிறது.


OCTOBER - 2015

ஸ்கந்தங்கள்

சீவனின் ( உயிருள்ளதன் ) தன்மை சேதனம், அதாவது அறிவுள்ளது. அசீவனின் ( உயிரற்றதன் ) தன்மை அசேதனம் அதாவது அறிவற்றது. ஒரு உயிரைச் சுற்றி உள்ள சடப்பொருள்கள் யாவும் புற்கலம் எனப்படுகின்றன. புற்கலம் என்பதற்கு இணைந்து ஒன்றாவதும் பிரிந்து வேறாவதும் என்று பொருள்.

புற்கலத்தின் இயல்பின் அடிப்படையில் அவை இரு நிலைகளில் தோன்றுகின்றன.

1)   ஒரு பருப்பொருள் பிரிந்து, பிரிந்து, பின் பிரிக்கவே முடியாத ஒன்றன் நிலைக்குப் போதல். ( இதனைச் சாதாரணர் புலன்களால் காணவோ உணரவோ முடியாது.)

2)   பிரிக்கமுடியாத ஒன்று, பலவாய்ச் சேர்ந்து திரண்டு ஒரு பருப்பொருளாய் ஆதல். ( இதுவே உயிர்கள் காணவும் உணரவும் கூடிய சடப்பொருட்கள். )

புற்கலத்தின் இந்தக் காணவும் உணரவும் கூடிய பருப்பொருள்  நிலையைச் சமணர் ஸ்கந்தங்கள் என்று அழைப்பர். ஸ்கந்தம் என்பது கூடி உருவானது என்னும் பொருளில் வழங்கப்படுகிறது. சமணர்கள் கருத்துப்படி நாம் காணும் பொருள்கள் அனைத்தும் ஸ்கந்தங்களே! இந்த அண்டத்தை சமணர்கள் மகாஸ்கந்தம் என்று அழைக்கின்றனர்.

உலகம் எவ்வாறு தோன்றியது?

பெரிய விளையாட்டரங்கத்தைச் சுற்றி ஓடுவதைப் பார்த்திருப்போம். அம்மைதானத்தை ஒரு சுற்று சுற்றுவது என்பது, எங்கு ஓடத்தொடங்கினோமோ அங்கு வந்து முடிவது என்பதுதானே?

அதைப்போலத்தான், உலகம் எதிலிருந்து தோன்றியது எப்படித் தோன்றியது என்பதை அறிய வேண்டுமாயின் அது எங்குபோய் முடிகிறது என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் அது எங்குபோய் முடிகிறதோ, அங்கிருந்தே அது தோன்றியது என்கிறது சமணம். “எது கூட்டுப்பொருளோ ( எது ஸ்கந்தமோ) அதைப் பிரிக்க முடியும். எதைப் பிரிக்க முடியுமோ அது அழியும்.”

தற்கால அறிவியல், ‘ஆற்றல்’ என்பதன் தன்மை பற்றிக் கூறும் வரையறை ஒன்றைச் சமணம் ‘பொருள்’ என்பதை விளக்க எடுத்தாள்கிறது. எப்படி ஓர் ஆற்றலை அழிக்க முடியாது இன்னொரு ஆற்றலாக மாற்றத்தான் முடியும் என்கிறோமோ இதைப்போலவே ஒரு பொருளை அழிக்க முடியாது. ஒரு பொருள் அழிதல் என்பது அது இன்னொன்றாக மாறுவதைத்தான் என்கிறது சமணம்.

சேர்ந்த பொருட்கள் பிரிவுற்றால் அப்பொருள் அழிந்துவிட்டது என்பது பொருள். அப்பொருள்தான் அழிந்ததே தவிர, அதன் அழிவில் அது வேறொன்றாய் மாற்றம் பெற்றிருக்கும். எனவே அழிதல் என்பது முற்றிலும் இல்லாமல் போவதல்ல.

சரி. இப்படி ஒரு பொருளில் சேர்ந்திருக்கக் கூடியவற்றைப்  பிரித்துக் கொண்டே போனால் கடைசியில் என்னவாகும்?

கடைசியில் அது அதற்குமேலும் பிரிக்கமுடியாத ஒன்றாய் எஞ்சும். அதைச் சமணம் ‘அணு’ என்ற பெயரில் அழைக்கிறது.எனவே மேலும் பிரிக்க முடியாதபடி அமையும் ‘அணு’ என்பது அழியாதது. அந்த அழிவற்ற சிறிய அணுக்களில் சேர்க்கையில் இருந்துதான் நாமும் நாம் காணும் இந்த மாபெரும் உலகமும் தோன்றினவே அன்றி எந்தக் கடவுளாலும் இது படைக்கப்பட்டதில்லை என்பர் சமணர்.

NOVEMBER – 2015

மகாவீரர்

      மகாவீரரது போதனைகள் ‘திரிரத்தினம்’ அல்லது ‘மும்மணிகள்’ என்றழைக்கப்படும்.

      முதல் ரத்தினம் நன்னம்பிக்கை. நன்னம்பிக்கை என்பது மகாவீரரின் சக்தி. தூய்மை, மாசற்றதன்மை, உண்மை அறிவு ஆகியவற்றில் ஒருவர் உண்மை யான, உறுதியான நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதாகும். வீடுபேறு அடைவதற்கு நம்பிக்கை சீராக இருக்க வேண்டும் என்பதனை இது தெளிவுபடுத்துகிறது.

      இரண்டாவது ரத்தினம் நல்லறிவு. சமண சமயத்தின் கோட்பாடுகளை தெளிவுற உணர்ந்தால் அண்டத்தைப் பற்றி அறிய முடியும் என்பதே நல்லறிவாகும். நல்லறிவு என்பதற்கு முழுமுதற் கடவுள் இல்லை என்பதிலும், இயக்குபவர் இல்லாது உலகம் இயங்குகின்றது என்ற கோட்பாட்டையும், சம உரிமை பெற்ற எண்ணற்ற உயிர்கள் நிலைத்துள்ளன என்பதையும் உணர்வதாகும்.

      மூன்றாவது ரத்தினம் நன்னடத்தை. இன்னா செய்யாமை. உண்மை மொழிதல். உடைமை நீத்தல், திருடாமை, சொல், சிந்தனை, செயல் ஆகியவற்றில் அறம் மேலோங்கி நிற்றல் ஆகிய ஐந்து மாவிரதங்களைக் கடைபிடித்தலே நன்னடத்தை ஆகும். இம்மூன்று கொள்கைகளைப் பின்பற்றினால் வீடுபேற்றைஅடைய முடியும் என மகாவீரர் போதித்தார்.

      மகாவீரரின் அறநெறிக் கோட்பாடுகளில் மானுட நேயம் மேலோங்கி நிற்கிறது. மகாவீரரின் அறநெறிகள் வேதத்தையும். வேள்வியையும் எதிர்க்கிறது. வருணாசிரம தர்மத்திற்கு அங்கே இடமில்லை. ‘எல்லா உயிர்களும் சமம்’ என்றகருத்தை முன்னிலைப்படுத்தி மானுடத்தை உயர்த்தியவர் மகாவீரர்.

      உயிரினங்களுள் மிக உயர்ந்த நிலையில் மனிதனை வைத்துப் பேசுகிறார் அவர். மனிதனை விட தெய்வங்கட்குச் சிறப்பு தரும் வேதக் கொள்கைகளைக் கடுமையாக சாடுகிறார். நம் இன்ப துன்பங்களுக்கு நாமே பொறுப்பு. நம் கருமங்கள் நம்முடைய முயற்சியினால் நாமே களைந்து விடுதலை பெறவேண்டும். அவ்வாறு அறவழி நடந்து மனத்தால் தூய்மை உடையோர் அனைவரும் கடவுளர்களே என்பது மகாவீரரின் கருத்து.

      மகாவீரர் கொல்லாமைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். கல், மண், உலோகம் போன்ற வற்றிற்கும் உயிர் உண்டு என்று கருதினார். தண்ணீரைக் காய்ச்சினால் அதிலுள்ள உயிரினங்கள் இறந்து விடும். எனவே தண்ணீரைக் காய்ச்சக் கூடாது. சுவாசிக்கும் போது உயிரினங்கள் மூக்கு வழியே சென்று இறந்து விடும். எனவே மூக்கை திரையிட்டு மூட வேண்டும். நடக்கும்போது பாதம் பட்டு எறும்பு போன்றவை இறந்து விடும். எனவே தரையைச் சுத்தம் செய்து உயிரினங்களை அகற்றி விட்டே நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

      இல்லறத்தில் இருப்பவர்கள் இன்னா செய்யாமை (அகிம்சை), வாய்மை (சத்தியம்), கள்ளுண்ணாமை (கள்ளாமை), பிறர் மனை விழையாமை (பிரமசரியம்), கவராமை (திருடாமை), ஊணுண்ணாமை முதலிய நற்பண்புகளை கடைபிடித்து ஒழுக வேண்டும்.

      துறவிகளாக இருப்பவர்கள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொண்டு கர்ம வினையை நீக்க வேண்டும். சமணத் துறவிகள் தங்கள் தலைமுடியை ஒவ்வொன்றாக முழுவதையும் பிய்த்து எடுத்துவிட வேண்டும். அடிக்கடி உண்ணா நோன்பிருந்து இறுதியில் முழுப்பட்டினி கிடந்தே உயிர் துறக்க வேண்டும். உடையேதும் அணியாமல் நிர்வாணமாகத் திரிதல் வேண்டும். நீராடல் கூடாது. தரையிலேயே படுத்து உறங்குதல் வேண்டும். நின்றபடியே சாப்பிட வேண்டும். இவற்றைசமண முனிவர்கள் கடைபிடிக்க கட்டளையிடப்பட்டது.

      ‘கடவுள் உண்டு’ என்பதை மகாவீரர் ஏற்கவில்லை. உலகில் உள்ள அனைத்துப் பொருள் களையும் அவர்தான் படைத்தார் என்பதையும் அவர் ஏற்கவில்லை. உயிருக்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லை என்பது இவரின் கருத்து. உலகின் மிகச் சிறந்த சக்திகளுக்கு மேலான சக்தியாக இருக்கும் ஒன்றையே கடவுள் என்கிறார். அது மாந்தரின் ஆத்ம சக்திதானே தவிர தனியாகக் கடவுள் என்பவர் இல்லை என்பது மகாவீரரின் வாதமாகும்.

      மகாவீரர் தன்னுடைய கொள்கைகளை கோசலம், மகதம், விதேகம், அங்கம் ஆகிய நாடு களில் போதித்தார். அவரைப் பின்பற்றியவர்கள் ‘நிர்க்கிரந்தர்கள்’ அல்லது பற்றற்றவர்கள் என்று அழைக்கப்பட்டனர். மகாவீரர் தனது 72ம் வயதில் கி.மு.467ல் ராஜகிருதத்திற்கு அருகிலுள்ள பவா என்னுமிடத்தில் உயிர் நீத்தார்.

      கர்னாடகத்தில் உள்ள சிரவன பெலகோலா வில் பத்ரபாகு என்பவர் தங்கியிருந்த போதுதான் மகாவீரரின் போதனைகள் ஓரளவு தொகுக்கப் பட்டன. மகாவீரரின் போதனைகள் ‘பூர்வங்கள்’ என்றழைக்கப்படுகிறது.
     
      சமணம் இந்து சமயத்தின் ஒரு கிளையாக விளங்கியதே அன்றி சமயத்தைப் பரப்பும் ஆர்வத்துடன் திகழவில்லை. நாளடைவில் சமணம் சுவதம்பரர்கள் அதாவது வெள்ளாடை அணிந்தவர் கள் என்றும், திகம்பரர்கள் அதாவது ஆகாயத்தை ஆடையாகக் கொண்டவர்கள் என்றும் இருபிரிவுகளாகப் பிரிந்தது. சமணம் கடுமையான துறவு வாழ்வைப் பணித்ததாலும். இன்னா செய்யாமையை அதிக அளவில் வலியுறுத்திய தாலும் இச்சமயத்தை பலரால் பின்பற்றமுடியாமல் போயிற்று.

      மகாவீரர் இந்து சமயத்தில் காணப்பட்ட குறைகளைக் களைந்தார். மக்களுக்குப் புரிகின்றஎளிய மொழியில் சமயக் கொள்கைகளைப் போதித்தார். மகாவீரரின் போதனைகளால் சமூகத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகள் நீங்கின. கண்மூடித்தனமான கொள்கைகளும். உயிர்பலி இடுதலும் ஒழிந்தன. மகாவீரரின் சிந்தனைகளை சிந்தையில் கொண்டு மானுடத்தை உயர்த்தி நானிலம் போற்றும் நன்மக்களாக வாழ நாம் முயற்சிக்க வேண்டும்.


DECEMBER - 2015

காம நீக்கம்

சமண மதத்தில் 'காம நீக்கம்' என்பது ஒரு முக்கியமான கொள்கையாகும். துறவறம் சார்ந்தார்க்கு இது இயல்பாகவே வந்துவிடுகிறது. இல்லறத்தில் இருப்போரும் நிறைவில் துறவறம் சார்ந்து இறைநிலை பெறவேண்டியது இம்மதக் கொள்கையாகும். இதனை சிலப்பதிகாரத்தில் கெளந்தியடிகள் கோவலலுக்கு அறிவுறுத்துவதாக அமைந்துள்ளதை நாம் இங்கு காணலாம்,

                ‘‘வல்வினை ஊட்டுமென்று
                அறத்துறை மாக்கள் திறத்திற் சாற்றி
                நாக்கடிப்பாக வாய்ப்பறை அறையினும்
                யாப்பறை மாக்கள் இயல்பில் கொள்ளார்
                தீதுடை வௌ;வினை உறுத்தகாலைப்
                பேதமை கந்தாப் பெரும்பேது உறுவர்
                ஒய்யா வினைப்பயன் உண்ணுங்காலை
                கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்
                பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும்
                உருவிலாளன் ஒறுக்கும் துன்பமும்
                புரிகுழல் மாதர்ப்புணர்ந்தோர்க்கு அல்லது
                ஒரு தனிவாழ்க்கை உரவோர்க்கில்லை
                பெண்டிரும் உண்டியும் இன்பமென்று உலகில்
                கொண்டோர் உறூஉம் கொள்ளத்துன்பம்
                கண்டனராகிக் கடவுளர் வரைந்த
                காமம் சார்பாகக் காதலின் உழந்தாங்கு
                ஏமஞ்சாரா இடும்பை எய்தினர்
                இன்றே அல்லால் இறந்தோர் பலரால் ‘ (ஊர்காண் காதை,27- 44)

தீய செயல்களைச் செய்வதில் இருந்து விலகுங்கள். அவ்வாறு தீச்செயல்களில் இருந்து விலகாமல் இருந்தால் அது அடுத்தடுத்த பிறவிகளில் துன்பத்தை அனுபவிக்கத் தரும் என்று நாவாகிய குறுந்தடியால் வாயாகிய பறையை அறைவதுபோல பலமுறை அறவோர் கூறினாலும் அறிவு அற்றவர்கள் அதனை ஏற்கமாட்டனர். தீவினை தொடரும்போது பெரிதும் வருந்துவர். அறிந்தவர்கள் இவ்வாறு வருந்தமாட்டார்கள். மகளிரைப் பிரிவதால், புணர்வதால் ஏற்படும் துன்பம் இல்லறத்தார்க்கு எப்போதும் உண்டு. தனித்த வாழ்க்கையை மேற்கொண்ட துறவிகளுக்கு அத்துன்பம் இல்லை. பெண்ணும் உணவும் மட்டுமே வாழ்க்கை என்று வாழ்வோர் பெருத்த துன்பமடைவர். காமம் சார்பாக காதலில் விழுந்தோர் கரைகாண இயலாது துன்பத்தை அடைகின்றனர்  என்று மேற்காட்டிய பாடலின் பொருள் அமைகின்றது.

ேலும் இளங்கோவடிகள் சமண போதனைகளுடன் கூடிய பொதுவான போதனைகளையும் சிலப்பதிகாரத்தில் அருளியிருக்கிறார். இதனை நாம் அனைவரும் மதத்திற்கு அப்பாற்பட்டு நல்லனவற்றை எங்கிருப்பினும் எடுத்துக்கொள்ளும் நோக்கில் இதிலுள்ள சன்மார்க்க போதனைகளை மட்டும் பின்பற்றுதல் வேண்டும்.

                பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்
                தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்
                பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின்
                ஊனூண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின்
                தானம் செய்ம்மின் தவம் பல தாங்குமின்
                செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட்பிகழ்மின்
                பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்
                அறவோர்அவைக்களம் அகலாது அணுகுமின்
                பிறவோர்அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
                பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்
                அறமனை காமின் அல்லவை கடிமின்
                கள்ளும் களவும் காமமும் பொய்யும்
                வெள்ளைக்கோட்டியும் விரகினில் ஒழிமின்
                இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
                உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது
                செல்லும் தேஎத்துக் குறுதுணை தேடுமின்
                மல்லல்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கென் (வரந்தரு காதை 186- 202)

மண மதத்தில் 'ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்" என்ற வினைக் கோட்பாடு மிக முக்கியமாகும். இதனை சிலப்பதிகாரத்தில் சாரணர் முதல் சமணசமயக் கொள்கையாக அறிவிக்கிறார்.

ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை
இட்டவித்தின் எதிர்ந்து வந்தெய்தி
ஒட்டுங்காலை ஒழிக்கவம் ஒண்ணா
கடுங்கால் நெடுவெளி இடுசுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள் ( நாடுகாண் காதை 171-175)

தீவினை என்பது ஒழிக என்று வேண்டினாலும் ஒழியாது வல்வினையை வந்து ஊட்டிவிடும் தன்மையது. விதை இட்டால் அது மரமாவதுபோல முன்செய்வினையானது அதற்கான பலனைத் தந்தே நிற்கும். வெட்ட வெளியில் ஏற்றி வைத்த விளக்கு கடுங்காற்று அடிக்கும்போது அணைந்துபோவதுபோல வினை வந்துத் தாக்கும்போது உயிர் உடம்புடன் நில்லாது நீங்கிவிடும். கோவலன் தனது வினைப்பயனாக இறக்கப்போவதை முன்னதாகவே இளங்கோவடிகள் இக்கதையில் கூறுவார்.
தி.ம.இராமலிங்கம்

1 comment:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.