Saturday, December 26, 2015

ஆசிரியரின் தலையங்கம் - SEPTEMBER - 2015

"சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
ஆசிரியரின் தலையங்கம்

SEPTEMBER - 2015

சத்திய தருமசாலை & சத்திய ஞானசபை

      ன்புடையீர் வணக்கம். சமீப காலமாக வடலூர் பெருவெளியிலும், சித்தி வளாகத்திலும் சில கட்டங்களை எழுப்பி அதன் மூலம் பொதுமக்களுக்கு சில வசதிகளை வழங்கி வருகிறது நமது தமிழக அரசு. தொடர்ச்சியாக தற்போது வள்ளலார் தெய்வ நிலைய அலுவலகத்தில் வண்ணம் தீட்டுதல், முன்மண்டபத்தைச் சுற்றி தடுப்பு சுவர் கட்டும் பணியும் நடைபெற உள்ளது வரவேற்கத்தக்கது. அன்னதான திட்டத்திற்கு மற்ற இடங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக இருக்கும் நமது தருமச்சாலையை இன்னும் சுத்தமாக வைத்திருக்க வழிவகை செய்யவேண்டும். நவீன முறையில் உணவு சமைத்து பரிமாறப்பட வேண்டும். அதே நேரத்தில் அனையா அடுப்பும் தமது கடமையை இயற்ற வேண்டும். உணவு வழங்க ஒரு குறிப்பிட்ட கால அளவை நிர்ணயிப்பது சரியல்ல. இருபத்தி நான்கு மணிநேரமும் பசித்தவர்களுக்கு உணவு வழங்க வழிவகை செய்ய வேண்டும். இதற்கெல்லாம் தற்போதுள்ள இடம் போதாது. தருமச்சாலையில் நடைபெறும் பல்வேறு வேலைகளுக்கு அரசு போதிய ஊழியர்களை நியமித்து அவர்கள் மூலம் அண்ண விரயம் செய்தல் வேண்டும். எதிர் காலத்தை கணக்கில் கொண்டு அதே இடத்தில் மேல் தளம் ஒன்று கட்டி அங்கு உணவு பரிமாற்றம் நடத்த திட்டமிட வேண்டும்.  
      சத்திய ஞானசபையின் கூரையினை பொன்கொண்டு மூடவேண்டும். அதற்கான ஒரு திட்டத்தை நிர்வாகம் தயார்செய்து அதன் வரைவை அரசுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதற்காக தனியாக வங்கிக் கணக்குத் துவங்கி பொதுமக்களிடமிருந்து இத்திட்டத்திற்கென நன்கொடை வசூலித்து அவ்வங்கிக்கணக்கில் செலுத்தி வரவேண்டும். இன்றிலிருந்து பத்து வருடத்திற்குள் இதனை நாம் செய்து முடிக்க திட்டமிட்டு முடிக்கும் வண்ணம் ஒரு வரைவு அறிக்கை தயார் செய்து அதனை வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி அரசிடம் சமர்ப்பிக்க நிர்வாகம் முன்வர வேண்டும்.


மதம் பிடித்த மக்கள்

            இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872-ஆம் ஆண்டு மேயோ பிரபுவால் முதன்முறையாக தோராயணமாக எடுக்கப்பட்டது. அதன் பிறகு 1881-ஆம் ஆண்டு ரிப்பன் பிரபுவால் முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அது முதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ந்து கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகின்றது. 15-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. இந்தியா சுதந்தரம் அடைந்து 7-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு எனவும் இதனைக் கூறலாம். இக்கணக்கெடுப்பானது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நடவடிக்கையாக  கருதப்படுகின்றது.
      2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, மத ரீதியான மக்கள்தொகை விவரங்களை கடந்த மாத இறுதியில் மத்திய அரசு வெளியிட்டது. இந்தியா முழுதும் ஊடகங்களில் இதைப்பற்றியே விவாதங்கள் நடந்தன. 2001-ஆம் ஆண்டு இந்து மக்களின் மக்கள் தொகையினை ஒப்பிடுகையில் 2011-ஆம் ஆண்டு ஒரு கோடியே 59 லட்சம் இந்து மக்களை காணவில்லை என்பதே அந்த அதிர்ச்சி தரும் விவாதத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த ஒன்றரை கோடி இந்து மக்கள் என்ன ஆனார்கள்? அதே நேரத்தில் 2001-ஆம் ஆண்டு இஸ்லாம் மக்களின் மக்கள் தொகையினை ஒப்பிடுகையில் 2011-ஆம் ஆண்டு சுமார் ஒன்றரை கோடி இஸ்லாம் மக்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றார்கள்! இது எப்படி? இந்துக்கள் மதம் மாறினார்களா? அல்லது இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் சாமியார்களாக திருமணம் செய்யாமல் பக்தியில் திளைத்துவிட்டார்களா? விடை காண்பது அரிது. மதம் மாறுவது மனிதர்களின் உரிமை. மதமே வேண்டாம் என்பது சுத்த சன்மார்க்கிகளின் இறைமை . 2011-ஆம் ஆண்டு  கணக்கெடுப்பில் மதத்தையே குறிப்பிடாதவர்கள் 29 லட்சம் மக்கள் இருந்துள்ளார்கள். இவர்கள் அக இனமானால், இவர்களே சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் ஆவார்கள். இவர்களை "சன்மார்க்க விவேக விருத்தி" வாழ்த்துகின்றது. மதம் இல்லாத மனிதம் காண்போம்

ஐக்கிய நாடுகள் சபை (United National Organisation) 

      முதல் உலகப்போருக்கு அடுத்து, இரண்டாம் உலகப்போர் ஏற்படாமல் இருக்க 1919-ஆம் ஆண்டு The League of Nations என்ற பன்னாட்டு சபை உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த பன்னாட்டு சபையால் இரண்டாம் உலகப்போரினை தடுத்து நிறுத்த முடியவில்லை. 1939-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் வெடித்தது. இதனால் மேற்கண்ட பன்னாட்டு சபை கலைக்கப்பட்டு, தற்போதுள்ள பன்னாட்டு சபை 24-10-1945-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டன. இதில் இந்தியா தொடக்க காலத்திலிருந்தே (Charter Member) உறுப்பினராக இருந்து வருகின்றது. 

      இச்சபையில் ஆறு அங்கங்கள் உள்ளன. பொதுச் சபை, பாதுகாப்புச் சபை, பொருளாதார மற்றும் சமூக குழு, பொறுப்பாண்மை குழு, பன்னாட்டு நீதி மன்றம், செயலகம் என்ற ஆறு அங்கங்கள். இதில் பாதுகாப்புச் சபையில் 15 நாடுகள் மட்டுமே உறுப்பினராக இருக்க முடியும். இதில் 5 நாடுகள் (அமெரிக்கா, இங்கிலாந்து, இரஷ்யா, சீனா, பிரான்ஸ்) நிரந்தர உறுப்பினர்கள். மற்ற 10 நாடுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுபவைகளாக தற்காலிக உறுப்பினராக இருக்கும். இந்த பாதுகாப்புச் சபையில் தாங்களும் நிறந்தர உறுப்பினராக வேண்டுமென இந்தியா, ஜப்பான், ஜெர்மனி போன்ற சில நாடுகள் விருப்பம் தெரிவித்து அதற்கான செயலிலும் ஈடுபட்டுள்ளன.  

      இந்தியாவினை நிரந்தர உறுப்பினராக சேர்க்க எங்கள் ஆதரவு உண்டு என கூறிய அமெரிக்கா மற்றும் சீனாவும் தற்போது அந்நிலையினை மாற்றிக்கொண்டு விட்டன. மேலும் நமது சகோதர நாடான பாகிஸ்தான், இந்தியாவை நிரந்தர உறுப்பினராக      சேர்க்கக் கூடாது என வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றது. இந்தியா இந்த பாதுகாப்புச் சபையில் தற்காலிக உறுப்பினராக ஏழு முறை இருந்துள்ளது. (1950-51, 1967-68, 1972-73, 1977-78, 1984-85, 1991-92, 2011-12)
 
இச்சபையில் நிரந்தர உறுப்பினர்களுக்கு மட்டுமே Obsolute Veto Power என்கின்ற மறுப்பு வாக்கு அளிக்கும் அதிகாரம் உண்டு.  

      மக்கள் தொகை அடிப்படியிலும், உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு என்பதாலும், கடந்த காலங்களில் உலக சமாதானத்திற்காக நாம் ஆற்றிய அரும் பணிகளின் அடிப்படையிலும், ஆசியாவில் அதற்கான முக்கியத்துவத்தின் அடிப்படையிலும், நியூக்ளீயர் பவர் (அணு ஆயுதம்) உள்ள நாடாக இருப்பதாலும், விரைவாக முன்னேறும் நாடாக இருப்பதாலும், உலக அளவில் அதிகமாக ஆராய்ச்சியாளர்களையும், விஞ்ஞானிகளையும், மெய்ஞானிகளையும் கொண்ட நாடாக இருப்பதாலும், உலக அளவில் நான்காவது பெரிய இராணுவப் படையைக் கொண்ட நாடு என்பதாலும் நாம் இந்த பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்று கோருகின்றோம். ஆனாலும் தடைகள் வந்த வண்ணம் உள்ளன. 
      இனியும் இந்தியா இச்சபையினை நம்பி பயனில்லை. எனவே ஏன் நமது தலைமையில் வேறொரு உலக அளவிலான சபையினை உருவாக்கக்கூடாது? இப்போதுள்ள இந்த சபை மூன்றாம் உலகப்போரினை தடுத்து வந்தாலும், ஆங்காங்கே நாடுகளுக்கிடையே போர்கள் நிகழ்ந்துக்கொண்டுதான் உள்ளன. மேலும் தீவிரவாத போர்களும் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. இவைகளை முற்றிலும் தடுக்க தற்போதுள்ள சபையால் முடியவில்லை. எனவே இச்சபையில் இருந்து நாம் வெளியேறி, நமக்கு சாதகமாக உள்ள மற்ற நாடுகளோடு இணைந்து நமது தலைமையில் World Peace Organisation (WPO - உலக அமைதி சபை) என்ற அமைப்பை ஏற்படுத்த முயல வேண்டும். அதற்கான திறம் நமக்கு உண்டு.  
      சிதம்பரத்தில் எனக்கு இடமில்லை என்றால் கவலை இல்லை, நானே சிதம்பரம் ஆகிவிடுவேன்!! என்ற ஓர் புதிய உத்தியை பயன்படுத்தி, தமது இறை வல்லபத்தால் வடலூரில் ஓர் சிதம்பரம் கண்டாரல்லவா நமது வள்ளற்பெருமான். அது போல நமது இந்தியாவும் ஆக வேண்டும். ஆகும்
தி.ம.இராமலிங்கம்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.