"சன்மார்க்க
விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
இஸ்லாம்
SEPTEMBER - 2015
உலகப்
படைப்பு
"நிச்சயமாக
வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம்
என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள்
பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?" அல்குர்ஆன்
21:30
இன்றைய
விஞ்ஞானிகள் கூறும் பெருவெடிப்பு கொள்கையினை ஒத்ததாக மேற்காணும் வசனம் இருப்பதாக அறியப்படுகின்றது.
மேலும் சூரியன் மற்றும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றியும் கீழ்காணும் வசனங்கள் கூறுகின்றன.
"அல்லாஹ்
எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்;
பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்)
அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே
நடந்து வருகின்றன; அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள்
இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான்."
அல்குர்ஆன் 13:2
“நிச்சயமாக
அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும் சூரியனையும்,
சந்திரனையும் வசப்படுத்தினான்” என்பதை நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட
தவணைவரை செல்கின்றன; அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்."
அல்குர்ஆன் 31:29
"அவனே
இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும்
தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே
நடந்து வருகின்றன; அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே,
அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு
அதிகாரமும் இல்லை." அல்குர்ஆன் 35:13
"இன்னும்
(அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது
யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். இன்னும்
(உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை
(தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம். சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க
முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச்
செல்கின்றன." அல்குர்ஆன் 36:38-40
"அவன்
வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்; அவனே பகலின் மீது இரவைச்
சுற்றுகிறான்; இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்; சூரியனையும் சந்திரனையும்
(தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம்
நடக்கின்றது; (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்."
அல்குர்ஆன் 39:5
சூரியன்
குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கிறது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில்
கூறுகிறது. ஏனைய எல்லா கோள்களும் இவ்வாறே ஓடுவதாகவும் திருக்குர்அன் கூறுகிறது.
OCTOBER- 2015
பாவ மன்னிப்பு
'உங்கள் இறைவனிடம்
மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான். உங்களுக்கு அவன் தொடர்ந்து
மழையை அனுப்புவான். செல்வங்கள் மூலமும், மக்கள் மூலமும் உங்களுக்கு உதவுவான். உங்களுக்காகச்
சோலைகளை ஏற்படுத்துவான். உங்களுக்காக நதிகளையும் ஏற்படுத்துவான். (அல்குர்ஆன்
71:10,11,12)
அவர்கள்
வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை
நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத்தவிர பாவங்களை
மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க
மாட்டார்கள்' (அல்குர்ஆன் 3:135)
'யாரேனும்
தீமையைச்செய்து அல்லது தமக்குத் தாமே தீங்கிழைத்து பின்னர் அல்லாஹ்விடம் பாவ
மன்னிப்புத் தேடினால், அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் அவர்
காண்பார்' (அல்குர்ஆன் 4:110)
'அவர்கள்
அல்லாஹ்விடம் திரும்பி, அவனிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா? அல்லாஹ்
மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன்'
(அல்குர்ஆன் 5:74)
அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'நமது இறைவன் ஒவ்வொரு
இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது,
'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும்
என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கின்றேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு
கோரினால் அவரை நான் மன்னிக்கின்றேன்' என்று கூறுவான்.
சுத்த சன்மார்க்கத்தில்
"பாவம்" என்பது என்னவெனில், "ஜீவகாருண்யம் இல்லாமை" ஆகும். அதாவது
பிற ஜீவனிடத்தில் அன்பின்றி துன்பம் செய்விக்கும் எச்செயலும் பாவம் என்கின்றது சுத்த
சன்மார்க்கம். இதற்கு மன்னிப்பு என்பதே கிடையாது. தண்டனைதான் உண்டு. இவர்கள் தங்களது
மறுபிறவியில்,
"அவரவர் கடின செய்கைக்குத்
தக்கபடி, சிலர் நரக வாசிகளாகவும், சிலர் சமுத்திர வாசிகளாகவும், சிலர் ஆரண்ய வாசிகளாகவும்,
சிலர் புலி, கரடி, சிங்கம், யாளி, யானை, கடமை, கடா, பன்றி, நாய், பூனை முதலிய துஷ்ட
மிருகங்களாகவும், சிலர் பாம்பு, தேள் முதலிய விஷ ஜெந்துக்களாகவும், சிலர் காக்கை, கழுகு
முதலிய பட்சி சண்டாளங்களாகவும், சிலர் எட்டி, கள்ளி முதலிய அசுத்த தாவரங்களாகவும் பிறப்பர்"
(ஜீவகாருண்ய ஒழுக்கம்)
பிற உயிரை கொலை செய்வது விஷேச பாவம் என்பார் வள்ளற்பெருமான். எனவே சுத்த சன்மார்க்கத்தில்
பாவ மன்னிப்பு என்பதே கிடையாது.
NOVEMBER - 2015
இஸ்லாம்
தர்மம்
என்பது என்ன? நபி அவர்களின் விளக்கம்:
முஹம்மத் நபி:
தர்மம் செய்வது எல்லா இஸ்லாமியர்களும் செய்யக்கூடிய கடமையாகும்.
மக்கள்:
ஒருவருக்கு தர்மம் செய்ய எதுவும் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?
நபி: அவர் தம்
இரு கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார், தர்மம் செய்து பிறரையும் பயனடைய
செய்வார்.
மக்கள்:
அவருக்கு உழைக்க தெம்பு இல்லையென்றால் அல்லது அவர் அதை செய்ய இயலாவிட்டால் என்ன
செய்வது?
நபி:
பாதிக்கப்பட்ட தேவையுடையோருக்கு அவர் உதவட்டும்.
மக்கள்:
இதையும் அவர் செய்ய இயலவில்லை என்றால்...?
நபி: அவர்
நற்காரியங்கள் செய்யும்படி பிறரை ஏவட்டும்.
மக்கள்:
இதையும் அவர் செய்யாவிட்டால்...?
நபி: அவர்
பிறருக்கு எதுவும் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்.
(புகாரி, ஹதீஸ்-6022)
நபி அவர்கள்
கூறியது போல, பிறருக்கு / பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமல் இருப்பதுவே மேலான
தர்மம் ஆகும். இதனையே சுத்த சன்மார்க்கமும், "தர்மமென்பது காருண்யம், தயவு, அருள்" என்கின்றது. மேலும் சுத்த சன்மார்க்கம் தர்மத்தை பற்றி
கூறும்போது, "தர்மமென்பதற்குப்பொருள் சீவதர்மம், குலதர்மம், சாஸ்திர தர்மம், ஆசாரதர்மம், ஆசிரம தர்மம், சாதிதர்மம் முதலியவாக விரியும்.
இதில் அதிணுண்மை அதின் தன்மை... தன்மை என்பது அதின் சுபாவம். சுபாவமென்பது
இயற்கைக் குணம். அதுவென்பது ஆன்மா. ஆதலால், ஆன்மாவுக்கு இயற்கைக் குணம் தயை.
ஆன்மாவின் இயற்கையென்பதே தர்மத்திற்குப் பொருள். ஆன்ம இயற்கையோடு இருந்தால்
சிவமாகலாம். இதைப் பலவாகத் தர்மமென்று பெயரிட்டார்கள் தருமத்தோடு கூடியவன் தேக நஷ்டத்தை அடையமாட்டான்"
என்கின்றது
ஜீவகாருண்யமின்றி கொடுக்கப்படும் எந்த ஒரு பொருளும் தர்மம்
அல்ல, அது அதர்மம். எனவே தர்மம் என்பது ஒரு பொருளை பிறருக்கு இனாமாக கொடுத்து
உதவுவது என்பதிலிருந்து தொடங்கி ஜீவகாருண்யம், தயவு, அருள் என்கின்ற பெருங்குணத்தை
ஒருவன் அடைவதில் நிறைவடையும். அந்த நிறைவே மரணமிலா பெருவாழ்வை கொடுக்க வல்லது.
லஞ்சம் கொடுப்பவரா / வாங்குபரா நீங்கள்?
உங்களுடைய
செல்வங்களை, உங்களுக்கிடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே
மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணுவதற்காக
அவற்றை அதிகாரிகளிடம் கொண்டும் செல்லாதீர்கள். (அல்குரான் 2:188)
தீர்ப்புக்காக
லஞ்சம் கொடுப்பவனையும் லஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ் சபிப்பான் என்று நபி அவர்கள்
கூறுகின்றார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)
லஞ்சம் என்பது,
தாகத்திற்கு பழச்சாறு குடிப்பது போன்று ஒரு அதிகாரச் சுவையை அனுபவித்து, அதன்மூலம்
தமது வசதியை பெருக்கிக்கொள்கின்றார்கள். இதனால் வருகின்ற பாவமானது நமது ஆன்மாவை
நட்டமடைய செய்யும் என்பதை பலர் அறிந்தும், தெரிந்தே இச்செயலை செய்கின்றனர். இதனையே
"தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ" என்பார் வள்ளலார்.
"சத்தியம்
தெரியாது சகத்தில் வாழ்ந்தேனோ", "ஊழல் பல செய்து உலகினில்
கொழுத்தேனோ", "இலஞ்சம் வாங்கி அரசு நடத்தினேனோ", பணம் கொடுத்து
பாமரரிடம்வாக்கு பெற்றேனோ", "பதவி சுகத்தில் பாவம் செய்தேனோ",
"இலஞ்சம் கொடுத்து அராஜகம் செய்தேனோ", "இலஞ்சம் வாங்கி ஊழியம்
செய்தேனோ", "வாங்கிய பணத்திற்காக வாக்களித் தேனோ",
"பணத்திற்காக திருடனை பாசமுடன் தப்பவிட்டேனோ", "பணம் கொடுத்து
புணர்ந் தெழுந்தேனோ", "தருமம் வாங்கி திருமணம் செய்தேனோ" போன்ற
பாவக்காரியங்களை செய்யாமல் இருக்க வேண்டும் என்கின்றது இஸ்லாம்.
======================================================================
DECEMBER - 2015
மிலாடி நபி
அரபு நாட்டில் கி.பி.570 ரபியுல் அவ்வல் மாதம்
12-ஆம் தேதி மெக்கா நகரில் நபி நாயகம் பிறந்தார். அல்லாஹ் என்பவன்தான் நமக்கெல்லாம்
இருக்கும் ஓர் இறைவன் என்றார். தனது 40-ஆம் வயதில், நானே அல்லாஹ்வால் இப்பூமிக்கு அனுப்பட்ட
இறுதித் தூதர் என்றும் சொல்லிக்கொண்டார். இவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது. அல்லாஹ்
இவர்மூலம் ஓத, அதனை மற்றவர்கள் அப்படியே எழுதி வைத்ததுதான் திருக்குரான் என்கின்றனர்.
இந்நூலின் மூலம் இஸ்லாம் மார்க்கம் உதயமானது.
நபி அவர்கள் தனது 23-ஆம் வயதில் கதீஜா (ரலி)
அம்மையாரை திருமணம் செய்துக்கொண்டார்கள். இவருக்கு 11 மனைவிமார்கள் இருந்தனர். இவர்கள்
மூலம் மொத்தம் 7 குழந்தைகள் பிறந்தனர். இவர்களில் 3 ஆண் குழந்தைகளும் குழந்தைப் பருவத்திலேயே
இறந்துவிட்டன. மீதம் 4 பெண் குழந்தைகளில் நான்காவதாக பிறந்த பாத்திமா (ரலி) அவர்கள்தான்
இவருக்கு 2 பேரன்களைப் பெற்றுத்தந்தார்.
நபி அவர்கள், நான் இறை தூதர் என அறிவித்துக்கொண்டதும்,
மெக்கா வாசிகள் அவரை கொடுமை செய்தனர். தமது 53-ஆம் வயதுவரை அக்கொடுமைகளை தாங்கிக்கொண்டார்.
அதன்பிறகு மெக்கா நகரை விட்டு 450 கி.மீ. தூரத்தில் உள்ள மெதினா நகருக்கு குடிபெயர்ந்தார்.
மெதினாவில் இவருடைய போதனையை மக்கள் பெரிய அளவில் ஏற்றுக்கொண்டனர். எனவே அங்கிருந்து
மெக்காவிற்கு பல முறை போர் தொடுத்து, போரின் மூலம் மெக்கா மக்களை இஸ்லாமை ஏற்க வைத்தார்.
தமது 63-ஆம் வயதில், இவர் பிறந்த அதே ரபுயுல்
அவ்வல் மாதம் 12-ஆம் தேதியில் இவருடைய மரணமும் நிகழ்ந்தது. இந்த நாளையே மிலாடி நபி
(நபியின் பிறந்த நாள்) என்கிறோம்.
"5:3.
(தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன்
மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும்,
கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற)
விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன;"
"(அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள்
(உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும்
பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்;
அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும்
(பெரும்) பாவங்களாகும்;"
"இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை
(அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு
அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக;"
"இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை
பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி
விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;"
"ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும்
நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப்
புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும்,
கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்."
அல்லாஹ் என்னும் இறைவன் நபி நாயகம் மூலம் ஓத,
அதனை அப்படியே பிறர் எழுதி வைத்ததுதான் மேற்கண்ட போதனைகள். சுத்த சன்மார்க்கப் போதனையுடனும்,
திருக்குறளுடனும் மேற்கண்ட இஸ்லாமிய போதனையை ஒப்பிட்டுப் பார்த்தால், எது அன்பு மார்க்கம்
என்பது மிக எளிதில் புரிந்துவிடும்.
மனிதன் தமது உணவிற்காக விலங்கினங்களை கொன்று
உண்ணலாம் என்கிறது இஸ்லாம். இத்தகைய போதனைகளை நம்பி, இன்றைக்கும் நமது மனித இனம் விலங்குகளை
அறுத்து உண்கிறதை நினைக்கும்போது உள்ளம் நடுங்குகிறது. சில இஸ்லாமியர்கள் மேற்கண்ட
போதனையை பிழை என்று உணர்ந்து, புலால் உணவினை விட்டுவிட்டு அதே இஸ்லாமை பின்பற்றுகின்றனர்.
அத்தகைய இஸ்லாமியர்களை இந்த சன்மார்க்க விவேக விருத்தி வாழ்த்துகிறது.
"சமயமத சாத்திரங்களில் அனேக இடத்தில்
பிழைகளிருக்கின்றன. அதற்குக் காரணம் அவற்றை இயற்றியவர்கள் மாயையின் சம்பந்தத்தை
அடைந்திருந்தவர்கள். ஆகையால் முன்னுக்குப் பின் மறைப்புண்டு தப்புகள்
நேரிட்டிருக்கின்றன. மாயையை வென்ற சுத்த ஞானிகளுக்கல்லது மற்றவர்களுக்குப் பிழையற
இயற்ற முடியாது. அந்தப் பிழைகள் சுத்தசன்மார்க்கம் விளங்குகின்ற காலத்தில்
வெளிப்படும்." என்கிறார் வள்ளற்பிரான்.
தி.ம.இராமலிங்கம்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.