Saturday, December 26, 2015

ஆசிரியரின் தலையங்கம்



"சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
ஆசிரியரின் தலையங்கம்

AUGUST - 2015

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் 


      ராமேஸ்வரத்தில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் 1931-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி "அவுல்பக்கிர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம்" என்னும் ஒளி உதயம் ஆனது. தான் கற்ற அறிவியல் பாடம் அவரை உச்சத்திற்கு அழைத்துச் சென்றது. இதன் காரணமாக அவர் நமது நாட்டின் 11-வது குடியரசுத் தலைவரானார். அங்கும் அவர் "மக்கள் ஜனாதிபதி" என்ற ஒரு தனித்த உச்சத்தை அடைந்து தனது ஒளியின் பிரகாசத்தை நிரூபித்துக்காட்டினார். இந்தியாவை பொருளாதாரத்தில் உயர்த்துவதற்காக, தான் எங்குச் சென்றாலும் அங்குள்ள மாணவர்களிடம் கலந்துரையாடி தனது கனவு என்னும் கதிர்வீச்சை இளைஞர்களிடம் செலுத்தினார். தமிழை மிகவும் நேசித்த அவர், தமது உரையாடலின் போது இடையிடையே திருக்குறளை முழங்கவும் தவறவில்லை. உயிர்களை அழிக்கும் அணுகுண்டு சோதனையை பொக்ரானில் நடத்தியதிற்கு இவர் ஒரு முக்கிய காரணமாக இருந்தார், என்பதால் அன்றய தினம் "புத்தர் சிரித்தார்". அணுகுண்டினை எடுத்துச்சென்றுத் தாக்க பலவகையான ஏவுகணைகளை இவர் வடிவமைத்து வெற்றிகண்டார். இதனால் இவருக்கு "இந்தியாவின் ஏவுகணை நாயகன்" எனவும் பெயர். இந்தியாவின் முன்னேற்றம் கருதி அவர் திருமணமும் செய்து கொள்ளவில்லை. உயிர்களிடை கருணை கொண்டதால், இவர் ஒரு இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தாலும் இறுதிவரை சைவ உணவினையே உட்கொண்டதனால், அந்த சிறுஒளியானது, வள்ளலார் கூறிய "அக இனத்தார்" என்ற சன்மார்க்கப் பேரொளியானது. தமது 84-ஆம் வயதில், 27-ஆம் தேதி ஜூலை மாதம் 2015-ஆண்டு மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் மாணவர்களிடையே உரையாடிக்கொண்டிருக்கையில் அப்பேரொளி விண்ணில் கலந்தது. அவரால் உருவாக்கப்பட்ட ஏவுகணைகள் மற்ற நாடுகளை அச்சுறுத்துமே ஒழிய ஒருபோதும் அணுகுண்டினை எடுத்துச்சென்று உயிர்களை அழிக்காது என்று நம்புவோம். எதிரிகளை அச்சுறுத்தாலாமே ஒழிய அழிக்கக் கூடாது.   

சசி பெருமாள் 


       ந்தியாவின் தந்தை மகாத்மா காந்தி அவர்கள் நமக்கு சுதந்தரம் வாங்கித் தந்து 67 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால் அவரின் முக்கிய கனவான "மது ஒழிப்பு" என்பது இன்றய அளவில் இந்தியாவில் இருந்து ஒழிக்க முடியவில்லை. திரு.சசிபெருமாள் என்பவர் நாடு முழுவதும் மதுவிலக்கை அமுல் படுத்த வேண்டும் என்று, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் சசி பெருமாள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கினார். 37-நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தும், இவரின் காந்திய சிந்தனை என்னும் காந்தம் வலுவிழக்கும் அளவிற்கு அரசு என்னும் இரும்பு தடித்து இருக்கின்றது. இவர் மிகவும் சதாரண குடும்பத்தில் பிறந்து, தமது 16-வது வயதிலிருந்தே மதுவிற்கு எதிராக தன்னந்தனியாக போராடத்துவங்கினார். சமுதாய மக்கள் நலனிற்காகவே தமது நலனையும் பொருட்படுத்தாது, தமது முதிய வயதில் மது ஒழிப்புப் போராட்டத்தின் போதே தமது இன்னுயிரையும் இழந்தார். அவரின் சுத்த ஆன்மா மேன்மையடையும் என்பதில் சந்தேகமில்லை. சுத்த சன்மார்க்க காலம் தற்போது நடைபெற்று வருவதால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மது என்னும் மாயை மறையத்தொடங்கும். அதற்குண்டான இளைஞர்களின் எழுச்சி ஆரம்பமாகிவிட்டது. "பஞ்ச மகா பாவங்களான கள், காமம், கொலை, களவு, பொய் இவ்வைந்தும் கொடிய துக்கத்தை உண்டுபண்ணும். இவ்வைந்திலும் கொலை விசேஷ பாவம். எனினும், கள்ளுண்டவனுக்குக் காமம் உண்டாகாமலிருக்காது, கொலை செய்யத்துணிவு வாராமலிருக்காது, களவு செய்யாமலிரான், பொய் பேச அஞ்சான், ஆகையால், இந்த ஐந்தையும் ஒழிக்க வேண்டியது அவசியம். இதில் ஒன்றை அடைந்தவ னானாலும் அவனை மற்றவை தொடராம லிரா." என்ற வள்ளலாரின் வாக்கினை நினைவுப்படுத்தி நம்மில் மது அருந்துபவர் இருந்தால் தயவு செய்து நமது குடும்பம் மற்றும் நமது சமுதாய நலனிற்காக அம்மதுவினை விட்டு ஒழிப்போம். நல்ல இந்திய குடிமகனாக இருந்து இந்நாட்டினையும் வீட்டினையும் உயர்த்துவதுடன் நமது அரசினையும் இதன்மூலம் திருத்துவோம்.     

யாகூப் மேனன் 


மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி யாகூப் மேனன் தமது 53-வது பிறந்த நாளில் 30-07-2015 நாக்பூர் சிறையில் சாகும்வரை தூக்கிலப்பட்டார். இத்தூக்கு தண்டனையை தவிர்ப்பதற்காக இவரின் வழக்கறிஞர்கள் பலமுறை கருணை மனுக்களை அரசிடமும் நீதி மன்றங்களிலும் கொடுத்தும் பலனளிக்கவில்லை. யாகூப் மேனனுக்காக, இந்தியாவிலேயே முதன்முறையாக அதிகாலை 03.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இவ்வாறு நடைபெற்ற இந்த தூக்குதண்டனைப் பற்றி பலர் பலக்கருத்துக்களை கூறிவருகின்றனர். காந்தியின் பேரன் 29-07-2015 அன்று குடியரசுத்தலைவருக்கு அனுப்பியதாகக் கூறப்படும் கடிதத்தில் “யாகூப் மேனனின் தூக்கை ரத்து செய்வதே மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமுக்கு செய்யும் அஞ்சலியாகும்” எனக் கூறியிருந்தார். அதையும் தாண்டி அவசர அவசரமாக அனைத்து கருணை மனுக்களையும் நிராகரித்து ஒரு உயிரை தூக்கிலேற்றியிருக்கிறது இந்திய அரசாங்கம். நாம் இங்கு முன்னிலைப் படுத்தும் கேள்வியானது, தூக்குதண்டனை தேவையா? என்பதே. மரண தண்டனை சட்ட ஏடுகலிலிருந்து நீக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை பலமுறை தீர்மானம் கொண்டுவந்துள்ளது. தற்போது இச்சபையில் 192 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அதில் 142  நாடுகளில் மரண தண்டனையை தங்களது சட்ட ஏடுகளிலிருந்து நீக்கிவிட்டன. கடந்த ஜூன் மாதம் (2015) டோகோ என்ற நாடும் மரண தண்டனை கொடுப்பதிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டது. அகிம்சை முறையில் நடைபயிலும் நமது நாடும் இந்த மரண தண்டனை கொடுக்கும் பழக்கத்தை விடுத்துவிட வேண்டும். கொல்லாமை சமுதாயத்தை அரசே முன்னெடுத்து நடத்த வேண்டும். மரண தண்டனைக்குப் பதிலாக, சாகும் வரை சிறையில் அடைக்கலாம் அல்லது குறிப்பிட்ட நபரை மருத்துவ துறைக்கு அற்பணித்தால் அங்கு நடைபெறும் பல்வேறு எதிர்கால விஞ்ஞான ஆராய்ச்சிக்கு அவரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்திய சுதந்தர தினம் 


மது இந்திய நாடு சுதந்தரம் பெற்று 69-வது சுதந்தர தினத்தை இந்த 2015-ஆம் ஆண்டு கொண்டாடப் போகின்றது. 24,820 நாட்களை சுதந்தர இந்தியா கண்டுவிட்டது. ஐந்தாண்டுத் திட்டங்கள், வெண்மை புரட்சி, பசுமை புரட்சி போன்ற பலத் திட்டங்கள் கடந்தோடிவிட்டன. ஆனால் இன்னும் வறுமை கோட்டிற்கும் கீழ் நமது இந்திய மக்கள் வசித்துவருவது வேதனை அளிக்கின்றது. ஒரு பக்கம் இந்தியா முன்னேறி கொண்டிருப்பதாகக் காட்சி அளித்தாலும் மறுபக்கம் விவசாயிகளின் தற்கொலையும் நடக்கின்றதைப் பார்க்கின்றோம். கிராமவாசிகள் பல்வேறு காரணங்களுக்காக நகரங்களில் குடியேறும் நிலமைக்கு, இந்தச் சுதந்தர அரசு கிராமப்புறங்களை புறக்கணிக்கின்றது. காந்திய வழிகள் பின்பற்றப்படவில்லை. அடிதட்டு மக்களுக்கு கிடைக்கக் கூடிய பொருளாதார வசதிகளை, அரசியல் வாதிகளின் திறமையான ஊழலால் சுரண்டப்பட்டுவிடப்படுகின்றது. அரசு அலுவலகங்களில் இலஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு சிறிய வேலையும் பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை. வழக்காடு மன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கின் எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டே செல்கின்றது. ஒருவரால் போடப்படும் வழக்கு அவரது பெயரன் காலத்திலும் முடிவதாகத் தெரியவில்லை. மக்கள் உண்ணும் உணவு எதுவாகினும் அது கலப்படமாகத்தான் உள்ளது. அதனைத் தீர்க்க இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கின்றது? இந்தியா முழுவதும் மதுவிலக்கு ஏன் இன்னும் கொண்டுவரப் படவில்லை? இப்படி இந்திய சுதந்தரம் பற்றி பேசினாலே பல குறைகளே நமது மனதில் வந்து செல்கிறது இல்லையா? இருந்தும் நாம் முன்னேறிக்கொண்டுதான் இருக்கின்றோம். திரு.ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் இருபது இருபது (2020-ஆம் ஆண்டு) கனவு பலிக்குமா என்பதனைப் பார்ப்போம். அதற்காக நாமும் உழைப்போமென்று வருகின்ற 69-வது சுதந்தர தினத்தன்று உறுதி ஏற்போம். உங்கள் அனைவருக்கும் எமது சுதந்தர தினநல் வாழ்த்துக்கள்.
தி.ம.இராமலிங்கம்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.