"சன்மார்க்க
விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
ஆசிரியரின்
தலையங்கம்
NOVEMBER - 2015
அமராவதி
கடந்த 2000-ஆம் ஆண்டில் மத்திய பிரதேசத்திலிருந்து சட்டிஷ்கர்,
பீகார் மாநிலத்திலிருந்து ஜார்க்கண்ட், உத்திரப்பிரதேசத்திலிருந்து உத்திராஞ்சல்
ஆகிய மூன்று புதிய மாநிலங்கள் நமது இந்தியாவில் உருவாகின. அன்றைய காலக்கட்டத்தில்
இல்லாத ஒரு எழுச்சியும் குழப்பமும் 2014-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்திலிருந்து
தெலுங்கானாவை இந்தியாவின் 29-ஆவது மாநிலமாக பிரிந்தபோது ஏற்பட்டது.
தெலுங்கானா மக்கள் இந்தப் பிரிவினையை மிகவும் மகிழ்ச்சியாக
கொண்டாடினர். அதே நேரத்தில் ஆந்திர மக்கள் (சீமாந்திரா) தமது மாநிலம் இரண்டாக
பிரிக்கப்பட்டதை துக்க நாளாக அனுசரித்தனர். 1969-ஆம் ஆண்டு ஆரம்பித்த தெலுங்கானா
தனி மாநிலக் கோரிக்கை பல போராட்டங்களுக்குப் பின்னர் 2014-ஆம் ஆண்டு நிறைவேறியது.
2009-ஆம் ஆண்டு தனித்தெலுங்கானா உருவாக்கத்திற்காக தெராச தலைவர்
கே.சந்திரசேர் ராவ் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இதனைத் தொடர்ந்து பெரும்
வன்முறை வெடித்தது. இதனால் தனித்தெலுங்கானா உருவாக்கப்படும் என அப்போதைய மத்திய
உள்துறை அமைச்சர் திரு.ப.சிதம்பரம் (காங்கிரஸ்) அவர்கள் அறிக்கை வெளியிட்டார்.
இதன்படி 2014-பிப்ரவரி மாதம் தெலுங்கானா உதயமானது.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தபோது, இந்தியாவிலேயே முதலில்
ஏற்பட்ட மாநிலம் இந்த ஆந்திரா மாநிலம்தான். தெலுங்கு மொழி பேசும் மக்களைக் கொண்ட
நிசாம் ஆட்சியின் கீழிருந்த ஒன்பது மாவட்டங்கள், மதராஸ் மாகாணத்தில் இருந்த
பன்னிரண்டு மாவட்டங்கள், பிரஞ்சு ஏனாமில் இருந்த ஒரு மாவட்டம் ஆகியவை இணைந்து
அன்றைய ஆந்திரா உருவாகியது.
அங்கே
மொழி ஒன்றாக இருந்தபோதும் சீமாந்திரா மக்கள் என்றும் தெலுங்கானா மக்கள் என்றும்
அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டனர். சீமாந்திரா மக்கள் (தற்போதய
ஆந்திரா) தெலுங்கானா மக்களைவிட தாங்கள் கலாச்சாரத்தாலும் கல்வியாலும்
பண்பாட்டாலும் உயர்ந்தவர்கள் என்று கருதினர். அன்றைய ஆந்திராவில் தயாரிக்கப்பட்ட
திரைப்படங்களில் சீமாந்திரா மக்கள் கதாநாயர்களாகவும் தெலுங்கானா மக்கள்
வில்லன்களாகவும் சித்தரிக்கப்பட்டனர். தெலுங்கானா மக்கள் தெலுங்குத்
திரைப்படங்களில் கதாநாயர்களாக நடிக்க அனுமதிக்கப்படுவதில்லை.
தெலுங்கானா மக்கள் கொண்டாடும் "பட்டுக்கம" என்னும்
பண்டிகையை அன்றைய ஆந்திர அரசு புறக்கணித்தது. தெலங்கான மக்கள் நவராத்திரி
விழாவிற்கும் சீமந்திரா மக்கள் தைமாதத்தில் வரும் மகர சங்கிராந்திக்கும்
முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தெலங்கானா மக்கள் சீமந்திரா மக்களை
ஏமாற்றுக்காரர்களாகவும் பணத்தாசை பிடித்தவர்களாகவும் கருதுகின்றனர். தெலங்கானா
மக்கள் தம்மை கள்ளம் கபடமற்றவர்களாகவும் மரபு வழி முறையில் ஒழுகுபவர்களாகும்
கருதுகின்றனர். சீமந்திரா மக்கள் தாம் கடின உழைப்பாளிகள் எனவும் தெலங்கானா மக்கள்
சோம்பேறிகள் எனவும் கருதுகின்றனர். சீமந்திராவில் உள்ள தலித்துக்கள் தாம்
தெலங்கானாத் தலித்துக்களிலும் பார்க்க மேன்மையானவர்கள் எனக் கருதுகின்றனர். தெலங்கானா
மும்பையத் தலைநகராகக் கொண்ட மகாராஸ்ட்ரா மாநிலத்திற்கு அண்மையாகவும் சீமந்திரா
பிரதேசம் தமிழ்நாட்டுக்கு அண்மையாகவும் இருப்பதால் இவர்களின் மொழிவழக்கில் சிறிய
வேறுபாடு உண்டு. தெலங்கானா மக்களின் தெலுங்கு மொழியில் உருது மொழி கலந்துள்ளதாகக்
குற்றம் சாட்டுவதும் உண்டு. இவ்வாறு தற்போதய ஆந்திரா மக்கள் (சீமாந்திரா)
தெலுங்கானா மக்களை தாழ்ந்தவர்களாக கருதிவந்ததால் ஏற்பட்ட பிரிவினையே இந்த புதிய
தெலுங்கான மாநிலம்.
இருந்தாலும் தெலுங்கானாவிற்கு அன்றைய ஒன்றினைந்த ஆந்திரத் தலைநகர்
ஹைதராபாத் நகரமே தலைநகரமாக கிடைக்கப்பெற்றுவிட்டதால் அம்மாநிலத்திற்கு
வளர்ச்சிக்கான பொருளாதார பாதிப்பு ஏதுமில்லை என்பது அதன் அதிட்டம். தங்களை
உயர்வாகக் கருதிய சீமாந்திரா (இன்றைய ஆந்திரா) மக்களுக்கு தலைநகர் என்ற ஒன்றை
புதியதாக உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தாலும் இம்மாநிலத்திற்கு கோடி கோடியாக
கொட்டி கொடுக்கும் திருப்பதி நகரம் அவர்களோடு இருப்பதால் கொஞ்சம் நிம்மதியடையலாம்.
திருப்பதி நகரத்தையே புதிய தலைநகராக தேர்ந்தெடுத்திருக்கலாம். ஏனோ அதனை
செய்யவில்லை. ஒருவேளை அந்நகரம் சென்னைக்கு மிக அருகாமையில் இருப்பதால்
எதிர்காலத்தில் சில பிரச்சனைகள் வரலாம் என்று விட்டுவிட்டார்கள் எனத்
தோன்றுகின்றது.
எப்படியோ, ஆந்திர மாநில முதல்வர், தெலுங்கு தேசம் கட்சியைச்
சேர்ந்த, திரு.சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு, கிருஷ்ணா நதிக்கரையில்
அமைந்துள்ள அமராவதி பகுதியை, தலைநகராக தேர்ந்தெடுத்து, இந்நகரை சர்வதேச தரத்தில்
வடிவமைப்பதற்காக சிங்கப்பூர் அரசை கேட்டுக்கொண்டுள்ளது. சிங்கபூர் அரசும் இதற்கான
பெருந்திட்டத்தை போட்டு செயல்படுத்த முன்வந்துவிட்டனர்.
இந்நிலையில், அமராவதி நகரை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்நாட்டு
விழாவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், வள்ளலார் சித்திவளாகத்தில் கொடி
கட்டிக்கொண்டு பேருபதேசம் செய்த நாளான 22-10-2015 அன்று நடைபெற்று முடிந்துள்ளது.
இதற்காக நாடாளுமன்றத்திலிருந்து மண்ணும் யமுனை நதியிலிருந்து தண்ணீரும் பிரதமர்
நரேந்திர மோடி கொண்டுவந்தார் என்பது சிறப்பு. மத்திய அரசு (பாரதிய ஜனதா) எல்லா
வகையிலும் இப்புதிய நகரத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் என பிரதமர் தெரிவித்தார்.
இத்துடன் புதிய தலைநகருக்கான கட்டுமானத்தில், ஆந்திராவின் பதினாறாயிரம் கிராமங்கள்
மற்றும் நகரங்களின் மண், தண்ணீர் சேர்க்கப்பட உள்ளது. மேலும் ஆந்திராவில் ஓடும்
புனித நதிகளின் தண்ணீர், மானசரோவர், காசி, அஜ்மீர் தர்கா, மேடக் சர்ச் ஆகிய புனித
இடங்களிலிருந்து மண், தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. மறைந்த தலைவர்கள் மகாத்மா
காந்தி, சர்தார் பட்டேல், அம்பேத்கார், முன்னால் குடியரசு தலைவர் அப்துல் கலாம்
ஆகியோர் பிறந்த இடங்களிலிருந்து மண்ணும் தண்ணீரும் இந்த அமராவதி கட்டுமானத்தில்
சேர்க்கப்பட உள்ளது.
இந்தியாவின் ஐந்தாவது பெரிய மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் இருந்தது.
அதன் மக்கள் தொகை ஜேர்மனியின் மக்கள் தொகைக்கு ஒப்பானது. மற்ற நான்கு பெரிய
மாநிலங்களும் வடக்கில் இருக்கின்றன.
ஒன்றிணைந்த ஆந்திரப்பிரதேசத்தில் 84.6 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
இதில் தெலங்கான மக்கள் தொகை 35.28 மில்லியன்கள். இரு மாநிலங்களும் சிறிது காலம்
ஹைதராபாத்தை பொதுவான தலைநகராகக் கொள்வதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய மாநிலங்களில்
பொருளாதாரத்தில் முன்னேறும் மாநிலங்கள் என எடுத்துக்கொண்டால் சிறிய மாநிலங்களே
முன்னேறுகின்றன. அங்கே சிறப்பான ஆட்சியும் நடக்கின்றது. உதாரணமாக கேரளா, பஞ்சாப்,
ஹரியாணா, குஜராத், கோவா, டில்லி, புதுவை போன்றவற்றைக் கூறலாம். அளவில் பெரிய
பீகார், உத்திரபிரதேசம், மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான், அன்றைய ஆந்திரா, மஹாராஷ்டிரா,
மேற்கு வங்கம் போன்றவை பலவித சிக்கல்களில் பாதிக்கப்பட்டிருப்பதை நாம்
காண்கின்றோம். அவ்வகையில் தற்போத ஆந்திர பிரிவினால் தெலுங்கானாவும், புதிய
ஆந்திராவும் (சீமாந்திரா) வெகுவிரைவில் முன்னேற வாய்ப்பு கிடைத்திருப்பது உண்மை.
எனினும் ஒரே மொழிபேசுவோரில் தங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்துக்கொண்டு, அதனையே
மையமாக வைத்து தனிக்குடித்தனம் சென்றதை இந்த சன்மார்க்க விவேக விருத்தி
நியாயப்படுத்த விரும்பவில்லை.
பசு வதை
செப்டம்பர்-30-ஆம் தேதி உத்திரப் பிரதேசத்தில் கிரேட்டர்
நொய்டாவில் உள்ள தாத்ரி பகுதியில் ஒரு குடும்பம், பசுவதை (வதை - கொலை) செய்ததாக
எழுந்த வதந்தியை அடுத்து, ஐம்பது வயதுடைய இஸ்லாமியக் குடும்பத் தலைவர் இக்பால்
என்பவரை 200-க்கும் மேற்பட்ட ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்தது. இக்பாலின் மகன்
டானீஷ் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்செய்தி உலக அளவில் இந்தியாவின் பெயரினை சீரழித்தது. இந்திய
அரசியல் அமைப்புச் சட்டம் விதி 48-இல் பசுவதையைத் தடுப்பதற்கான சரத்துகள் அதில்
உள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு இன்று இந்தியா முழுதும் பசுவதை தடுப்புச்
சட்டத்தை நடைமுறை படுத்த இன்றைய மத்திய அரசு முனைகின்றது. சில மாநிலங்களில்
இச்சட்டம் அமலில் உள்ளது. பல மாநிலங்கள் அதனை எதிர்க்கின்றன. அப்படி என்னதான்
உள்ளது இந்தப் பசுவில்?
இந்து மத வேதங்களில் பசுவதை செய்ய தடையேதுமில்லை, அதாவது இந்து மத
வேதம் பசுவதை செய்தது. இடையில் அதே இந்து மதம் இந்தப் பசுவை புனிதமாகக் கொண்டு,
பசுவை கொலை செய்து உண்ணக்கூடாது என்று சொல்லி அதற்கான சட்டமும் நமது அரசியல்
அமைப்பில் சேர்த்தது.
தம்முடைய இளம் வயதில் இந்து மதத்தின்பால் தீவிர ஈடுபாட்டுடன்
இருந்த வள்ளற்பெருமான் கூட, தாம் எழுதிய மனுமுறை கண்ட வாசகம் என்ற நூலில் பசுவின்
புனிதத்தன்மையினை கீழ்காணுமாறு எடுத்துரைக்கின்றார்,
"பசு எல்லாப் பிறப்பிலும் உயர்வு உள்ளதென்றும் - அதன்
கொம்பின் அடியிலே பிரம் விஷ்ணுக்கள் இருக்கின்றார்கள் என்றும், காவிரி முதலான
புண்ணிய தீர்த்தங்கள் அந்தக் கொம்பின் நுனியில் இருக்கின்றன என்றும், சிவபெருமான்
சிரசிலும், சிவசக்தி நெற்றியிலும் இருக்கின்றார்கள் என்றும், சுப்பிரமணியக் கடவுள்
நாசியிலும், அசுவனித் தேவர் காதுகளிலும், சந்திர சூரியர் கண்களிலும், வருணன்
நாவிலும், சரஸ்வதி குரலிலும், கந்தருவர் மார்பிலும், இந்திரன் கழுத்திலும்,
உருத்திரர் முதுகிலும், சத்த மாதர்கள் குறியிலும், இலக்குமி குதத்திலும், கங்கை
மூத்திரத்திலும், பூமாதேவி வயிற்றிலும், யமுனை சாணத்திலும், திருப்பாற்கடல்
முலையிலும், யாகாக்கினி வயிறு முகம் இதயம் என்னும் உறுப்புகளிலும், அருந்ததி
முதலான கற்புள்ளவர்கள் உடம்பிலும் இருப்பார்கள் என்றும் சொல்லியிருக்கின்றதே.
அன்றியும், பரமசிவன் திருமுடிக்கு அபிஷேகம் செய்ய யோக்கியமான பால் முதலான
திரவியங்களைக் கொடுக்கின்றதே, அன்றியும், திரு வெண்ணீற்றின் காரணமான திரவியம்
பிறப்பதற்கும் இடமாகவும் இருக்கின்றதே, அன்றியும் நான்கு வேதமும் கால்களாகவும்,
கருமமும், ஞானமும் கண்களாகவும், ஆகமங்களும் சாத்திரங்களும் கொம்புகளாகவும், தருமமே
உடலாகவும், தவமே நடையாகவுங் கொண்டு பரமேசுவரனுக்கு வாகனமாக விளங்கிய தரும
இடபத்துக்கு இனமாகவும் இருக்கின்றதே, அப்படிப்பட்ட மேன்மையுள்ள பசுவை ஐயறிவுடைய
மிருக வர்க்கத்துள் ஒன்றென்று சொல்லல் தகுமோ?"
என்று சொல்லி, பசுங்கன்று ஒன்று இளவரசனின் தேரில் அதுவாகவே
ஓடிவந்து சக்கரத்தில் சிக்கி இறந்துவிடுகின்றது. அதற்காக அந்த மன்னன் தமது மகன்
என்றும் பாராமல் பசுவின் துயர் துடைக்க, அதே தேர் சக்கரத்தில் வைத்து இளவரசரைக்
கொன்றுவிடுவதாக இக்கதை சொல்கின்றது. இக்கதை மூலம் வள்ளற்பெருமான் நமக்கு கூறுவது
என்னவென்றால், "எவ்வுயிர்களிடத்தும் கொலைப் பாதகத்தைச் சமமாகக் கொள்ள
வேண்டும்" என்பதே.
இவ்வாக்கியத்தையும் வள்ளற்பெருமானே அந்நூலில் எழுதியும் உள்ளார்.
மேலும் இந்நூலில் என்ன பாவம் செய்தேனோ? என்று 43 பாவச் செயலை அடுக்குகிறார். அதில்
ஒன்றில் கூட பசுவதை செய்வது பாவம் என்று கூறவில்லை. பசுவதை செய்வது சிறப்பு பாவம்
என்றால், "பசுவதை செய்து பசி தவிர்த்தேனோ" என்று எழுதியிருப்பார். ஆனால்
அவ்வாறு எழுதவில்லை. அதற்காக பசுவதை புண்ணியம் என்று அர்த்தமில்லை.
வள்ளற்பெருமானின் பார்வையில் கொசு முதல் பசு வரை எதைக்கொன்றாலும் பாவம்தான்.
அதனால்தான் "ஊன்சுவை உண்டு உடல் வளர்த்தேனோ?" "உயிர்க்கொலை
செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ?" என்று உயிர் கொலையை பொதுவில் வைத்து, நாம்
எவ்வுயிரை எதன்பொருட்டுக் கொன்றாலும் அது பாவமே என்கிறார் வள்ளற்பெருமான். நீங்கள்
எதனை வேண்டுமானாலும் கொன்று சாப்பிடுங்கள், ஆனால் பசுவை மட்டும் கொன்று
சாப்பிடாதீர்கள் என்று வள்ளற்பெருமான் சொல்லவில்லை.
பசுவைப் பற்றி வள்ளற்பெருமான் மேற்காணுமாறு சிறப்புற சொன்னவை
எல்லாம், அவர் பிற்காலத்தில் மதங்களை கடந்து நடைபயிலும் போது அவை யாவும் பொய்யாக
போய்விடுகின்றன என்பதனை கவனிக்க வேண்டும். எனவே சுத்த சன்மார்க்கிகள் பசுவிற்கு
மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால், அது அறியாமை. சில சன்மார்க்க சங்கங்களில்
பசுக்களை வளர்ப்பதை நாம் பார்க்கின்றோம். அவர்களெல்லாம் சன்மார்க்கம் அறிந்தும்
மதத்தின்பால் கொண்ட பற்றால் பிழை செய்கின்றனர். சன்மார்க்கிகளுக்கு,
"எவ்வுயிரும் தம்முயிர்தான்" என்ற ஆன்ம நேயம்தான் முக்கியம். ஆன்ம
நேயத்தால் வருவதல்ல "பசு காப்பகம்". அப்படி வருமானால் நாம் பன்றிக்கும்
காப்பகம் வைக்க வேண்டிவரும். வைப்பீர்களா? வைத்தால் நல்லதுதான்.
இனி, இந்து மத வேதம் பசுவதை செய்ததை எல்லாம் இங்கு எழுத இடமில்லை.
எனினும் நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பார்வையில் பசுவதை என்பது எப்படி
இருந்தது என்பதையும் காண்போம்,
25-07-1947
25.7.1947 அன்று பிரார்த்தனைக்
கூட்டத்தில் மாட்டிறைச்சி விவகாரம்குறித்து காந்தி குறிப்பிட்டது, "நாளைய குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் மாட்டிறைச்சி தடைகோரும்
பல்லாயிரக்கணக்கிலான கடிதங்களை பெற்றுக்கொண்டுள்ளார். அவருடைய பதில் குழப்பமின்றி
இருக்கிறது.
அய்யத்துக்கிடமின்றி இந்துக்கள் பசுக்களை
கொல்லுவதை ஏற்கமாட்டார்கள். நீண்ட காலமாகவே பசுக்களுக்காக பணியாற்றுவதற்காக என்னை
ஒப்படைத்துக்கொண்டு இருந்துள்ளேன். ஆனால், என்னுடைய மதமே மற்ற இந்தியர்களுக்குமான
மதமாக எப்படி இருக்க முடியும்? இந்தியர்களிலேயே இந்துக்கள் அல்லாதவர்களுக்கு
எதிராக கட்டாயப் படுத்துவதாகவே பொருளாகும்.
கூரைமீது ஏறி மதத்தில் கட்டாயப்படுத்தவில்லை
என்று இரைச்சலுடன் கூறிக்கொள்கிறோம். பிரார்த்தனைக் கூட்டங்களில் குர்ஆன் வசனங்களை
எடுத்துக் கூறுகிறோம். ஆனால், எவராவது என்னிடம் நான் விரும்பாத பட்சத்தில்
இதைத்தான் கூறிட வேண்டும் என்று என்னைக் கட்டாயப்படுத்திவிட முடியுமா? ஒருவர்
தாமாக தள்ளாதபோது, அவரிடம் பசுவைக் கொல்லக்கூடாது என்பதை எப்படி என்னால் திணிக்க
முடியும்?
இந்திய யூனியனில் இந்துக்களாக மட்டும்தான்
இருக்கவேண்டும் என்பதில்லை. முசுலீம்கள்,
பார்சிக்கள், கிறித்தவர்கள் இன்னும் பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.
இந்துக்களின் நாடு என்று எண்ணிக்கொண்டு இந்துக்களின் நாடாகிவிட்டதாகவே கருதுவது
தவறானதாகும். இங்குவாழக்கூடிய அனைவருக்கும் உரியதாகும் இந்தியா’’ இவ்வாறு காந்தி
குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறுபட்ட முகங்கள் கொண்டது நமது இந்தியா என்றும்,
ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு பார்வை உடையதாய் உள்ளபோது, பார்க்கப்படும் பொருளின்
தன்மையை நாம் மாற்றவேண்டுமே யொழிய அப்பார்வைகளை நாம் குருடாக்கிவிடக் கூடாது
என்பதாய் உள்ளது காந்தியின் பார்வை. பொருளின் தன்மையை அறவழியில் கூறி
மாற்றவேண்டுமே யல்லாது சட்டத்தின் மூலமும் மூர்க்கத்தனமாகவும் மாற்றுவது
வன்முறையாகும்.
சவுதி அரேபியாவில் பன்றிகறிக்குத் தடை
இருக்கும்போது, மாட்டிறைச்சி சாப்பிட இந்தியாவில் எப்படி நாம் அனுமதிக்கலாம்?
என்றால், சவுதி அரேபியாவில் இஸ்லாமிய மதம் ஆள்கிறது. ஆனால் இந்தியாவில் இந்து மதமா
ஆள்கிறது? அப்படி இல்லை, வேண்டுமானால் இந்துக்கள் மட்டும் பசுவதை செய்யாமல் இருக்க
வேண்டியதுதான் நியாயம். தவறுதலாக இடம்பெற்றுள்ள பசுவதை தொடர்பான இந்திய
அரசியலமைப்புச் சட்டத்தை உடைக்க வேண்டுமே அல்லாது இந்திய மக்களின் மண்டைகளை நமக்கு
நாமே உடைத்துக்கொள்ளக் கூடாது.
காந்தி கூறும்போது, “இங்கே மாட்டிறைச்சியை
சட்டத்தைப்போட்டுத் தடைசெய்தால், பாகிஸ்தானில் அப்படியே மாற்றித்தானே நடக்கும்?
முடிவு என்ன வாக இருக்கும்? உருவ வழிபாடு ஷரியத் சட்டத்துக்கு எதிரானது ஆகவே,
இந்துக்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கமுடியாது என்று அவர்கள் சொன்னால் என்ன
ஆகும்? நான் கல்லில்கூட கடவுளைக் காண்ப தாக இருக்கட்டும், என் நம்பிக்கை காரணமாக
அடுத்தவரை எப்படி தொல்லை செய்யலாம்? என்னை கோயிலுக்கு செல்லக்கூடாது என்று தடுத்து
நிறுத் தினால், நான் தொடர்ந்து போகத்தானே செய்வேன்’’
1947
ஆம் ஆண்டில் இந்திய அரசமைப்பில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்க
சட்டம் இருக்கக்கூடாது என்று காந்தி வலியுறுத்தினார். ஆனால், அரசமைப் புச்சட்டம்
இறுதிவடிவம் பெறுவதற்கு முன்பாகவே இறந்துவிட்டார். அவர் கொல்லப்பட்டதிற்கு இதுவும்
ஒரு காரணம். இறுதி வடிவம் பெற்ற ஆவணத்தில் பசுவதையானது நேரடிக்கொள்கையாக
இணைக்கப்பட்டு மோசம் நடந்தேறிவிட்டது.
மாட்டிறைச்சி தடையைக் குறியாகக் கொண்டு பல்வேறு நிலைகள் ஏற்பட்டுவிட்டன.
மாட்டிறைச்சி ஏற்றுமதியை
தடுக்க வேண்டும் என்றும், பசும் பால் சைவமா? அசைவமா? என்றெல்லாம் விவாதிப்பதை
விட்டு விட்டு, முடிந்தால் உங்கள் இரக்கத்தை எல்லா உயிர்களிடத்தும் செலுத்துங்கள்.
அதுவே வள்ளற்பெருமான் கண்ட கனவு. இல்லையேல் - மனிதனுக்கு இறைவன் அனைத்து
சுதந்தரத்தையும் கொடுத்துள்ளான், அதனால் எதனை வேண்டுமானாலும் அடித்து தின்றுவிட்டு
அதன் பயனை அடுத்தப் பிறவியில் சந்தியுங்கள். வினை விதைத்தவன் வினையையே அறுப்பான்.
யாரையும் வற்புறுத்தி வருவதல்ல அறம், மனத்தின் கண் மாற்றமே அறம். ஆகவே பசுவதை
காரணத்திற்காக இந்து என்கிற இந்திய மக்களால், இஸ்லாமியர் என்கிற இந்தியர் இக்பால்
அவர்கள் வதையுண்டதை - சன்மார்க்க விவேக விருத்தி வன்மையாகக் கண்டிக்கின்றது. ===============================================================================
சிரியா செய்வது சரியா?
இன்றைய இஸ்லாமிய நாடுகள் என்று கூறிக்கொள்ளும் பெரும்பாண்மையான
நாடுகளும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டு அங்குள்ள மக்கள் கொலை
செய்யப்படுகின்றனர். அவ்வகையில் தற்போது இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான சிரியாவில்
உள்நாட்டுப் போர் மிக கொடூரமாக நடைபெற்று வருகின்றது. இப்போர், இந்நாட்டு அதிபர்
ஆசாதுக்கு எதிராக 2011-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை நடைபெற்று வருகின்றது.
உலகின் பழைய நகரங்களில் ஒன்றான தமஸ்கஸ் என்பதுதான் இந்நாட்டின் தலைநகரமாக உள்ளது.
சிரியாவை ஆளும் உரிமை ஆசாத்தின் குடும்பத்தினருக்கே உண்டு என்று
"என்றைக்கும் ஆசாத்" (Asad for ever) என்ற அரசியலமைப்பு கொள்கை அங்கே
உள்ளது. இதன்படி 60 சதவிகிதம் பாராளுமன்ற இருக்கைகள் பாத் கட்சிக்கு (ஆசாத்
குடும்பம்)ஒதுக்கப்படும். மீதமுள்ள 40 சதவிகித பாராளுமன்ற இருக்கைகளுக்கே தேர்தல்
நடைபெறும். இதன் மூலம் சிரியாவின் நிரந்தர ஆட்சியாளராக ஆசாத் குடும்பம் இருந்து
வருகின்றது.
ஆசாத் குடும்ப சிரியா அரசிற்கு நேச நாடான ஈரான் தனது முழு இராணுவ
ஆதரவை வழங்கி வருகிறது. மேலும் சிரியாவில் கிடைக்கும் குரூட் ஒயில், பெட்ரோலியம்
மற்றும் பருத்தி வளங்களை ஏகபோகமாக தாங்களே அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில்
ரஷ்யாவும் சீனாவும் ஒன்று கூடி அதே ஆசாத் குடும்ப அரசிற்கு ஆதரவு அளிக்கின்றன.
இதற்கிடையில், சீனாவும் ரஷ்யாவும் அந்த வளங்களை எடுத்துக்கொண்டு சென்றுவிடக்கூடாது
என்ற நோக்கில் அமெரிக்காவும் மிகவும் அதீதமாக அதே ஆசாத் குடும்ப சிரிய அரசிற்கு
இராணுவ ஆதரவை அளித்து வருகின்றது.
உள்நாட்டுப் போருக்கு பயந்து இதுவரையில் லட்சக்கணக்கான மக்கள்
அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். இவர்களின் நிலமையை
நாம் நாள்தோறும் செய்தித்தாளில் படிக்க, பகீர் என்கிறது நமது மனம். இவ்வுலகிலேயே
சிரிய அகதிகளைப்போன்று மிக அதிக அளவில் இதுவரை வேறு எந்த நாட்டிலிருந்தும் மக்கள்
புலம் பெயரவில்லை. புலம் பெயர்பவர்களும் அதிக அளவில் சுன்னி இஸ்லாமியர்களாகத்தான்
இருக்க முடியும். ஆகவே இவர்கள் உள்நாட்டில் தங்களது கிளர்ச்சியினை முடித்துக்கொண்டு
அமைதியாக இருப்பதே தற்போதைக்கு நல்லது.
மூன்று வல்லரசு நாடுகள் சிரியா அரசுக்கு ஆதரவாக இருக்கையில்
கிளர்ச்சிப் படைகள் அரசுக்கு எதிராக என்னதான் செய்யமுடியும், தாங்கள் உயிர்
துறப்பதை அன்றி!! உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ அல்லாமல் மற்ற இஸ்லாமிய நாடுகள்
எல்லாம் என்னவாகின? அவைகள் ஏன் அமைதி காக்கின்றன? எனத் தெரியவில்லை. அரபு லீக்
அமைப்பின் வெளியுறவு அமைச்சர் மட்டும் தற்போது சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தை
பதவி விலகும்படி அழுத்தம் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.
ஆயினும், சிரியக்
கிளர்ச்சிப்படைகள் தற்போது தங்களது அரசிற்கு அடங்கியிருந்து தக்க காலம் வந்தவுடன்
தங்களது அரசை அகிம்சை முறையில் எதிர்க்கவேண்டும். அகிம்சை முறையில் எதிர்க்கும்
போது, எந்த வல்லரசு நாடுகளும் அங்கே தலைகாட்ட முடியாது. மேலும் உலக நாடுகள் பலவும்
கிளர்ச்சிகாரர்களுக்கு அப்போது பக்கபலமாக இருக்கவும் வாய்ப்புள்ளது. சிரியாவில்
உள்ள பெண்களின் நிலமையினையும் குழந்தைகளின் நிலமையினையும் எண்ணிப்பார்த்து,
கிளர்ச்சியாளர்களான நீங்கள் அகிம்சை முறையில் உங்கள் அரசியல் அமைப்பை மாற்றுங்கள்.
இதுவே சன்மார்க்க விவேக விருத்தி உங்களுக்கு கூறும் தந்திரம். சிரியாவில் விரைவில்
அமைதி திரும்ப அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள்வாராக.
பருப்பு பதுக்கல்
சென்ற அக்டோபர் மாதத்தில் இந்தியா முழுதும் பருப்பின் விலை மூன்று
மடங்காக உயர்ந்தது. இதன் காரணமாக இந்தியாவில் வாழும் 90 சதவிகித நடுத்தர மக்கள்
மிகவும் பாதிப்படைந்தனர். விவசாயிகளிடம் உற்பத்தி இல்லை என்றே நடுவன் அரசு இதற்கான
காரணமாக முதலில் கூறியது. பின்னர்தான் நடுவன் அரசுக்குத் தெரியவந்தது ஒரு
மிகப்பெரிய பதுக்கல் மோசடி நடந்திருப்பது!!.
அதன் பிறகு 27-10-2015 வரை 8,24,62,530 கிலோ (82,462.53 MT)
பருப்புகளை பதுக்கல் காரர்களிடமிருந்து நடுவன் அரசின் முயற்சியால் மாநில அரசுகள்
மீட்டுள்ளன. இதனால் ஒரு சில வாரங்களில் பருப்பின் விலை குறையும் என நடுவன் அரசு
கூறியுள்ளது. நாட்டிலேயே பருப்பு பதுக்கல் திருடர்கள் அதிகமாக இருக்கும் மாநிலம்
மஹாராஷ்ட்டிரா ஆகும். 2492 முறை சோதனைகள் இட்டு, இம்மாநிலத்தில் மட்டும்
4,63,97,000 கிலோ பருப்பு பறிமுதல் செய்யப்பட்டது. அதாவது மொத்த பருப்பு
பதுக்கலில் இங்கு மட்டுமே பாதிக்கும் மேல் பதுக்கப்பட்டுள்ளது. மும்பை ஏன் வர்த்தக
தலைநகரமாக விளங்குகின்றது என்பது இப்போதுதான் நமக்குப் புரிகின்றது. தமிழகத்தில்
இதுவரை 29 முறை மட்டுமே சோதனை நடத்தி அதன் மூலம் 4,329 கிலோ பதுக்கல் பருப்பினை
பறிமுதல் செய்துள்ளனர்.
பதுக்கல்காரர்கள் யார் யார்? என்று இதுவரை இந்திய அரசு நாட்டு
மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை. தெரியப்படுத்துமா என்பதும் தெரியாது. மக்களும்
கேட்கமாட்டார்கள். நீதி மன்றமும் தாமே முன்வந்து வழக்குத் தொடுக்காது. பிறகு
யார்தான் இந்த பதுக்கல் காரனுக்கு தண்டனை கொடுப்பது என்பது மிகப்பெரிய
கேள்விக்குறி. நம்மைப்போன்ற பாமரனுக்கு, இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை
மட்டும் எப்போதும் இருக்கும்.
தி.ம.இராமலிங்கம்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.