Tuesday, December 6, 2016

குழந்தை பேறு

                                        குழந்தை பேறு

திருமணமான தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்றால் அவர்களுக்குள் இருக்கும் மன அழுத்தம் சொல்லி மாளாது. அவர்களுக்காகவே தன்வந்திரி தமது வைத்திய காவியம் என்னும் நூலில் குழந்தை வரம் கிடைக்க வழிவகை சொல்லியிருக்கின்றார்,

வாறான மங்கையர்கள் கெற்பமாக
        வறையுறேன் பசும்பாலும் வசம்புதானும்
நீறான விழுதியிலை மூலிதானும்
        நிலையான குப்பமேனி சமனாய்க்கூட்டி
காறான பால்தனிலே குழப்பியேதான்
        கனமாக விருவேளை கொண்டாயானால்
சேறான கிருமியது அற்றுப்போகும்
        செனிக்குமே பிள்ளையது செனிக்கும்பாரே.

செனிக்குமது பிள்ளையது பிறக்கும்பாரு
        தெளிவாகும் திரேகமது சொலிக்கும்பாரு
கனிக்குமே யிந்தமுறை பொய்யாதையா
        காசினியி லாருந்தான் சொல்லமாட்டார்
வனிக்குமே முறையோடே செய்தாயானால்
        மகாகோடி புண்ணியங்க ளெய்தும்பாரு
பனிக்குமே யிக்காவிய மதீதவித்தைப்
        பாடினேன் தன்வந்திரி பாடினேனே.

பசும்பால், வசம்பு, விழுதியிலை, குப்பைமேனி இவைகளை சம அளவாக சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்தக் கலவையை பசும்பாலில் கலந்து  காலை, மாலை உண்டு வர, கர்ப்ப கிருமிகள் நீங்கி குழந்தை பேறு உண்டாகும்.
இப்படி பிறக்கும் குழந்தையின் உடல் பொலிவாக இருப்பதுடன், சிறந்த புத்திசாலியாகவும் இருக்கும். மிகவும் அரிதான இந்த முறையை மற்றவர்கள் மறைத்து வைப்பார்கள். தன்வந்திரி இதனை பொதுவில் வைக்கிறேன். இது பொய்க்காது.

என்ன… அன்பர்களே… தன்வந்திரி சித்தரின் வைத்தியம் செய்து மழலை செல்வங்களை ஈட்டுங்கள். சந்தேகம் ஏதேனும் இருப்பின் சித்த வைத்தியரை தொடர்புகொள்ளுங்கள். விழுதியிலை என்பது என்ன? என எனக்குத் தெரியவில்லை. அதனை தக்கவரிடம் கேட்டு அறிந்துக்கொண்டால் மற்றது எளிதாகக் கிடைக்கூடியதுதான். செய்து பாருங்கள்… பலன் கிடைத்தால் மறக்காமல் பிறருக்கும் சொல்லுங்கள். உங்களுக்கு மகாகோடி புண்ணியம் கிடைக்கும்.



நீலகேசியின் நையாண்டி!

நீலகேசியின் நையாண்டி!

"நீலகேசி" என்னும் நூல், ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்றெனப் போற்றப்படுகிறது. இந்நூல் தருக்க வகையைச் சார்ந்தது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இந்நூலுக்கு "சமய திவாகர வாமன முனிவர்" என்பார் உரை எழுதியுள்ளார். இந்நூல் "குண்டலகேசி" என்னும் பெளத்த நூலுக்கு மறுப்பாக எழுந்த சமண நூல். இதன் காலம் யாது என்பதை திட்டவட்டமாக அறிய முடியவில்லை. இதன் எழுத்தமைதிக் கருதி இதனை கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு எனக் கருத இடமிருக்கிறது.

கதை சுருக்கம்:
"நீலகேசி" என்பவள் திருவளங்காடு பக்கத்தில் இருக்கும் பழையனூர் என்னும் ஊரில்வசித்து வந்த பேய். அப்பேய், சமண முனிவரான முனிசந்திர முனிவர் என்பவரிடம், சமண ஆகமங்களைக் கற்று, "திருவறம்" என்று அழைக்கப்படும் சமண அறத்தை நிலை நாட்ட உறுதிப் பூணுகிறாள். அவ்வாறே, மற்ற சமயத்தாரிடம் முன் சென்று அவர்களிடம் வாதுசெய்து, சமண அறத்தை நிலை நாட்டுகிறாள். இதுதான் "நீலகேசி"யின் கதைச் சுருக்கம்.

இங்கு ஒன்றைக் குறிக்க நினைக்கிறேன். இது சமய வரலாற்றாய்வில் மிகவும் முக்கியமானஒன்று. அது யாதெனின், நீலகேசி மற்ற சமயங்களிடம் வாது செய்தாள் என்று பார்த்தோம். அந்த சமயங்களாவன,

1.பெளத்தம்,
2.ஆசிவகம்,
3.சாங்கியம்,
4.வைசேடிகம்,
5.வேத மதம்,
6.பூத வாதம்.

மேற்குறிப்பிட்ட பட்டியலில், தற்போது பெருஞ்சமயங்களாக இருக்கும் சைவம், வைணவம் குறிக்கப்படவில்லையே என்ற கேள்விதான் அது? ஏன் குறிக்கப்படவில்லை. சிந்திக்க வைக்கும் கேள்விதான்? இல்லையா!
அக்கேள்விக்கு விடை பிறகுப் பார்ப்போம்.

"தீர்த்தன் திருநாமம் கொள்ளாத தேவுளவோ"!

முழுப்பாடல் விவரம்:

"பூர்ப்பம் பயந்தான் புகன்ற சுதக்கடலுட்
சார்த்திப் பிறவாத் தவநெறிக டாமுளவோ
சார்த்திப் பிறவாத் தவநெறிக டம்மேபோற்
றீர்த்தன் றிருநாமங் கொள்ளாத தேவுளதோ" - நீலகேசி (661)

"பூர்ப்பம் - பூர்வ+ஆகமம்,
சுதக்கடல் = சுருதக் கடல் = ஆகமக்கடல்".

- அருக பகவான் கூறிய ஆகம நெறிகளை (ஒழுக்க நெறிகளை) மற்ற சமயத்தார் எடுத்தியம்பிக் கொண்டது போல் அவனுக்குறிய திருநாமங்களைக் கூட தத்தம் கடவுளருக்குச் சூட்டிக் கொண்டார்கள் என்பது தான் மேலே சொன்ன பாடலின் பொருள்.

"தீர்த்தன் திருநாமம் கொள்ளாத தேவு (தெய்வம்) உளதோ" என்ற அடியில் பொதிந்திருக்கும் இலக்கிய நையாண்டிக் குறிப்பிடத்தக்கது.

இந்த அடியைப் படிக்கும் போதெல்லாம், தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், வளையாபதி, திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு போன்ற சமண நூற்களை, பின்னாளில், வலிந்து பொய்சமய சாயம் பூசியதையும், பிற்காலத்தில் சமணத் திருப்பதிகளை பிற சமயத் திருப்பதிகள் ஆக்கியதையும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

அம்மட்டோ, அருகன் திருப்பெயர்களைக்கூட பிற சமயத்தவர் உள்வாங்கி தத்தம் கடவுளருக்கு சூட்டிக் கொண்டதும் இங்கு நினைக்க வேண்டியிருக்கிறது.

காட்டாக, "திருக்குறளில்" கடவுள் வாழ்த்தில் வரும் "எண்குணன்" என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இப்பெயர் அருகனுக்கு வழங்கும் சிறப்பு பெயர்களில் ஒன்று. திருக்குறள் எழுந்தக் காலத்தில் அப்பெயர் அருக பகவானுக்கு வழங்கி வந்திருக்கிறது. சான்றாக, இளங்கோவடிகள் தாம் எழுதியச் சிலப்பதிகாரத்தில் - குமரவேல் முருகக் கடவுள், பிறவா யாக்கை பெரியோனான சிவபெருமான், வானளந்த திருமால் போன்ற பல கடவுளர்களை புகழ்ந்துப் பாடல்கள் எழுதியிருக்கிறார். ஆனால், வேறெந்த கடவுளுக்கும் "எண்குணன்" என்ற சொல்லைப் பயன் படுத்தாமல், அருகக் கடவுளுக்கு மட்டுமே பயன் படுத்துகிறார்.


மேலும், ஆரணி போளூர் வட்டத்தில் "திருமலை" என்ற மலை இருக்கிறது. இம்மலையில் 22ஆவது தீர்த்தங்கரரான "நேமிநாத சுவாமி"யின் 13அடி சிலையிருக்கிறது. இம்மலைக்கு"எண்குண இறைவன் குன்றம்" என்று பெயர்.


அவ்வண்ணமே "சூடாமணி நிகண்டு" அருகக் கடவுள் பெயர் தொகுதியில் "எண்குணன்"என்ற பெயரைச் சொல்கிறது. மற்ற சமயக் கடவுளர்க்கு அப்பெயர் சொல்லப்படவில்லை என்பது சிந்திதற்பாலது.

ஆனால், பின்னாளில் "எண்குணன்" என்ற சொல்லை, மற்ற சமயத்தாரும் உள்வாங்கிக் கொண்டு தத்தம் கடவுளருக்கு சூட்டிக் கொண்டனர்.

இரா.பானுகுமார்,
சென்னை.


யமக வர்க்கம்

யமக வர்க்கம் 

1. எண்ணங்கள் மனதிலிருந்து உண்டாகின்றன. அவைகளுக்கு மனதே முதன்மையானது. எண்ணங்கள் மனதினாலே உண்டாக்கப்படுகின்றன. ஆகையினால் ஒருவன் தீய எண்ணங்களோடு பேசினாலும் சரி, தீய செய்கைகளைச் செய்தாலும் சரி, அவற்றினால் உண்டாகும் துக்கங்கள், இழுத்துச் செல்லும் எருதுகளைப் பின் தொடர்ந்து போகும் வண்டிபோல, அவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றித் தொடர்கின்றன. அதுபோல ஒருவனுடைய நல்லெண்ணங்கள், செயல்கள் அவனை எப்போதும் நீங்காத நிழல் போன்று அவனைப் பின் தொடர்கின்றன.

 சிற்றின்பத்தை அடைய விரும்பியும், பஞ்சேந்திரியங்களை அடக்காமலும், மிதமிஞ்சிய உணவை உண்டும், சோம்பல் கொண்டும், சுறுசுறுப்பில்லாமலும் இருக்கிறவனை, மன்மதன் பலமற்றமரத்தைச் சூறாவளிக்காற்று பெயர்த்து வீழ்த்துவது போல, வீழ்த்தி விடுவான். சிற்றின்பம் கெட்டது என்று கண்டும், பஞ்சேந்திரியத்தை அடக்கியும், மித உணவு கொண்டும், பக்தியும் சுறுசுறுப்பும் அடைந்தும் உள்ள ஒருவனை, கற்பாறையாலான மலையைச் சூறாவளிக்காற்று அசைக்க முடியாதது போல, மன்மதனால் அசைக்க முடியாது.

யாரேனும் ஒருவர் மஞ்சள் சீவர ஆடையை உடுத்திக் கொள்ள விரும்புவாரானால், அவர் மாசுள்ள மனமுடையவராய் தன் அடக்கமும் உண்மையும் இல்லாமலிருப் பாரானால், மஞ்சள் சீவர ஆடை உடுப்பதற்கு அவர் தகுதியுள்ளவர் ஆகமாட்டார். மனமாசுகளை நீக்கி, ஒழுக்கத்தில் நிலைபெற்று நின்று, தன்னடக்கமும் மெய்யுணர்வும் ஒருவர் பெற்றிருப்பாரானால், திண்ணமாக அவரே மஞ்சள் சீவர ஆடை உடுப்பதற்கு அவர் தகுதியுள்ளவர் ஆவார்.


சாரம் (மெய்க்காட்சி) அற்றவைகளைச் சாரம் உள்ளவையென்றும், சாரம் உள்ளவைகளைச் சாரம் அற்றவையென்றும் கொண்டிருப்பவர், தவறான காட்சியையுடையவராய் இருப்பதனால், அவர் மெய்க்காட்சியை அடைய மாட்டார். சாரமுள்ளதைச் சாரம் என்றும், சாரம் அற்றதைச் சாரம் அற்றது என்றும் காண்கின்றவர், மெய்க்காட்சியைக் கொண்டிருப்பதானாலே, மெய்யை அவர் அடைகின்றார்.

செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும்

செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும்

உலகின் கடைசி நாள் பற்றி இயேசு கூறுகின்றார். இது சிறிய உவமையாக இருந்தாலும் ஒரு நீண்ட பின்னுரையை இயேசு கூறுகின்றார்.- மத்தேயு 25:31-46 

ஓர் ஆயர் தமது மந்தையில் செம்றியாடுகளும் வெள்ளாடுகளும் கலந்து போயிருப்பதைக் கண்டு. மாலைவேளயில் மந்தையை தன்முன் கூட்டி செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்தினார்.

செம்மறியாடுகள் நீதிமான்களாவார்கள் வெள்ளாடுகள் பாவிகளாவர்கள். ஆயர் ஆடுகளை பிரித்தது போல ,உலக முடிவில் இயேசு திரும்ப வந்து நீதிமான்களை தீயவரிடமிருந்து பிரிப்பார் எனபது இதன் பொருளாகும். 

பின்பு இயேசு தம் வலப்பக்கத்தில் (நீதிமான்கள்) உள்ளோரைப் பார்த்து," என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, நீங்கள் என்னோடு வாருங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள் தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள் அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள் . நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள் நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள் சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" என்பார். அதற்கு நேர்மையாளர்கள்"ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோ ம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்?" என்று கேட்பார்கள். அதற்கு இயேசு,"மிகச் எழியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" எனப் பதிலளிப்பார்.

பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து,"சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை" என்பார்.
அதற்கு அவர்கள்,"ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?" எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர்,"மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.



திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை – 1

திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை – 1

“உ” – உரை

“உ” என்ற எழுத்தை வள்ளற்பெருமான் திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் எழுதத்துவங்குகையில் முதலில் குறிப்பிட்டுள்ளார்கள். அவ்வெழுத்தின் பொருள்,

        தமது திருவுடம்பில் செயல்படுகின்ற திருஉயிரைக்குறித்துதான் அவ்வாறு “உ” என்கிற குறியீடாக எழுதியுள்ளார்கள். எல்லா உயிர்களின் பொருட்டும் எமது உயிரானது திரு அருட்பெருஞ்ஜோதி அகவலை எழுதுகின்றது என்று பொருள்.

        சுத்த சன்மார்க்கம் என்றாலே அது உயிர் சம்பந்தமுடையது. நமது உயிர் உடலைவிட்டு ஏகக்கூடாது. அதுபோல எவ்வுயிரும் துன்பபடக்கூடாது என்கின்ற உயர்ந்த நோக்கமுடையது சுத்த சன்மார்க்கம். தமிழில் உள்ள எண்களை சொல்லும்போது அவ்வெண்கள் எல்லாம் ‘உ’கரத்தில் முடிவதாய் அமைந்திருக்கும். வேறு எந்த மொழி எண்களுக்கும் இச்சிறப்பு கிடையாது. அதாவது ‘ஒன்று’, ‘இரண்டு’ என்று தமிழ் எண்களை தொடர்ந்து உச்சரிக்கும்போது ‘உ’, ‘உ’ என்ற சப்தத்துடன் முடிவதைப் பார்க்கலாம். எவ்வாறு எண்களுக்கு ஒரு முடிவென்பது இல்லையோ, அவ்வாறே உயிர்களின் எண்ணிக்கைக்கும் முடிவென்பதே கிடையாது என்பதைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதே நமது தமிழ் எண்களின் ஒலிகள். அப்படிப்பட்ட உயிர்களுக்கிடையே உள்ள ஆன்ம நேயத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்ததே ‘உ’ என்கின்ற தொடக்கம்.   
  
 “திருச்சிற்றம்பலம்” – உரை

அடுத்ததாக “திருச்சிற்றம்பலம்” என்ற சொல்லினை எழுதியிருப்பார். இச்சொல்லின் பொருள், திரு+சித்+அம்பலம் என்று பிரியும். ‘திரு’ என்பது இறைவனைக்குறிக்கும். ‘சித்’ என்பது அறிவைக்குறிக்கும். ‘அம்பலம்’ என்பது வெளியைக்குறிக்கும். இறைவன் அறிவே வடிவாக வெளியில் இருக்கின்றான். வெளி  என்பது அண்டம். நமது உடம்பில் கழுத்துக்கு மேல் உள்ள முகம் முழுதும்  அண்டத்தைக்குறிக்கும். அந்த முகம் என்னும் அண்டத்தில் அறிவே வடிவமாக புருவ மத்தியில் இறைவன் விளங்குகின்றான். இதனைக் குறிப்பதுதான் ‘திருச்சிற்றம்பலம்’ என்னும் சொல்.

இப்படி அறிவே வடிவமான இறைவனுடன் எனது “உ” என்கிற உயிரானது அம்பலத்தில் கலந்ததால், திரு அருட்பெருஞ்ஜோதி அகவலை இறை அறிவே எழுதுகின்றது என்பதை குறிப்பதற்காக ‘உ’ என்றும் ‘திருச்சிற்றம்பலம்’ என்றும் வள்ளற்பெருமான் அருளியிருக்கின்றார். 

அருட்பெருஞ்ஜோதி யருட்பெருஞ்ஜோதி
       அருட்பெருஞ்ஜோதி யருட்பெருஞ்ஜோதி    -2

உரை:

1.   அருட்பெருஞ்ஜோதி:-

ஜோதியே இறைவன் என்பது வள்ளல் வாக்கு. அந்த ஜோதி என்பது சாதாரணமாக இல்லாமல் மிகப்பெரிய உருவம் உடையதாக உள்ளது. அதனால் அதனை ‘பெருஞ்ஜோதி’ என்கிறார். ஜோதி என்றால் அது நம் ஊண கண்களுக்குத் தெரிந்துதானே ஆகவேண்டும். பெரிய ஜோதி என்கிறார்! ஆனால் நம்மால் அதனை கண்டு களிக்க முடியவில்லையே! ஒரு வேளை பொய் சொல்கின்றாரோ?

நம்மால் அளக்க முடியாத நெடுந்தொலைவில் உள்ள நட்சத்திர ஒளியைக்கூட நமது கண்கள் பார்த்துவிடுகின்றன. ஆச்சரியம்தான்! சூரிய ஒளி, சந்திர ஒளி, நாம் உருவாக்கிய மின் ஒளி, தீப ஒளி போன்றவைகளை நமது கண்கள் பார்த்துவிடுகின்றன. இவைகளைவிட பெரிய ஜோதியாக விளங்கும் இறைவனை ஏன் நமது கண்களால் பார்க்க முடியவில்லை?

வீறும் பெருவெளி ஜோதி – மேலும்
வெட்ட வெளியில் விளங்கிய ஜோதி. – 4566

‘வீறும்’ என்றால் ‘பிரகாசம்’ எனப்பொருள். பெரிய வெளி என்பது, கோள்கள், நட்சத்திரங்கள், வாயுக்கள், கற்கள் இவைகள் போன்ற பொருட்களை உடைய மிகப்பெரிய வெளியை பெருவெளி என்கிறோம். இப்படிப்பட்ட பெருவெளி எங்கும் அருட்பெருஞ்ஜோதி பிரகாசம் நிறைந்துள்ளது. மேலும் அவைகளையும் கடந்த ஏதுமற்ற வெட்ட வெளியில்கூட அருட்பெருஞ்ஜொதியின் மயம்தான் என்கிறார்.

ஆனால் உண்மையில் அவ்வாறு இருக்கின்றதா? நாம் பூமியிலிருந்து வானத்தை (அண்டத்தை) பார்க்கிறோம். வெளியானது நீல நிறமாகக் காட்சியளிக்கின்றது. இரவில் இருளாக காட்சியளிக்கின்றது. சூரிய ஒளி நமது காற்று மண்டலத்தில் பட்டு சிதறுகின்றது. அந்த வெள்ளொளியை காற்றானது சிதறியடிக்கும்போது  நீல நிறத்தை மட்டும் நமக்கு காட்சியாகக் கொடுக்கின்றது. அதுபோல் இரவில் சூரியன் மறைந்துவிடுவதால் நமக்கு  வெளியானது இருளாகத் தெரிகின்றது.

பெரிய ஜோதியானது மகா பிரகாசமாக அண்டம் முழுதும் பரவி யிருப்பதாக வள்ளலார் உரைக்கின்றார். அது உண்மையானால்  நமது பூமிக்கு இரவு பகலே வரக்கூடாது. என்றும் பகலாக அல்லவா இருக்க வேண்டும்! அண்டம் முழுதும் வெளிச்சமாகத்தானே இருக்கவேண்டும்! நமது காற்று மண்டலத்தை விட்டு  வெளியில் சென்று நாம் அண்டத்தை  நோக்கினால் நீல நிறம் மறைந்து எல்லாம் இருளாகவே தெரியும். எங்கும் ஜோதி மயம் என்பதை பொய்யாக்கி, எங்கும் இருள் மயமே நிறைந்திருப்பதை காணலாம். ஆகவே உண்மையில் வெளிகளெல்லாம் இருள் மயமாகத்தான் இருக்கின்றது.

அதனால்தான் “அருட்பெருஞ்ஜோதி” என்கிறார். அரு+இருள்=அருள், என்று பிரித்து பொருள் அறிதல் வேண்டும். இறைவன் என்கிற பெருஞ்ஜோதியானது தம்மை மறைத்துக்கொண்டு மாயா உருவமாக அதாவது  அருவமாக / இருளாகவே எங்கும் காட்சியளிக்கிறார். நாம் நமது மூன்றாவது  கண்ணை திறந்து பார்க்கும்போதுதான் அந்த இருள் என்கிற மாயை விலகி எல்லாம் பட்டப்பகல் போலத் தெரியவரும். நமது  இரண்டு கண்களால், இந்த விண்வெளியில் எத்தனை கோடி ஒளி ஆண்டுகள் தூரம் கடந்து சென்று பார்த்தாலும் அந்த அருட்பெருஞ்ஜோதி அருவமாகவே/இருளாகவே தெரியும். இதனைத்தான் வள்ளலார் ‘பெருஞ்ஜோதி’ அருவமாக இருக்கின்றது என்று தமது முதல் ‘அருட்பெருஞ்ஜோதி’யில் குறிப்பிடுகின்றார்.
இருளும் ஒளியும் ஒன்றாகவே கலந்து இருக்கின்றன. இப்படி கலந்து இருக்கும் இவைகளை நாம், அன்னப்பறவை எவ்வாறு பாலில் கலந்துள்ள நீரினை விடுத்து பாலை மட்டும் அருந்துகின்றதோ! அவ்வாறு நாம் இருளிலிருந்து ஒளியினை மட்டும் காணவேண்டும். இதனை ‘விகங்க நியாயம்’ என்பார் வள்ளலார். ஒளியினை கண்டுவிட்டால் அங்கு  இருள் இருக்காது. நாம் இருளினை பார்ப்பதால் அங்கு ஒளி தென்படவில்லை.  இருள் என்பது  ஒளியின் அருவமாகும். ஒளி என்பது  இருளின் அருவமாகும்.  

        மருட்பெரு மாயை முற்றும் மடிந்தன வினைக ளோடே
இருட்பெருந் தடையை  நீக்கி இரவியும் எழுந்த தன்றே. – 5306

நம்மை ஏமாற்றுகின்ற மாயை நம்மளவில் முற்றும் அழியவேண்டும். நமது வினைகள் ஓட வேண்டும். அப்போதுதான் இருளான பெருந் தடையை நீக்கி அருட்பெருஞ்ஜோதி பிரகாசம் எனும் சூரியன் எழுவதை நாம் இவ்வண்டத்தும், பிண்டத்தும் காணலாம். இப்படிப்பட்ட மாயையினைத்தான் திரைகளாக உருவகப்படுத்தியதை ஞானசபையில் நாம் காண்கின்றோம்.
         
2. அருட்பெருஞ்ஜோதி:-

        முதலில் சொல்லப்பட்ட ‘அருட்பெருஞ்ஜோதி’ என்பது பெருஞ்ஜோதியின் இயல்பை குறித்து வந்தது. இரண்டாவதாக வருகின்ற ‘அருட்பெருஞ்ஜோதி’ என்பது பெருஞ்ஜோதியின் பெயரைக் குறித்து வந்தது. அதாவது ‘பெருஞ்ஜோதி’யாக உள்ள அவ்விறைவனுக்கு வள்ளலார் வைத்த பெயர் “அருள்” என்பதாகும்.  அருள்+பெருஞ்ஜோதி என்று பிரித்தறிய வேண்டும். அருள் என்கிற பெயருடைய பெருஞ்ஜோதி என்று இதற்கு பொருள்.

நமக்கு அருவமான இருளானது அருவுருவமான ஜோதியாகக் காட்சியளிக்கும்போது, அந்த பேரொளியின் பிரகாசத்தால் நாம்பார்ப்பது செம்பொருளாகிய ‘சுத்த சிவம்’ ஆகும். ‘சுத்த சிவம்’ என்கின்ற இறைவனை நமக்குக் காட்டிக்கொடுப்பது ‘பெருஞ்ஜோதி’ என்கிற பிரகாசம் ஆகும். பெருஞ்ஜோதியின் தயவன்றி சுத்த சிவம் தோன்றாது. எனவே அந்த தயவிற்கு ‘அருள்’ என்று பெயர் வைத்து ‘அருட்பெருஞ்ஜோதி’ என்று வழங்குகின்றார். ‘அருள்’ என்பது பெருஞ்ஜோதிக்கு காரணப்பெயராக அமைந்துள்ளது. பெருஞ்ஜோதி நமக்கு எதனை அருள்கின்றது? என்ற வினா எழுகின்றது. சுத்த சிவ சன்மார்க்க நிலையில் நம்மை நிறுத்தி என்றும் இறவாத ஒளிதேகத்தை நமக்கு அருளுகின்றது. எனவேதான் அந்த பெருஞ்ஜோதிக்கு ‘அருள்’ என பெயர் வைத்தார் வள்ளலார். நமக்கு இறவா நிலையை கொடுக்கும் நிகழ்வுக்கு அருள் எனப்பெயர். அந்த அருளை கொடுக்கும் பெருஞ்ஜோதிக்கு அருட்பெருஞ்ஜோதி என்று பெயர்.

‘சுத்த சிவம்’ என்பதே இறைவன். ‘பெருஞ்ஜோதி’ என்பது சுத்த சிவத்தின் பிரகாசம். அப்பிரகாசத்திற்கு வள்ளலார் வைத்த பெயர் அருள் அல்லது கருணை. எனவே, சுத்த சன்மார்க்க சாதனமாம் ‘கருணையும் சிவமுமே பொருளெனக் காணும் காட்சி’யே அருட்பெருஞ்ஜோதி காட்சியாகும்.  

தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச்
        சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை
இவறாத சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
        இருந்தருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும்
எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடா
        தென்ஆணை என்மகனே அருட்பெருஞ்சோ தியைத்தான்
தவறாது பெற்றனைநீ வாழ்கஎன்ற பதியே
        சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே. – 4179

இங்கே நாம் ஒன்றை கவனிக்கவேண்டும். ‘அரும்பெரும்ஜோதி’ என்பதும் ‘அருட்பெருஞ்ஜோதி’ என்பதும் ஒன்றல்ல. ‘அரும்பெரும்ஜோதி’ என்பது சைவ சமயக் கடவுளான ‘சிவன்’/’ஈசன்’ என்பவரைக் குறிக்கும். இந்த சிவபெருமானை குறித்து ‘அருட்பெருஞ்ஜோதி’ என்றும் ‘அரும்பெரும்ஜோதி’ என்றும் வள்ளலாரும் பாடியுள்ளார். அருமை + பெருமை + ஜோதி = ‘அரும்பெரும்ஜோதி என்றாயிற்று. அருமையும் பெருமையும் வாய்ந்த ஜோதி என்னும் இறைவன் என்பது பொருள். எனினும் ‘அருட்பெருஞ்ஜோதி’ என்பது ‘சுத்த சிவம்’ என்றும் இதுவரை யாராலும் அறிவிக்கப்படாத ‘தனிக்கடவுள்’ என்றும் தமது இறுதி அனுபவ முடிபாக வள்ளற்பெருமான் அருளியுள்ளார். அருள் + பெரும் + ஜோதி = அருள் நிறைந்த ஜோதி என்றாயிற்று. எனவே நாம் இவை இரண்டிற்கும் உள்ள பொருள் அறிந்து அதன்படி நடத்தல் வேண்டும். 

‘அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேதிரு
        அம்பல வாணரே வாரீர்
        அன்புடை யாளரே வாரீர். – 4354

‘ஆதிஅ னாதிஎன் றாரணம் போற்றும்
        அரும்பெருஞ் ஜோதியீர் வாரீர்
        ஆனந்த நாடரே வாரீர். - 4364
       
3.           அருட்பெருஞ்ஜோதி:-

முதலில் அருட்பெருஞ்ஜோதியின் இயல்பையும், இரண்டாவதாக
அருட்பெருஞ்ஜோதியின் பெயரையும் பார்த்தோம். மூன்றாவதாக வருகின்ற அருட்பெருஞ்ஜோதியினை அருட்டு+பெருஞ்ஜோதி என்று பிரித்து பொருள் அறிதல் வேண்டும். அருட்டு என்றால் எழுப்புதல் எனப்பொருள். பெருஞ்ஜோதியாம் பிரகாசம் யாரை எழுப்புகின்றது? எவ்வுலகிலுமுள்ள செத்தாரை எல்லாம் எழுப்புகின்றது. செத்தாரை எழுப்பும் சன்மார்க்க காலம் பிறந்துவிட்டதை இந்த மூன்றாவது  அருட்பெருஞ்ஜோதி நமக்கு தெரிவிக்கின்றது.

        செத்தாரை எழுப்புதல் என்பது  அறிவில்லாதவனுக்கு அறிவூட்டும் செயல் என்பது  போன்று சிலர் கருதுகின்றனர். ஆனால் வள்ளற்பெருமான் அந்நோக்கில் சொல்லவில்லை.  உயிர் பிரிந்து இறந்தவர்களை எல்லாம் மீண்டும் உயிரோடு எழுப்புதல் பற்றியே  சொல்லியிருக்கின்றார்.

        “சமரச வேத சன்மார்க்க சங்கம் கூடி விளங்கும் காலம் எது? அது நமக்கு அறிவு வந்த நாள்தொட்டு அந்நாள் பரியந்தம் இறந்து போன நமது சிநேகர், உறவினர், அடுத்தோர், வார்த்திபர், வாலிபர், பாலியர், குமாரர், ஆண்மக்கள், பெண்மக்கள் என்பவர் எல்லாம் உயிர்பெற்று எழுந்து  மேற்குறித்த சங்கத்தில் கூடி விளங்கும் காலமாகும். இது விஷயத்தில் தருக்கஞ் செய்யப்படாது. உண்மை.” (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-544)

        இச்செய்தியினை  உண்மை என நம்புதல் வேண்டும். இவ்விஷயத்தில் நாம் எந்த ஒரு  கேள்வியினையும் எழுப்ப வேண்டாம் என அவரே தடைவிதித்துவிட்டார். இவ்வுலகில் இதுவரை இறந்தவர்களை எல்லாம் எழுவார்களா? என்றால் இல்லை. வள்ளற்பெருமானுக்கு சுத்த சன்மார்க்க அனுபவம் வந்த நாள்முதல், சுத்த சிவத்தை கண்ட நாள்முதல் இவ்வுலகில் இறந்தார்களை எல்லாம் ‘பெருஞ்ஜோதி’யாம் பிரகாசம் எழுப்பியருளும். இந்தச் செய்தியினைத்தான் மூன்றாவதாக அமைந்துள்ள ‘அருட்பெருஞ்ஜோதி’ நமக்குத் தெரிவிக்கின்றது.

4.   அருட்பெருஞ்ஜோதி:-

நான்காவதாக அருளப்பட்டுள்ள ‘அருட்பெருஞ்ஜோதி’ என்பது அணு ஆற்றலை எடுத்தியம்புகின்றது. ‘அரு+பெரு+ஜோதி’ என்று பிரிக்க வேண்டும். ‘அரு’ என்றால் ‘அணு’ எனப்பொருள். அணு என்றால் என்னவென்று நமக்கெல்லாம் ஓரளவுக்குத் தெரியும். நமது ஊனக்கண்களால் காணமுடியாத மிகச்சிறிய துகளை அணு என்கின்றோம். இப்படிப்பட்ட இந்த அணுக்கள்தான் பொருட்களாகவும் பொருள் அற்றதாகவும் இருக்கின்ற நமது உலகம் உட்பட இந்த விண்வெளியை ஆட்சி செய்துவருகின்றது.

அப்படிப்பட்ட அணுவிற்குள் என்னதான் இருக்கின்றது. மிக மிகச்சிறிய துகளுள் அப்படி என்னதான் இருந்துவிட முடியும்? என்றே நினைக்கத் தோன்றும். ஆனால் அந்த அணுக்குள் பல அண்டங்களை அடுக்கிவிடும் அளவிற்கு இடம் இருக்கின்றது. அண்டம் எங்கே? அணு எங்கே? இது எப்படி சாத்தியமாகும்? ஆனால் அதுதான் உண்மை. அவ்வணுவிற்குள் ‘பெருஞ்ஜோதி’யே இருக்கின்றது. ஊசிக்காதுக்குள் ஒட்டகத்தை புகுத்த முடியும் என்பதை இயற்கை செய்துமுடித்திருக்கின்றது.

‘அன்பெனும் அணுவில் அமைந்த பேரொளியே’ என்பார் வள்ளலார். நமது உடம்பும் நமது உடம்பை சுற்றியுள்ள வெற்றிடங்களும் அணுக்களாலே கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த அணுக்கள் எல்லாம் ‘பெருஞ்ஜோதி’யாகவே இருக்கின்றன. இதனால்தான் ‘உள்ளும் புறமும் வள்ளல் இருக்க வாட்டம் ஏன்?’ என்கிறார் வள்ளலார். அணுக்களுக்கு உள்ளும் அணுக்களுக்கு வெளியும் பெருஞ்ஜோதியே இருக்கின்றது. எனவே யாதொன்று பற்றியும் வாட்டம் கொள்ளக்கூடாது என்கிறார் வள்ளலார். 

ஓர் அணுவை அண்டமாக்குவதும், ஓர் அண்டத்தை அணுவாக்குவதும் ‘பெருஞ்ஜோதி’யின் அனுபவமாகும். அணு முதல் அண்டம் வரை எல்லாம் ஜோதி மயமே! ‘அரு’ என்ற அணுவையும் ‘பெரு’ என்ற அண்டத்தையும் ஆளுகின்றவன் ‘ஜோதி’ என்ற இறைவனே ஆகும். இதனையே ‘அருட்பெருஞ்ஜோதி’ என்று நான்காவது முறையாக எடுத்தியம்புகின்றார் வள்ளற்பெருமான்.  

நமது ஊனக்கண்களுக்கு இருளாகவே காட்சியளிக்கும் அருட்பெருஞ்ஜோதி, அருள் என்கின்ற பெயரைத் தாங்கி நமக்கு இறவா வரத்தை அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி, இறந்தாரை எல்லாம் எழுப்புகின்ற அருட்பெருஞ்ஜோதி, சிறிதினும் சிறிதாய் பெரிதினும் பெரிதாய் இருக்கின்ற அருட்பெருஞ்ஜோதி என்று இந்த நான்கு பொருள்களில் அடங்குகின்றன திரு அருட்பெருஞ்ஜோதி அகவலின் முதல் இரண்டு வரிகள்.

இதற்கு மேற்பட்டு ‘அருட்பெருஞ்ஜோதி’ என்று நாம் எங்கெங்கு படிக்கவோ, பிறர் ஓத கேட்கவோ நேர்ந்தாலும் அதற்கு மேற்காணும் நான்கு பொருளையும் ஒருங்கே நினைத்து நாம் தியானித்து வந்தோமானால் நமக்கு சுத்த சிவத்தின் பிரகாச காட்சியும், இறவா வரமும், செத்தாரை எழுப்புகின்ற திறமும், அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்கிற உண்மையும் பெற்று சுத்த சன்மார்க்கியாக்கும் வல்லமை இந்த ‘அருட்பெருஞ்ஜோதி’ என்கின்ற சொல்லுக்கு உண்டு. - TMR


ஸ்ரீ நாராயண குரு – ஸ்ரீ தாண்டவராய சுவாமிகள்

ஸ்ரீ நாராயண குரு – ஸ்ரீ தாண்டவராய சுவாமிகள்

ஸ்ரீ நாராயண குரு மற்றும் ஸ்ரீ தாண்டவராய சுவாமிகள் ஆகியோரின் திருமேனி காத்தருளிய அதிஷ்டானப் பீடங்கள் அருகருகே அமைந்து ஸ்ரீ நாராயண தாண்டேஸ்வரம் எனும் பெயரில் நன்னிலத்தில் வழங்கி வருகின்றது.

ஸ்ரீ நாராயணர் கி.பி.1378 ஆம் வருடம் நன்னிலத்தில் தோன்றினார். தமது 21-ஆம் அகவையிலேயே இறைநாட்டம் கொண்டு சிருங்கேரியை அடைந்து 25 வருடம் வித்தியாரண்யர் என்பவரிடம் கல்வி பயின்று துறவறம் பூண்டு அங்கேயே தவக்குடிலமைத்து அருள்பாலித்து வந்தார்கள். காலப்போக்கில் ஸ்ரீ தாண்டவராய சுவாமிகள் நாராயண குருவுக்குச் சீடராக வாய்த்தார்கள். இவ்வாறு அருளாட்சி செய்துவந்த ஸ்ரீ நாராயணகுரு கி.பி.1449-ஆம் ஆண்டு வைகாசித் திங்கள் விசாகநன்னாளில் பரிபூரனமானார்கள். அடியார் குழாம் தவக்குடிலுக்கு அருகிலேயே சுவாமிகளுக்கு திருமேனிக்காப்பிட்டு அதிஷ்டானம் எழுப்பி நித்திய பூஜை நிகழ்த்தி வழிபடலாயினர். (வைகாசி விசாகம் குருபூஜை)

ஸ்ரீ தாண்டவராய சுவாமிகள்

ஸ்ரீ நாராயண குருவின் சீடராக விளங்கி, புகழ்பெற்ற சுவாமிகள் நன்னிலத்தில் கி.பி.1408-ஆம் ஆண்டு மாதவநந்தர்-அம்பிகை அம்மையார் ஆகியோருக்கு திருமகனாய் அவதரித்தார்கள்.

ஒரு நாள் தாண்டவராயர் தம் குருநாதரை வணங்கி சமாதி யோகத்தில் ஆழ்ந்தார். அப்பொழுது நாராயணகுரு தோன்றி, “அன்பனே! நீ உலகில் உள்ள மக்களின் துன்பங்கள் நீக்குவதற்கும், அவர்கள் தூயமெய்யறிவை அடைவதற்கும் நீ கற்ற வேதாந்த நூல்களின் சாரங்கள் முழுவதையும் திரட்டி, வேதாந்த நூல் ஒன்றை இயற்றுக! என்று அருள்பாலித்தனர். தம் குருவின் ஆணையைச் சிரமேற்கொண்ட தாண்டவராயர் “கைவல்ய நவநீதம்” எனும் ஒப்பற்ற நூலை இயற்றினார்.

அருளாட்சி நடத்திவந்த தாண்டவராய சுவாமிகள் தம் குருவைப்போல் அவர்மீது கொண்ட அளவற்ற பற்றினால் குருமறைந்த அதே வைகாசி விசாகத்திலே கி.பி.1534-ஆம் ஆண்டு பரிபூரணம் எய்தினார்கள்.

நாராயணகுருவிற்கு அருகிலேயே இவரது திருமேனியும் குகை செய்விக்கப்பட்டு ஸ்ரீ நாராயணத்தாண்டேஸ்வரர் ஆலயத்துள் ஒரே கருவறையுள் தென்புறமிருக்கும் லிங்கத்திருமேனி ஸ்ரீ நாராயணகுரு அதிஷ்டானமாகும். வடபுறமுள்ள லிங்கத்திருமேனி தாண்டவராய சுவாமிகள் அதிஷ்டானமாகும்.

“அவனன்றி ஓரணுவும் அசையாது” என்பதற்கு விளக்கம் கொடுக்கையில் வள்ளற்பெருமான், ‘கைவல்ய நவநீதம்’ என்னும் நூலில் உள்ள “இந்தச் சீவனால் வரும்…” எனத் தொடங்கும் பாடலை எடுத்துக்காட்டாக கூறியுள்ளார் என்பது சிறப்பு. (ச.மு.க. பிரபந்தத்திரட்டு – பக்கம்-93 – அ.திருநாவுக்கரசு பதிப்பு)

நன்னிலம் கும்பகோணத்திற்கு கிழக்கில் 20 கி.மீ. தொலைவிலும் மயிலாடுதுறைக்குத் தெற்கிலும் அமைந்துள்ள ஊர். ஸ்ரீ நாராயண தாண்டீஸ்வரர் ஜீவசமாதி ஆலயம். ஆலயத்துள் ஒரே இடத்தில் அருகருகே சிவலிங்க திருமேனிகளுடன் காட்சியளிப்பவை இரு மகான்களின் சமாதி பீடங்களாகும்.



மதங்களும் ஜாதிகளும் ஏன் மக்களை ஒன்றிணைக்கவில்லை?


மதங்களும் ஜாதிகளும் ஏன் மக்களை ஒன்றிணைக்கவில்லை?

நமது ‘சன்மார்க்க விவேக விருத்தி’மின்னிதழை படித்துவிட்டு, சென்ற நவம்பர் மாதம் சென்னை சைதாப்பேட்டையிலிருந்து திரு.எஸ்.ஆர்.சத்தியநாராயாணன் அவர்கள் எம்மை கைப்பேசியில் அழைத்தார். தமது எழுபதாவது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் அவ்விளைஞர் தமது அனுபவங்களை சில நாட்களாக தொடர்ந்து  எம்மிடம் விவரித்தார். இவ்வுலக நாடுகளில் பல நாடுகளுக்கு சென்று வேலை பார்த்த அனுபவம் அவருக்கு உண்டு. பலதர மக்களை சந்தித்து பழகும் வாய்ப்பு அவருக்கு  இதனால் கிட்டியுள்ளது. நமது ஒவ்வொரு பயணமும் நமது அறிவினை விசாலமாக்கும் அனுபவமாகும். அவ்வகையில் அவரது உலக பயணங்கள் அவரது எண்ணங்களை விசாலமாக்கியிருக்கின்றது. சுத்த சன்மார்க்க கருத்துக்களை உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான பல வழிமுறைகளை எம்மிடம் கலந்து ஆலோசனை வழங்கினார். நமது  இந்த  மின்னூலிலும் இன்னும் பல சன்மார்க்கம் சார்ந்த செய்திகளையும், உலக அளவில் சன்மார்க்கிகள் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ளவும் வழிவகை செய்யவேண்டும் என கட்டளையிட்டார். இடையில் ‘மதங்களும் ஜாதிகளும் ஏன் மக்களை ஒன்றிணைக்கவில்லை? என்று எழுதுங்கள். கலப்புத்  திருமணங்களை ஆதரிக்கும் வகையில் இந்நூலை  மக்களிடம் எடுத்துச்செல்லுங்கள்! என்றெல்லாம் உத்தரவிட்டார். அதன் விளைவாக மேற்காணும் கேள்வி எழுந்துள்ளது. இதற்கான பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தில் சொல்லமுடியும்.

தத்துவ ஒழுக்கம் பற்றி சொல்வது மதங்கள். தொழில் ஒழுக்கம் பற்றி சொல்வது ஜாதிகள். இவை  இரண்டுமே தயவை விருத்தி செய்ய தடையாய் இருக்கின்றன என்பார் வள்ளலார். (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-418) தத்துவ ஒழுக்கங்களையும் தொழில் ஒழுக்கங்களையும் நீக்கிவிட்டு ஜீவ ஒழுக்கத்தை  கடைபிடித்தால் மட்டுமே மக்கள் எல்லாம் ஒன்றிணைய முடியும். தத்துவங்கள் பலவகை, தொழில்கள் பலவகை அதுபோல் மக்களும் பலவகை எனில் எங்கிருந்து  ஒன்றிணையமுடியும்?

ஆயிரம் வருடங்களாக வந்த சம்பிரதாயம், கட்டுக்கோப்பு, சமய மத நெறி, பெரியவர்களின் பல்வேறு போதனைகள், நல்லவர்களின் பேச்சும் அவர்களின்  நடையும், அன்பும் உறவும், சொந்தம், நட்பு, உதவி, ஒத்துழைப்பு, நன்னடத்தை, கோட்பாடுகளும், லட்சியங்களும் ஆகியவற்றை வேறுவழியில்லாமல் கட்டாயமாக சர்க்கஸில் சிங்கம், யானை, புலி, குதிரை, குரங்குகளைப்போலச் சாட்டையடிக்கு பயந்து ஒரு நெறியில் நடப்பது  போல் இருக்கின்றது மனித குலம். இப்படிப்பட்ட மதம் ஜாதி என்கின்ற சர்க்கஸை இன்னும் எத்தனை நாளுக்குத்தான் நடத்த முடியும்? நாமும் எத்தனை நாளுக்குத்தான் சிங்கமாகவும், குரங்குகளாகவும் இருக்கப்போகின்றோம்? 

வம்மின் உலகீர்! மரணமிலா வாழ்வில் வாழ்ந்திடலாம்… கண்டீர்!! நான் மரணமிலா வாழ்வில் வாழ்வதை கண்டீர்கள். அதுபோல் நீங்களும் வாழலாம் வம்மின்… வம்மின்… என்று மக்களை ஒன்றிணைக்கவே முயல்கின்றார் வள்ளலார். இவ்வுலகில் உள்ள எத்தனை பேருக்கு இவ்வழைப்பு  சென்று சேர்ந்துள்ளது? அழைப்பு சென்றவர்களில் எத்தனை  பேர் வந்தனர்? வந்தவர்களில் எத்தனை பேர் மரணமிலா வாழ்வைப் பெற்றனர்? என்று பார்க்கும் போது விடை சூன்யமாகவே உள்ளது. ‘கடை விரித்தேன் கொள்வாரில்லை’என்கின்ற வார்த்தையே உண்மைபோல் உள்ளது. மத மார்க்கங்கள் மக்களை ஒன்றிணைக்காது என்றே… “சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கியத் தடைகளாக இருப்பது சமய மத மார்க்கங்கள்” என்றுரைத்தார் வள்ளலார்.

மதங்களிலும் ஜாதிகளிலும் சொல்லப்பட்டுள்ள பல்வேறு சடங்குகள், சாத்திரங்கள், ஆசாரங்கள், கதைகள், கற்பனை கலைகள் இவைகள் எல்லாம் மக்களை பிரிக்கவே செய்கின்றன. தயவில்லாமல் கண்மூடித்தனமாக அவைகள் மக்களால் பின்பற்றப்படுகின்றன. ஒவ்வொரு மதங்களுக்கும் தனித்தனி சட்டங்கள், சடங்குகள், கற்பனைகள் உள்ளன. அவற்றை பின்பற்றும் மக்கள் அவைகளே உண்மை என நம்பியோ அல்லது  பொய் என்று அறிந்தும் மதவாதிகளின் சாட்டையடிக்கு பயந்து அதனையே பின்பற்றுகின்றனர்.

‘சாத்திரங்களில் சிறந்தது திருமூலரின் திருமந்திரம்’ என்று சொன்னவர் மற்றொரு இடத்தில் ‘சாத்திரக்குப்பை’ என்று சாத்திரத்தை குப்பை சாடுகின்றார். குப்பையில் சிறந்தது  திருமந்திரம் என்றல்லவா சொல்லாமல் சொல்கின்றார் வள்ளலார். இதனை படிக்கும்போது பலசன்மார்க்கிகளுக்கே கோபம் வருமே! இனிமேலாவது  சாத்திரத்தை விடுவார்களா? அல்லது சன்மார்க்கத்தை விடுவார்களா? என்றால் பலர் சன்மார்க்கத்தை விடவே தயாராக இருப்பார்கள். காரணம் ஆயிரம் ஆண்டுகளாக நமது ஜீனில் கலந்து வந்துள்ள பழக்க வழக்கம். தங்களது  மதங்களை விடுவது அவ்வளவு எளிதல்ல.

‘இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
          இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு…’ (4654)

‘சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
          சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே…’(5566)

‘சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம்
        சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ?’…(4955)

‘இந்த மார்க்க உண்மை தெரிய வேண்டுமாகில் திருமந்திரத்தைக் கவனிக்கில் விளங்கும்’(திருவருட்பா-உரைநடை  நூல்-பக்கம்-385) ‘இந்த மார்க்க உண்மை’ என்பதை பலர் ‘சுத்த சன்மார்க்க உண்மை’ என்று பொருள் கொள்கின்றனர். அது தவறு. ‘இந்த மார்க்கம்’ என்றால் ‘சாத்திரத்தின் வழி’ என்றே பொருள் கொள்ள வேண்டும். அனைத்து சாத்திரங்களுக்கும் பொருள் வேண்டுமானால், திருமந்திரத்தை மட்டும் கவனித்தால் போதும் என்கின்றார். என்னடா இவன் திருமந்திரத்தையே குப்பை என்கின்றானே! என்று கோபம் கொள்ளாதீர்கள். சொல்வது நானனல்ல…. வள்ளற்பெருமான். சுத்த சன்மார்க்கம் என்று வரும்போது, நாம் கடந்த சில ஆயிரங்கணகான ஆண்டுகளாக கற்றதெல்லாம் பொய் என்னும் குப்பைகள்தானே! ‘என் மார்க்கம் இறவாத சன்மார்க்கம்’ என்கின்றார் வள்ளலார். எனவே வள்ளலாரின் மார்க்கம் சகத்தில் ஓர் புதிய மார்க்கம். வள்ளலார் தோற்றுவித்த மார்க்க உண்மை விளங்கவேண்டுமானால், இதற்கு முன்னர் தோன்றிய திருமந்திர சாத்திர மார்க்கம் எங்ஙனம் உதவிபுரியும்? தன் மார்க்கம் விளங்கத்தானே திருவருட்பாவை அருளியுள்ளார் வள்ளலார்.

இதுபோன்று இவ்வுலகில் அனைத்து மதங்களும் பொய்யே. மதங்களையும் ஜாதிகளையும் விடுவது ஒன்றே மனிதர்களை ஒன்றிணைக்குமா? எனில், இல்லை. சுத்த சன்மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள ஜீவ ஒழுக்கத்தை கடைபிடிக்க மனிதர்கள் ஒன்றிணைவார்கள். இதனை கடைபிடிப்பார் இவ்வுலகில் யாரும் இல்லை. எனவே மக்களாகிய நாமெல்லாம் ஏதோ ஒரு வட்டத்திற்குள் புகுந்துக்கொண்டு, தமக்கு எதிரே உள்ள வட்டம் நம் வட்டத்தைவிட சிறியது என்று தங்களைத் தாங்களே சிறிய பெரிய வட்டங்களாக பிரித்துக்கொண்டுதான் இருக்கின்றோம். சுத்த சன்மார்க்கம் என்பதும் ஒரு வட்டம்தானே! என்பீர்கள். இல்லவே இல்லை. வட்டத்திற்குள் இருப்பவர்களாகிய நாம் சற்று அதனை விட்டு வெளியில் வந்து நிற்போம். அப்போது நாம் ஒரு பெரு வெளியைக் காண்போம். அவ்வெளிதான் சுத்த சன்மார்க்கம். இங்கே சடங்கு என்னும் வட்டம் இல்லை. இங்கே சாத்திரம் என்கின்ற வட்டம் இல்லை. இங்கே குலாச்சாரம், மதாச்சார்ம் என்கின்ற பற்பல ஆசாரம் என்கின்ற வட்டம் இல்லை. தயவு என்கின்ற பெருவெளிதான் உள்ளது. இவ்வெளி ஒன்றே மக்களை ஒன்றிணைக்கக்கூடிய வல்லமை பெற்றது. இந்த வல்லமையை எல்லா மக்களும் பெறுவது இயலாத ஒன்று. எனவே மக்கள் ஒன்றிணையாது பல்வேறுவகையில் பிரிந்து வாழவே அந்த பெருவெளி விரும்புகின்றது. வள்ளற்பெருமானும் இவ்வுலக மக்களை அகஇனம், புறஇனம் என்று இருவேறு வட்டமாக பிரிக்கவே செய்கின்றார். இந்த இருவேறு வட்டமும் ஒரே வட்டமாக பெருவெளியாக ஆவதும் இயலாத ஒன்று. ஒரு காலத்தில் ஒரு வட்டம் சிறியதாகவும், ஒரு காலத்தில் மறு வட்டம் சிறியதாகவும் இருக்க வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் இவற்றில் ஒரு வட்டம் மட்டுமே இருக்கும் காலம் ஒருபோதும் வரப்போவதில்லை.

‘மற்றை மதமார்க்கம் யாவும் இறந்தனவே’ என்று வள்ளற்பெருமான் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. அவைகள் வள்ளற்பெருமான் வருவிக்கவுற்றபோதே நோய்வாய்ப்பட்டுவிட்டன. வள்ளற்பெருமானுக்கு சுத்த சன்மார்க்க அனுபவம் நேர்ந்தபோது அந்த மதமார்க்கம் யாவும் இவ்வுலகில் இறந்துவிட்டன என்பது சத்தியம். ஆனால் நாம் அதனை புதைக்கவோ அல்லது எரிக்கவோ விரும்பாமல் அப்பிணத்தைக் கட்டிப்பிடித்து அழுதுக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கின்றோம் என்பதே உண்மை.

இதனைப்பற்றி இன்னும் எழுதிக்கொண்டே இருக்கவேண்டும்போல் உள்ளது. தற்போது  எனக்கு  நானே தாழிட்டுக்கொண்டு இத்தோடு இதனை முடிக்கின்றேன். பல்வேறு மதங்களில் உள்ள பல்வேறு தத்துவ ஒழுக்கங்களும் ஜாதிகளில் உள்ள பல்வேறு தொழில் ஒழுக்கங்களும் மனித இயற்கை தயவினை தடைசெய்வித்துள்ளதால்தான் மக்களை இவைகளால் ஒன்றிணைக்க முடியவில்லை.   - TMR


நல்ல நோட்டும் கள்ள நோட்டும்

நல்ல நோட்டும் கள்ள நோட்டும்

நமது மத்திய அரசு திடீரென உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டிருக்கும் இந்திய ரூபாய்களான ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் ஏடுகளை தடை  செய்துள்ளது. (இந்தியாவில் மட்டும் தடை எனவும் மற்ற உலக நாடுகளில் தடையில்லை எனவும் அறிவிக்கின்றது)

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும், கள்ள பணத்தை ஒழிப்பதற்காகவும் இதத் தடையை மத்திய அரசு செய்துள்ளதாக அறிகின்றோம். இதற்காக தடை செய்யப்பட்டுள்ள பல கோடிக்கணக்காண ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் ஏடுகளை திரும்பப்பெற்றுக்கொண்டிருக்கின்றது மத்திய அரசு. அதுபோல ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் ஏடுகளை பல கோடிக்கணக்கில் புதியதாக வெளியிடுகின்றது மத்திய அரசு.

தற்போது இந்திய நாட்டில் மட்டும் மக்களிடம் இருக்கின்ற அனைத்து ரூபாய் ஏடுகளையும் ஒன்றாக அடுக்கி வைத்தால் அது இமய மலையையே விழுங்கிவிடும் அளவிற்கு இருக்கும் என ஒரு ஆய்வு கூறுகின்றது. அதில் ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாயின் ஏடுகள் மட்டும் இமயமலையில் பாதி உயரத்திற்காவது வரும். அவ்வளவு பணத்தையும் அச்சிட எத்தனை கோடி கோடிகளை மக்கள் வரிப்பணத்திலிருந்து செலவிட்டிருக்கும் நமது மத்திய அரசு என்ற கணக்கினை மத்திய அரசு மக்களாகிய நமக்கு தெரிவிக்குமா?
அதுபோல தற்போது வெளியிட்டிருக்கும் புதிய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் ஏட்டிற்காக நமது வரிப்பணம் எத்தனை கோடி கோடி செலவாகியது என்பதனையும் மத்திய அரசு நாட்டு மக்களுக்கு தெரிவிக்குமா? இப்படி பல கோடிகோடிகளை இழந்து, இப்படிப்பட்ட நிதி நிர்வாகத்தை மத்திய அரசு செய்வதினால் உண்மையில் கள்ள பணத்தையும், கருப்பு பணத்தையும் ஒழித்துவிட முடியுமா?

 இன்னும் சில மாதங்களில் புதிய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் ஏடுகளில் கள்ள பணம் வந்துவிட்டது என்று செய்தித்தாள்களில் பார்க்கத்தானே போகின்றோம். கருப்பு பணமும் அதுபோலவே மக்களிடையே முடங்கத்தானே போகின்றது. ரூபாய் நோட்டுகளாக முடங்குவதைவிட இவை தங்கம், வெள்ளி, பிளாட்டினம், வைரம், அயல் நாட்டு கரன்சிகள் என்ற பல வழிகளில் கருப்பு பணமாக இருப்பதை மத்திய அரசு அறியாததா?

கள்ளப்பணத்தை ஒழிக்க நல்ல பணத்தை தடைசெய்வதுதானா, நிதி நிர்வாகம்? கருப்பு பணத்தை ஒழிக்க வெள்ளை பணத்தை தடை செய்வதுதானா, நிதி நிர்வாகம்? இப்படி தடை செய்வதால் ஏற்படும் இழப்புக்கும் செலவுக்கும் கணக்கு பார்த்தால், கருப்பு பணமும், கள்ள பணமும் ஒரு பொருட்டே இல்லை என்பதை, மக்களுக்கு மத்திய அரசு தனது கணக்கை காட்டினால் புரியவரும். இந்த பணத்தடையால் உண்மையில் இந்திய பொருளாதரத்திற்கு இழப்பு, இந்திய மக்களுக்கு இழப்பு.

கள்ள பணம் வெளிநாட்டிலிருந்து வந்தாலும், உள் நாட்டில் அச்சடித்தாலும் அதனை எவ்வாறு கடுமையான சட்டம் இயற்றி தடுக்க வேண்டுமோ? அவ்வாறு தடுப்பதுதான் அரசின் வேலை. கருப்பு பணம் எவ்வாறு உருவாகின்றது என்பதை அறிந்து அதனை எவ்வாறு தடுக்க வேண்டுமோ? அவ்வாறு தடுக்க வேண்டியதுதான் அரசின் வேலை. அதை விடுத்து மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்திவிட்டு, புதிய வீட்டினை கட்டுவதால் வீட்டுக்காரருக்குதான் நட்டம் என்பதை வீடு கட்டியவன் நன்கு அறிவான்!

கள்ள பணமும், கருப்பு பணமும் வைத்திருந்தவர்கள் இத்தோடு ஒழிந்தார்கள்! என்று ஆனந்தப்படுகின்றோமே! இந்த ஆனந்தம் நமது அறியாமையைக்காட்டுகின்றது. கள்ளப் பணமும் கருப்பு பணமும் அவர்களுடைய சொத்து அல்ல. அதனை இழப்பதனால் அவர்களுக்கு ஒன்றும் நேர்ந்துவிடாது. ஒரு வகையில் அந்த கருப்பு பணமும், மக்களாகிய நம்முடைய சொத்து தான். ஆனால் நல்ல பணம் என்பது இந்நாட்டிலுள்ள நம்மைப்போன்றவர்களின் உரிமைச் சொத்து. அதனை இழந்து நாம் தாம் நிற்கின்றோம். இதன் இழப்பீட்டு மதிப்பு எத்தனை கோடிகோடியோ! அத்தனை கோடி மதிப்புள்ள பணமும் நாட்டுமக்களாகிய நமது இழப்பு என்பதை உணருங்கள்.

ஐநூறு ரூபாய்க்கு ஐநூறு ரூபாய்தான் வங்கியில் கொடுத்துவிடுகின்றார்களே! என்று கணக்கு போடாதீர்கள். நீங்கள் தற்போது வங்கியில் கொடுத்த, தடை செய்யப்பட்ட ஐநூறு ரூபாயின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? அந்த ஒரு ஐநூறு ரூபாய் ஏட்டை உருவாக்க இருநூறு ரூபாயாவது செலவாகியிருக்கும். அதுபோல புதியதாக தற்போது வாங்கினீர்களே ஒரு ஐநூறு ரூபாய் ஏடு! அதன் மதிப்பு என்ன தெரியுமா? அதனை உருவாக்க முந்நூறு ரூபாயாவது அரசிற்கு செலவாகி இருக்கும். ஆக, நாம் ஒரு பழைய ஐநூறு ரூபாய் வங்கியில் செலுத்தி அதற்கு பதில் ஒரு புதிய ஐநூறு ரூபாய் வாங்கிச்சென்றால் மத்திய அரசிற்கு ரூபாய் ஐநூறு செலவாகியிருக்கின்றது எனப்பொருள். இப்படி கோடிகோடியான ரூபாய் ஏடுகளுக்குமான செலவுக்கு, மக்களாகிய நமது வரிப்பணம்தான் உதவியிருக்கின்றது. தற்போது எண்ணிப்பாருங்கள் யாருக்கு உண்மையில் இழப்பு என்பதை.


எனதருமை மக்களே! இதுபோன்ற அரசின் நிதி நிர்வாகத்தை நன்கு ஆராய்ந்து நடுநிலையோடு அரசிற்கு ஆதரவு தாருங்கள். மத்திய அரசின் நோக்கம் மிக மிக சரியானதுதான். அதனை யாராலும் மறுக்க இயலாது. ஆனால் அதற்கான வழிமுறை நாட்டு மக்களை சுரண்டுவதாக உள்ளது. பணக்காரனை தண்டிக்க ஏழை மக்களின் வரிப்பணம் வீணாகலாமா? என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நான் இங்கு அரசியல் ஏதும் பேசவில்லை. நிதி நிர்வாகம் பற்றியே பேசுகின்றேன். நீங்களும் பேசுங்கள். உண்மை வெளிவரட்டும்.  TMR

சோதிடம் தனை இகழ்

சோதிடம் தனை இகழ்

இந்தியர்களில் பெரும்பாண்மையினர் காலையில் எழுந்தவுடன் தொலைக்காட்சிப் பெட்டிகளில் இன்றைய நாள் பலன் எப்படி உள்ளது என்றும் இன்று நமது ராசிக்கு என்ன பலன் சொல்கிறார்கள் என்றும் ஒரு சில சேனல்களை மாற்றி மாற்றி கேட்டு தெரிந்துக்கொண்டு அதற்குத் தக்கவாறு தமது செயல்பாட்டினை மேற்கொள்ளும் ஒரு மூடவழக்கத்தினைக் கொண்டுள்ளனர். செவ்வாய் கிழமை எந்த ஒரு செயலிலும் ஈடுபடக்கூடாது, வெள்ளிக்கிழமைகளில் கடன் கொடுக்கக்கூடாது என்பதுபோன்று ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நியதியினை ஒவ்வொரு பகுதி மக்களும் ஒவ்வொரு விதமாக பின்பற்றுகின்றனர்.

நாளைய தினம் இப்படித்தான் இருக்கும் என எவரும் கணித்து சொல்லிவிட முடியாது. இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களும் நாளை வங்கிக்குச் சென்று பணத்திற்காக அலையப்போகின்றார்கள் என்று முன்கூட்டியே எந்த ஒரு ஜோதிடராலும் அறிவிக்க முடியவில்லை. அறிவித்திருந்தால் நாமெல்லாம் சென்ற மாதம்  நூறு ரூபாய் நோட்டிற்காக அலைந்திருக்கமாட்டோம். நாம் சோதிடம் பார்த்து வாங்குகின்ற இந்த ஐநூறு ரூபாய் இன்று இரவு தடைசெய்யப்படும் என்பதை எந்த சோதிடரும் அறிந்திருக்கவில்லை. பிறகென்ன எதிர்காலத்தை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இன்னும் சில மணித்துளிகளில் என்ன நிகழும் என்பதையே சொல்லத்தெரியவில்லை, இவர்கள் எப்படி நமது ஆயுளையே கணக்கிட்டு சொல்கிறார்கள்? எல்லாம் ஏமாற்றும் செயலன்றி வேறெதுவுமில்லை.

பிறந்தவுடன் சாதகம் கணிப்பது, திருமணம் முதல் கொண்டு அனைத்து சடங்குகளுக்கும் நல்ல நேரங்களையும் பொருத்தத்தையும் பார்ப்பது போன்ற இவைகளை சாதகம் என்கிறோம். இதற்காக தற்போது விண்குறியியல் (Astrology) என்கிற கலையே தனியாக உள்ளது. இக்கலை பழங்காலத்திலிருந்தே கிறுத்து பிறப்பிற்கு முன்பிருந்தே இருந்துள்ளது. வெறும் குறிப்புகளாய் இருந்தவை இன்று ஒரு கலையாக உருவெடுத்து மிகவும் வளர்ந்துவிட்டது.

குதிரை பூட்டிய ரதத்தில் சூரிய பகவான் கிளம்பும் படத்தை பார்த்திருப்பீர்கள். அப்படம் சோதிட ரீதியாக வரையப்பட்டப் படம். அன்றைய பழங்குடி மனிதர்கள் பூமி ஓரிடத்தில் இருப்பதாகவும், சூரியன் பூமியை சுற்றி வருவதாகவும் தங்களது சோதிடத்தால் கணித்தார்கள். சூரியனை சூரியபகவான் என்றும் அவன் பூமியை சுற்றிவர அவருக்கு ஒரு ரதத்தையும் ஏழு குதிரைகளையும் கொடுத்து கற்பனையாக அப்படி ஒரு சித்திரத்தை வரைந்துவிட்டார்கள். அது இப்போதும் மக்களிடையே சூரியக்கடவுள் என்று நம்பப்பட்டு வணங்கப்பட்டு வருகின்றது.


சூரியன் நிலையாக இருப்பதை பின்னர் விஞ்ஞானம் கண்டறிந்தது. பூமிதான் சூரியனை சுற்றிவருகின்றது என்று விஞ்ஞானம் கூறியது. ஆனால் யாரும் தங்களது பழைய பழக்கத்தினை மாற்ற முன்வரவில்லை. உண்மை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, பொய் எனக்குள் பொருந்திவிட்டது, அது அப்படியே இருக்கட்டும் என்று இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில்கூட மனிதன் அந்த சூரிய பகவானை வணங்கிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

பூமி தட்டையான உருவம் கொண்டது என்று அன்றைய சோதிடம் சொன்னது. பூமி உருண்டை என்று சொன்ன பூருனோவை உயிருடன் எரித்தது அன்றைய சோதிடம்.  கோள்களையும் விண்மீன்களையும் வைத்துக்கொண்டு விளையாடும் சோதிடர்கள் உண்மைகளை பற்றி சிந்திப்பதே இல்லை. இவர்கள் எடுத்துக்கொள்ளும் கோள்களுள் இராகு, கேது என்பவை உண்மையில் கோள்களே இல்லை. அவை பூமி, சந்திரன் ஆகியவைகளின் நிழல்களாகும். அதே போன்று சூரியனையும் சந்திரனையும் கோள்கள் என்று சொல்லிவிடமுடியாது. சந்திரன் என்பது நமது பூமியின் துணைக்கொள். சூரியன் என்பது விண்மீனாகும். சந்திரனைப்போன்று சூரியனும் பூமியை சுற்றிவருகின்றது என்றே இன்றும் ஜோதிடம் கணிக்கப்படுகின்றது. இவர்கள் அறியாத சில கோள்களும் சூரிய குடும்பத்தில் உண்டு. அதைப்பற்றி இவர்களுக்கு கவலை இல்லை.


பாபிலோனியர்கள் கோள்களை எல்லாம் கடவுளர் என்றே கருதிவந்தனர். மக்களின் சிந்தனையையும் செயலையும் அவை அடக்கி ஆளுகின்றன என்று நம்பினர். வானத்தில் மிதந்து வரும் சந்திரன் பூமியில் உள்ள கடல் நீரை பொங்கி எழச்செய்கின்றது. கோள்கள் பல நேர்கோட்டில் வந்து நின்று, ஒன்றையொன்று மறைத்து மக்கள் உள்ளத்தில் பல்வேறு உணர்ச்சிகளை உண்டாக்குகின்றன. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம், கோள்களுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை காட்டுகின்றன! இத்தகைய எண்ணமே ஆதி மனிதனின் உள்ளத்தில் இடம் பெற்று வளர்ந்து மண்ணில் நிகழும் நோய், வறுமை, வெள்ளம், புயல் நிலநடுக்கம் ஆகிய எல்லா நிகழ்ச்சிகட்கும் விண்ணிலே தொடர்பு காணத் தூண்டியது. வருகின்ற துன்பங்களைத் தடுக்க முடியாவிட்டாலும், முன்கூட்டியாவது அறிந்துகொள்ள முயல்வதிலே ஆர்வம் காட்டினான்! கோளும் விண்மீனும் காட்டிய அறிகுறிகளை வைத்துக்கொண்டு தனக்குத் தோன்றியதை எடுத்துக்கூறினான். கூறிய சொற்கள், பின்னர் நடந்த செய்திகளுடன் ஒன்றிரண்டு இடங்களில் பொருந்திவிடவே தான் கண்ட குறுக்கு வழியிலே மேலும் மேலும் நம்பிக்கை கொண்டதுடன், மனநிறைவும் கொண்டான்.

இயங்கியப்படி இருக்கும் கோள்களின் நிலையை எதனை அடிப்படையாகக்கொண்டு குறிப்பிடுவது? கடிகாரத்தின் முகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் முள்ளைப் பார்க்கின்றோம்; ‘இரண்டில் இருக்கின்றது’, ‘எட்டில் இருக்கின்றது’ என்றெல்லாம் சொல்கின்றோம். ஆனால் இந்த எண்கள் இல்லாவிட்டால் முள் இருக்கும் இடத்தின் அடையாளம் என்னவென்று சொல்வது? இது போன்றே வானத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் கோள்களின் நிலையைக் குறிப்பிடுவதற்கு வான வட்டத்திலேயே நமது சோதிடர்கள் “எண்களை’ அமைத்துக்கொண்டார்கள். இத்தகைய எண்களை அமைப்பதற்கு வான வட்டத்திலே நிலையாகத் தோன்றும் விண்மீன்களையே அவர்கள் துணையாகக் கொண்டனர்.

கடிகார வட்டத்தைப் பன்னிரண்டு எண்களாகப் பிரித்தது போல, இந்த வான வட்டத்தையும் பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்திருக்கின்றனர். அந்தப் பகுதிகளில் அடங்கிய விண்மீன் கூட்டங்கள் சோதிடர்களின் உள்ளத்தில் எழுப்பிய கற்பனைகளையொட்டி ஆடு முதல் மீன் வரை பெயர் வைத்தனர். இக்குறிகளை ஓரை என்றும், இராசி என்றும், வீடு என்றும், மடம் என்றும் பல பெயர்களில் வழங்கினர். குறிப்பிட்ட ஒரு காலத்தில் எந்தெந்தெந்தக் கோள் எந்தெந்த வீட்டில் இருக்கின்றது என்று எளிதில் கூறி விடலாம்.


விண்ணறிவு பெற்றவர்கள் எவரும் கோள்கள் வெவ்வேறு வீடுகளில் தங்குகின்றன என்ற கருத்தினைக் கேட்டால் நகைக்கவே செய்வர். சனிக்கோல் இன்று துலாம் வீட்டில் இருக்கின்றது என்று சொல்கின்றோம். அப்படித்தான் நம் கண் பார்வைக்கும் அது தெரியும். ஆனால் அது அவ்வீட்டில் இல்லை. சற்று அண்மையில் நிற்கும் கம்பம் ஒன்று தொலைவில் இருக்கும் மரங்களைப் பின்னணியாகக் கொண்டு தோன்றுகின்றது! உடனே, அதைப் பார்த்த நாம், கம்பம் மரங்களின் இடையே இருக்கின்றது என்று சொல்லிவிட முடியாதல்லவா! பழங்காலத்தில் விண்மீன்களெல்லாம் “வான் கூரையில்” பதிக்கப்பட்டுள்ளன என்று நம்பினர். எனவே எல்லா விண்மீன்களும் ஒரே தொலைவில் இருப்பதாக அவர்கள் எண்ணினர். உண்மையில் கோள்களெல்லாம் மிகவும் அன்மையில் இருக்கின்றன. விண்மீன்களோ, நமது நினைவையும் கடந்த நெடுந்தொலைவிற்கு அப்பால் நிலை பெற்றுள்ளன! மிகவும் அன்மையில் இருக்கும் விண்மீனிலிருந்து (Sirius Star) ஒளி நம்மை வந்தடைய ஐந்து ஆண்டு காலம் பிடிக்கின்றது. அதாவது நாம் அந்த விண்மீனை இப்போது பார்க்கின்றோம் என்றால், அது ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய தோற்றம் எனப்பொருள். இன்றைய விண்மீனின் தோற்றத்தை நாம் காணவேண்டுமானால் இன்னும் ஐந்து ஆண்டு காலம் கழித்துதான் அதனை பார்க்க முடியும். எனவே கோள்கள் விண்மீன்களுடன் கூடுகின்றது என்பதெல்லாம் அறிவுக்கு பொருந்தாதது ஆகும். இன்னும் இதன் விளக்கம் பெருகும்.

பேராசிரியர் சுந்தரம் பிள்ளை விண்மீன்களைப் பார்த்து,

“வான்கா டதனில் வறிதே சுழலும்
 மீன்காள்! வேறும் உளதோ விளம்பீர்
மதியிலா மாக்கள் விதியென நும்மேல்
சுமத்தும் சுமையும் தூற்றும் சும்மையும்
உமக்கிடு பெயரும் உருவமும் தொழிலும்
அமைக்கும் குணமும் அதில்வரும் வாதமும்
யுக்தியும் ஊகமும் பக்தியும் பகைமையும்
ஒன்றையும் நீவிர் உணரீர்!

என்று கேட்டுக் கருத்திழக்கும் மக்களுக்காக கண்ணீர் வடிக்கின்றார்.


உலகமே மாயை என்று ஊர்தோறும் சொற்பொழிவு செய்கின்றவர்கள் கூட ஏனோ வானத்தில் கல்லாலும், மண்ணாலும், ஆவியாலும் காணும் மீன்களையும் கோள்களையும் கடவுளர்களாகக் கொண்டு சோதிடத்தில் உண்மை இருப்பதாக நம்புகின்றார்கள். இது சுரைக்காய் உண்ணக்கூடாது என்று ஊர்தோறும் பேசிவிட்டு வந்து வீட்டில் நுழைந்தவுடன் “சுரைக்காய் சாம்பார் இருக்கிறதா?” என்று மனைவியைக் கேட்டு அவள் இல்லை என்றதும் ‘உபதேசம் ஊருக்குத்தான்; உனக்கில்லை!’ என்று பேசிய மெய்யன்பர் கதையைத்தான் நினைவுப்படுத்துகின்றது. நாளும் கோளும் நம்மை என் செய்யும்? என்பதே உண்மை அறிவாகும்.
ஆனால், சோதிடமே விஞ்ஞானம் என்று இன்றைக்கு மாநாடுகள் எல்லாம் நடக்கின்றது. சோதிடம் ஒரு அறிவியல் என்று அதனை கல்லூரி பாடங்களில் வைக்க முயல்கின்றோம். நமது முதல் பாரத பிரதமரான நேரு அவர்களை ஜோதிட மாநாட்டிற்கு தலைமையேற்க அழைத்தபோது, “இந்திய நாட்டின் விடுதலையைப் போராடிப் பெற்றவர்கள் மக்களே! வானத்தில் சுழலும் கோள்கள் அல்ல!” என்று கூறிப் பங்கேற்க மறுத்துவிட்டார். அவர்தம் கூற்று அவரை உலக அறிவாளிகளில் ஒருவராக உயர்த்தியது. தமிழகத்தில் தந்தை பெரியார், பாரதியார் மற்றும் பல அறிஞர்களின் அறிவானது ஜோதிடத்தை மறுக்கின்றது. சம்பந்தர் தேவாரம்,

“ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
 சனி பாம்பி ரண்டும்… “

என்று பாடுகின்றது. இவையெல்லாம் சிவனை வணங்குபவர்களுக்கு ‘நல்லன’ என்று ஆன்மிக நோக்கில் பாடிவிட்டார். இதன் கருத்து இவற்றினால் மனிதனுக்கு எதுவும் நடந்துவிடாது என்பதாகும். நமது வள்ளற்பிரான்கூட “காலம் கடந்த கடவுளை வணங்க காலம் கருதுவதேன்?” என்று சோதிடத்தை இகழ்கின்றார்.


சுத்த சன்மார்க்கிகள் வழியில் நடைபயிலும் நாமெல்லாம் இந்த சாதகத்தை அறவே புறந்தள்ள வேண்டும். இதனை படிக்கும் பொது மக்களும் புத்தறிவு பெற்று சாதக மோசடியினை எதிர்த்து முழங்க வேண்டும். “கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போகவேண்டும்”. - TMR