Saturday, August 6, 2016

எரிதாதா சுவாமிகள்



01-08-2016 அன்று "சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியானது;

எரிதாதா சுவாமிகள்

திருவொற்றியூரில் ஜீவசமாதி கொண்டருளும் ஸ்ரீபாடகச்சேரி இராமலிங்க சுவாமிகளின் குருவாக விளங்கியவர் ஸ்ரீஎரிதாதா சுவாமிகள் ஆவார். இவர் கி.பி.1897-ஆம் ஆண்டு பல்லாரி மாவட்டத்தின் ஒரு குக்கிராமமான செள்ளகுரிக்கி என்ற ஊரிக்கு ஸ்ரீஎரிதாதா சுவாமிகள் எழுந்தருளினார்கள்.

ஸ்ரீஎரிதாதா சுவாமிகள் செள்ளகுரிக்கிக்கு வருவதற்கு முன்பு அவர்களது பூர்வாஸ்ரம வரலாறு இதுகாறும் அறிய முடியவில்லை. பார்ப்பதற்கும், அவரது செயல்பாட்டிற்கும் அவர் பித்தன் போன்றே காணப்பட்டார். கன்னட மொழியில் எரி என்பதற்குப் பைத்தியம் என்று பொருளுண்டு. அதனாலேயே சுவாமிகளின் ஊர், பெயர் தெரியாநிலையில் மக்கள் அவரை எரிசுவாமிகள் என்றே அழைத்தனர். சுவாமிகள் கல்யாண துர்க்கம், பெளகுப்பே, முஷ்ரூர், உரவகொண்டா, வெலுகொண்டா, சீகலகுரிசி முதலிய இடங்களிலிருந்து பல அற்புதங்களை நிழத்தியுள்ளார்கள்.

ஒரு கிணற்றில் மூழ்கி மற்றொரு கிணற்றில் ஏறுவது. ஒரே சமயத்தில் பல இடங்களில் பலருடன் கூடியிருப்பது. மழை காலத்தில் ஆற்றில் தெப்பம் போல் மிதந்து செல்வது போன்ற அற்புதங்கள் நடந்தன. அன்பர்களுக்கு அவர் சொல்லும் பலன்கள் அப்படியே பலித்தன. ஒருமுறை பாதையில் விழுந்து இறந்து கிடந்த பருந்தைப் பார்த்து, 'எழுந்து போ ஐயா' என்று சொன்னவுடன்... இறந்து கிடந்த பருந்து உயிர்பெற்று எழுந்து பறந்து சென்றது.

மற்றொரு முறை பாம்புப்புற்றிலிருந்து பாம்பைப் பிடித்துக் கம்பளியில் சுற்றி அன்பன் ஒருவனிடம் கொடுத்து வீட்டிற்குச் சென்று தெய்வப்படத்தின் முன்வைத்துப் பூசை செய்து பிரித்துப் பார்' என்றாராம். அன்பனும் அவ்வாறே செய்ய, அந்த நாகப்பாம்பு பொன்னாக மாறியிருந்தது.

திக்கையர் என்னும் சீடர், சுவாமிகளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். எரிசுவாமிகளுக்காக, பக்தர்களுடைய பொருளுதவியாலும் பக்கத்துக் கிராமத்தார் உதவியாலும் கருங்கல்லால் அழகிய மடம் ஒன்றைக் கட்டினார். அதுமுதல் தாம் ஜீவசமாதி அடையும்வரை ஸ்ரீஎரிசுவாமிகள் அம்மடத்திலேயே தங்கியிருந்து அன்பர்களுக்கு அருள்பாலித்து வந்தார்கள்.

இப்படி ஸ்ரீஎரிசுவாமிகளின் சேவையையே உயிர்மூச்சாகக் கொண்டிருந்த திக்கையரை ஒருநாள் திடீரென்று அழைத்த எரிசுவாமிகள். 'நீ புறப்பட்டுப் போய்விடய்யா' என்று கட்டளையிட்டார். குருவின் கட்டளையை சிரமேற்கொண்ட திக்கையர் ஏன்? எதற்கு? என்று எதுவும் கேட்காமல் அந்த கணமே மடத்தைவிட்டு வெளியேறிவிட்டார். செல்லும்போது, 'எப்படி குருவை மறந்திருப்பேன்? எப்படி குருசேவையைக் கைவிடுவேன்?' என்ற பாடலை பாடிக் கொண்டே சென்றார். அதன்பின் திக்கையர் எங்கு சென்றார் என்ன ஆனார் போன்ற விவரங்கள் இன்றளவும் தெரியவில்லை.

ஸ்ரீஎரிசுவாமிகள் செள்ளகுரிக்கி மடத்தில் சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் தங்கி அருளாட்சி செய்து 1922-ஆம் ஆண்டு வைகாசி மாதம் நிறைமதி நன்நாளில் பரிபூரணமானார்கள். பக்தர்கள் தரிசிப்பதற்காக அவரது ஸ்தூலத் திருமேனியை மூன்று நாள்கள் வைத்திருந்து அதன்பின் குகை செய்வித்தார்கள். இப்பொழுது இது மகாபுண்ணிய சேஷத்திரமாக விளங்குகின்றது. மடத்தினுள் சுவாமிகளின் உலோகத் திருவுருவம் பிரதிட்டை செய்து அதற்கு நேர் கீழே நிலவறையுள் சுவாமிகள் சமாதி உள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டக்கல்லிலிருந்து மேற்கே பெல்லாரி செல்லும் சாலையில் சுமார் 34 கி.மீ. சென்றால், தெற்கே அனந்தப்பூர் செல்லும் சாலை பிரியும். அங்கிருந்து 5 கி.மீ. சென்றால் செள்ளக்குரிக்கி வரும். பிரதான சாலையின் மேல்புறம் ஊரின் ஆரம்பத்திலேயே பெரிய மடமும் சமாதியும் உள்ளன.    

http://www.vallalarspace.com/user/c/V000021579B
         or

https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWWE9ab2VZQm5GRjA/view?usp=sharing
 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.