Saturday, August 6, 2016

காயத்ரி



01-08-2016 அன்று "சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியானது;

காயத்ரி




          காயத்ரி; கா-ய-த்ரி. க ஜலத்தத்துவமாகிய ஸ்தூலதேகம், பிரமஸ்வரூபம். ய வாயுதத்துவமாகிய சூக்ஷ்மதேகம், விஷ்ணு ஸ்வரூபம். ஆ... அக்னிதத்துவமாகிய காரணதேகம். ருத்ரஸ்வரூபம். த்ரி மூன்று. அதாவது, மேற்குறித்த மூன்று தேகங்களின் ஸ்வரூப ரூப சுபாவ குணங்களை ஐயம் திரிபு மயக்கமின்றிக் கடந்தால், ஜனன மரண சாகரம் நீங்கி நித்தியர் ஆவோம். எப்படியெனில்; காயத்திரி மந்திரத்திற்குப் பாதம் மூன்று. பாதம் ஒன்றிற்கு வர்ணம் எட்டு. ஆக மூன்று பாதத்திற்கும் வர்ணம் இருபத்து நான்கு. பாதம் மூன்றென்பதன் குறிப்பு: ஜீவர்களுக்கு மலம் மூன்று. வருணம் இருபத்து நான்கு என்பதன் குறிப்பு: இரு-இரண்டு, ஜீவகாருண்யம் சத்விசாரம் ஆகிய இரண்டையும்; பத்து (பற்று)பிடி, பற்றினால்; நான்கு-நாலாகிய ஜீவகாருண்யம், ஈசுரபக்தி, பாச வைராக்கியம், பிரம ஞானம் ஆகிய இவற்றை அடையலாம். அடைந்து, காயத்ரிமந்திரம் திரிமூர்த்தி ஸ்வரூபமாதலால், இதற்கு அதீதமான பிரமானுபவத்தைப் பெறலாம்.


          மேலும், தத்துவ ரேயங்களான மூன்று தேகங்களுக்கும் தத்துவம் யாதெனில்; வர்ணம் இருபத்து நான்கு. ஆதலால், ஸ்தூல தத்துவம் இருபத்துநான்கு. பாதம் மூன்று, காயத்ரி திரிமூர்த்தி ஸ்வரூபம், இவற்றுள் ஒன்றைக் கொடுக்க வந்தது ஒன்று; 3, 3, 1 ஆகிய இவற்றைச் சேர்க்க ஏழு ஆகிறது. ஆதலால், சூட்சும தத்துவம் ஏழு. இதற்குச் சத்தி மூன்று. அநுபவசத்தி ஒன்று, சமத்துவம் ஒன்று, ஆக ஐந்து. ஆதலால் காரணதேக தத்துவம் ஐந்து. மேற்குறித்த முப்பத்தாறு தத்துவங்களையுங் கடந்தால், அனுபவம் விளங்கும். எப்படியெனில்; ஓதயாத்: ஓ ஆன்ம அறிவின்கண், த சத்துவ குணமயமாய், த் அருளனுபவம் பெற்று, யா காயபிரமமதல். ஆதலால், மேற்குறித்த காயத்திரியின் ஸ்வரூபானுபவத்தைப் பெறுதலாம்.

                                                                         திருவருட்பிரகாச வள்ளலார்

          இந்து வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தில் உள்ள ஒரு பாடல்தான் இந்த காயத்ரி பாடல். விசுவாமித்திரர் என்கிற முனிவரின் தவத்தில் மகிழ்ந்து காயத்ரி தேவி அவருக்கு இப்பாடலை உபதேசிக்க, அதன்படி விசுவாமித்திரர் எழுதியதே காயத்ரி பாடல். இப்பாடல் சமஸ்கிருத மொழியில் அமைக்கப்பட்டுள்ளது;

          "ஓம் பூர் புவஸ்ஸூவ தத் சவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய
           தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்"

இதுவே அந்த காயத்ரி பாடலாகும். இப்பாடலே மந்திரமாக வழங்கப்பட்டு தமது வேண்டுதல் நிறைவேற இதனை தினசரி உச்சரிக்கும் வழக்கம் ஒருசிலரிடையே இருந்து வருகின்றது. விசுவாமித்திரர் இராமனுக்கு இம்மந்திரத்தை உபதேசிக்க, இராமன் இந்த மந்திரத்தின் உதவியால் இராவணனை கொன்றான் என்கிறது இராமாயணம்.

இம்மந்திரத்தின் விளக்கம்:

          "பூர்லோகம், புவர்லோகம், ஸ்வரலோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்கக் காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்."

          இதனையே பாரதியார் காயத்ரி மந்திரத்தின் விளக்கத்தை தான் பாடிய பாஞ்சாலி சபதத்தில் பின்வருமாறு பாடுகிறார்,

"செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்
 அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக"

          என்று சூரிய வணக்கத்திற்குரியதாக இந்த காயத்ரி மந்திரம் அமைந்துள்ளது என்கிறார். "மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்" என கிருஷ்ண பகவான் கீதையில் கூறியுள்ளார்.

          இவையன்றி பிற்காலத்தில் ஒவ்வொரு கடவுளைரை தியானிக்கவும் தனித்தனி காயத்ரி மந்திரங்கள் ஏராளமாகத் தோன்றிவிட்டன.

          வள்ளற்பெருமான் தாம் எழுதிய உரைநடை தொகுப்பில் "சாகாத கல்வி" என்ற பகுதியில், "வேதங்கள் முக்கியம் சாகாத கல்வியைச் சொல்லியிருக்கின்றன. தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிருக்கிறது." என்கிறார். (திருவருட்பா-உரைநடை நூல் பக்கம்-411)

          அதாவது முதல் அதிகாரமான "அறத்துப்பால்" என்பதில் "கடவுள் வாழ்த்து" பகுதியில் உள்ள சில குறள் வெண்பாக்களை எடுத்துக்காட்டுகிறார். முக்கியமாக "நீடுவாழ்வார்" என முடியும் குறள் வெண்பாக்கள் சாகாத கல்வியினைத் தெரிவிக்கின்றன.

          "மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
           நிலமிசை நீடுவாழ் வார்". - 3

மேலும் "வேதாகமச் சிறப்பு" என்ற பகுதியில், "இந்து வேதாகமங்களில் மாத்திரந்தான் ஏமசித்தி ஞானசித்தி முதலிய சித்திகளைச் சொல்லியிருக்கின்றது. மற்ற எந்தச் சமயங்களிலும் மேற்படி சித்திகளையும் சாகாத கல்வியையும் சொல்லவில்லை." என்கிறார். (திருவருட்பா-உரைநடை நூல் பக்கம்-440)

          சாகாத கல்வியினை இந்து வேதங்கள் குறிப்பிட்டுள்ளன என்று வள்ளற்பெருமான் குறிப்பிடும் இடங்கள் மூன்று. ஒன்று தமிழ் வேதமான திருக்குறள். இரண்டாவதாக சைவ சமயத்தில் கூறப்பட்டுள்ள "சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல்" என்கிற இவை மூன்றும் சாகாத கல்வியைத் தெரிவிக்கும். (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-440). மூன்றாவதாக சமஸ்கிருத வேதமான ரிக் வேதமாகும். சாகாத கல்வியினை ரிக் வேதத்தில் உள்ள இந்த 'காயத்ரி' மந்திரந்தான் தெரிவிக்கின்றது. அதற்கு ஆதாரமாக அவரே இம்மந்திரத்தின் பொருளையும் தமது உரைநடை நூலில் மேற்கண்டவாறு குறிப்பித்துள்ளதை காணமுடிகின்றது.  அவர் கூறின அந்தப் பொருளை நாம் சற்று விளக்குவோம்; காயத்ரி மந்திரத்தின் பொருளை மூன்று நிலைகளில் வள்ளற்பெருமான் விளக்குகின்றார். அது எப்படி எனப்பார்ப்போம்;

முதல் விளக்கம்:

காயத்ரி என்பது க + ஆ + ய + த்ரி என்று பிரியும். இதன் பொருள்;

க = மூன்றில் இரண்டு பாகம் நீரினால் ஆன நமது வெளிப்புற உடலைக் குறிக்கும். மேலும் இவ்வுடலுக்கு அதிகாரியான பிரமனையும் குறிக்கும்.

ய = கண்ணுக்கு புலப்படாத வாயுவால் ஆன நமது உட்புற உடலைக் குறிக்கும். மேலும் இவ்வுடலுக்கு அதிகாரியான விஷ்ணுவையும் குறிக்கும்.

ஆ = நெருப்பினால் ஆன நமது காரண உடலைக் குறிக்கும். மேலும் இவ்வுடலுக்கு அதிகாரியான ருத்ரனையும் குறிக்கும்.

த்ரி = மூன்று. அதாவது சந்தேகங்கள் அற்று, பிழைக்காட்சிகள் அற்று, அறிவு வாட்டங்கள் அற்று நாம் நமது ரூப உடலையும், வாயு உடலையும், அனல் உடலையும் கடக்கவேண்டும். பிரமன், விஷ்ணு, ருத்ரன் இவர்களின் தத்துவங்களை முற்றிலுமாகக் கடந்தால் நாம் பெறுவது மரணமிலாப் பெருவாழ்வு ஆகும். இச்செய்தியினை நமக்குத் தெரிவிப்பதுவே இந்த காயத்ரி மந்திரமாகும்.

          கடப்பது என்பது நமது இந்த உடலை ரூப வாயு அனல் என்கிற மூன்று குணங்களில் இருந்து முற்றிலும் விடுவித்து விடுவதாகும். அப்படி விடுவித்தால் நாம் எடுப்பது ஞான உடல் ஆகும். அறிவே வடிவான உடலாகும். இந்த ஞான உடலுக்கே மரணம் என்பது இல்லை.

இரண்டாவது விளக்கம்:

          காயத்ரி மந்திரமானது மூன்று வரிகளைக் கொண்டதாக உள்ளது. ஒவ்வொரு வரிக்கும் எட்டு எழுத்துக்களை உடையதாக உள்ளது. (பாதம் மூன்று, வர்ணம் எட்டு). காயத்ரி மந்திரத்தின் மூன்று வரிகளும் நாம் கொண்டுள்ள ஆணவம், கன்மம், மாயை என்கிற மூன்று மலங்களை குறித்து நிற்கிறது.

          ஒவ்வொரு வரியில் உள்ள எட்டு எழுத்துக்களும் எட்டுத் திரைகளை குறிக்கிறது. கருப்பு, நீலம், பச்சை, செம்மை, பொன்மை, வெண்மை, கலப்பு மற்றும் வெவ்வேறு திரைகளும் நம்மை தனித்தனியாக நின்று மறைத்துக்கொண்டிக்கிறது. 

          ஆக மொத்தம் மூன்றோடு எட்டினை பெருக்க இருபத்து நான்கு எழுத்துக்கள் கொண்டதாக காயத்ரி மந்திரம் விளங்குகின்றது. இருபத்து நான்கு என்பதை நாம் இரண்டு + பற்று + நான்கு என்று பிரிக்க வேண்டும். இரண்டு என்பது ஜீவகாருண்யம் மற்றும் சத்விசாரத்தைக் குறிக்கும். பற்று என்பது - நாம் இவை இரண்டையும் பற்ற வேண்டும் என்பதைக் குறிக்கும். இவ்வாறு நாம் ஜீவகாருண்யம் மற்றும் சித்விசாரத்தை பற்றினால் நமக்குக் கிடைப்பது நான்கு ஆகும். நான்கு என்பது, ஜீவகாருண்யம், பாச வைராக்கியம், ஈசுரபக்தி, பிரமஞானம்.

          ஜீவகாருண்யம் என்பது நமது உயிர் தயவு நிலை அடைவது. இதனால் நமக்கு பிரமனுடைய ஆயுசு கிடைக்கும். 4,32,000 வருட ஆயுள். படைக்கும் தொழிலை செய்யலாம்.

          பாச வைராக்கியம் என்பது, வி+ராகம்=விராகம்=வைராக்கியம். யான், எனது என்பதே பாசம் ஆகும். எனவே நாம், 'நான்' என்கிற அகங்காரத்தையும் 'எனது' என்கிற பற்றினையும் விட்டுவிடுதல் பாச வைராக்கியம் எனப்படும். இதனால் நமக்கு விஷ்ணுவின் ஆயுசு கிடைக்கும். 8,64,000 வருட ஆயுள். காத்தல் தொழிலை செய்யலாம்.

           ஈசுரபக்தி என்பது, எல்லா உயிர்களிடத்தும் கடவுள் நிறைந்து விளங்குவதை உணர்தலே ஆகும். இதனால் ருத்திரனுடைய ஆயுசு கிடைக்கும். 12,96,000 வருட ஆயுள். அழித்தல் தொழிலை செய்யலாம்.  

          பிரம்மஞானம் என்பது கடவுளைப் பற்றிய அறிவு. கடவுள் நிலையறிந்து அம்மயமாதல். நானே பிரமம் என்று அறியும் அறிவு. ஆன்ம அறிவினை அடைதல்.  இதனால் நமக்கு சுவர்ணதேகம், பிரணவதேகம், ஞானதேகம் முதலியன கிடைக்கப்பெற்று என்றும் அழியாத மரணமிலா பெருவாழ்வு கிடைக்கும். கடவுள் மயம் ஆகலாம். ஐந்தொழிலையும் தமது சுதந்தரத்தில் செய்யலாம்.

          பிரமன், விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூன்று மூர்த்திகளின் சங்கம நிலையாக இருப்பது காயத்ரி மந்திரமாகும். இதனைக்கொண்டு நாம் இவற்றிற்கும் அதீதமான ஆன்ம அறிவினை பிரமானுபவத்தை பெறவைப்பது காயத்ரி மந்திரமாகும். 

மூன்றாவது விளக்கம்:

காயத்ரியின் வர்ணம் 24-ம் ஸ்தூலதேக தத்துவமாகியது - 24
காயத்ரியின் பாதம் - 3
காயத்ரியின் த்ரிமூர்த்தி ஸ்வரூபம் - 3
பாதம் மற்றும் ஸ்வரூபம் என்கிற ஆறில் ஒன்றை சேர்க்க ஏழாகும்படி வந்தது அதீதமான ஒன்று - 1
ஆக, பாதம் - 3 + ஸ்வரூபம் - 3 + அதீதம் - 1 என சூட்சுமதேக தத்துவமாகியது - 7
சத்தி - 3 + அநுபவசத்தி - 1 + சமத்துவம் - 1 என காரணதேக தத்துவமாகியது - 5

        மேற்குறித்த 36 தத்துவங்களையும் கடந்தால் அனுபவம் விளங்கும். "ஓ தயாத்" என்று காயத்ரி மந்திரம் முடிகிறது.

ஓ என்பது - ஆன்ம அறிவு
த என்பது - சத்துவ குணம்
யா என்பது - காயம் பிரமமாதல்
த் என்பது - அருளனுபவம்

          ஆன்ம அறிவு பெற்று சத்துவ குணமாய் அருளனுபவம் பெற்று இறைநிலை பெறுவது என்பதே காயத்ரி என்பதன் பொருள்.

          சைவ சித்தாந்தம் என்பதே 36 தத்துவங்களை குறித்து அதனை கடப்பதே ஆகும். பிரகிருதிமாயையிலிருந்து தோன்றும் ஆன்ம தத்துவம் 24-ம் ஸ்தூல தத்துவங்களாகவும், அசுத்தமாயையிலிருந்து தோன்றும் வித்தியாதத்துவம் 7-ம் சூட்சும தத்துவமாகவும், சுத்தமாயையிலிருந்து தோன்றும் சிவதத்துவம் 5-ம் காரண தத்துவமாகவும் காயத்ரி குறிப்பிடுவதாக வள்ளற்பெருமான் விளக்குகின்றார்.

          நிலம், காற்று, நீர், தீ, ஆகாயம், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், பற்றுதல், பதித்தல், படைத்தல், பலுக்கல், கழித்தல், மெய், வாய், கண், மூக்கு, செவி, மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகியவை 24-ம் ஆன்ம தத்துவங்கள்.

          காலம், நியதி, கலை, வித்தை, இராகம், மாயம் ஆகிய 7-ம் வித்தியா தத்துவங்கள்.

          நாதம், விந்து, சாதாக்கியம், ஈசுரம், சுத்தவித்தை ஆகிய 5-ம் சிவ தத்துவங்கள்.

          காயத்ரி மந்திரத்திற்கு இந்து மதம் கூறும் விளக்கத்திற்கும் சுத்த சன்மார்க்கம் கூறும் விளக்கத்திற்கும் மிகுந்த வேறுபாடு உள்ளதை அறிக. 

                                                                               தி.ம.இராமலிங்கம் 




http://www.vallalarspace.com/user/c/V000021579B


or
https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWWE9ab2VZQm5GRjA/view?usp=sharing

1 comment:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.