01-08-2016 அன்று "சன்மார்க்க
விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியானது;
புத்தம் - அறிவு
மார்க்கம்
"புத்தர்
மகானோ, ரிஷியோ அல்லர்; இந்தத் தன்மையை எதிர்த்தவர். அந்தக் காரணத்தினால்தான் நாம் இன்று
புத்தரைக் கொண்டாடும்படியான நிலை இருக்கிறது. புத்தர் எப்படி மகானோ, ரிஷியோ இல்லையோ
அதேபோல் பெளத்தம் என்பதும் ஒரு மதமல்ல. பலபேர் பெளத்தம் என்பதைத் தவறாக ஒரு மதம் என்றே
நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு மதம் என்றால் கண்டிப்பாக அதற்கு ஒரு கடவுள் வேண்டும்;
மோட்சம், நரகம் வேண்டும்; ஆத்மா, பாவ புண்ணியம், அவற்றிற்கு ஏற்றார்போல் தண்டனை இவைகளெல்லாம்
வேண்டும். இன்னும் சிறந்த மதம் என்பதற்கு ஒரு கடவுள் போதாது. பல கடவுள்கள் வேண்டும்.
அவற்றிற்குப் பெண்டாட்டி, பிள்ளைகுட்டி, வைப்பாட்டி இவைகளெல்லாம் வேண்டும். இப்படியெல்லாம்
இருந்தால்தான் அது மதமாகும்
ஆனால் புத்தர்
கடவுளைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்; மனிதனைப்பற்றிக் கவலைப்படு என்று சொல்லிவிட்டார்.
மோட்சம் நரகம் இல்லை; ஒழுக்கம்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டார். இன்னும் அறிவுதான்
முக்கியம் என்றார்; ரிஷி சொன்னார், மகான் சொன்னார் என்று நம்பாதே; யார் எதைச் சொன்னாலும்
உன் அறிவைக்கொண்டு தர்க்கம் செய்து மிஞ்சுவதை எடுத்துக்கொள் என்று சொல்லிவிட்டார்....
புத்தியை உபயோகப்படுத்துபவர்கள்
எல்லோருமே புத்தர்கள்தாம்.... ஈரோட்டில் கூட்டிய புத்த மாநாட்டிற்கு வந்திருந்த உலக
பெளத்த சங்கத் தலைவரான திரு.மல்லலசேகரா பேச ஆரம்பிக்கிறபோதே 'இங்கு நாம் எல்லோரும்
புத்தர்களாகவே கூடியிருக்கிறோம்' என்று ஆரம்பித்தார்.... இன்றைய நிலையில் நாம் புத்திக்கு
மரியாதை கொடுப்பதே இல்லை. அறிவைக்கொண்டு எதையும் பார்க்க வேண்டும். அறிவை உபயோகப்படுத்த
வேண்டும் என்ற படிப்பினைக்கு இடமேயில்லை. புத்தியை உபயோகித்து விஷயங்களைத் தர்க்கித்துத்
தர்க்க முறையில் உணர்வது என்று வந்திருந்தால் மக்கள் தலைதூக்கியிருப்பார்கள். அறிவைப்
பயன்படுத்த வேண்டும் என்று யாரும் கவலைப்படுவதில்லை."
15-05-1957-ஆம்
ஆண்டு சென்னை எழும்பூரில் 2501-ஆம் ஆண்டுப் புத்தர் விழாவின்போது தந்தை பெரியார் உரையாற்றியது இது. நிற்க.
கங்கை நீரைத்
தேடி மக்கள் செல்லும் காலம் போய்... மக்கள் வீடுதேடி கங்கை நீரே வந்துவிட்டது! என்பதாய்
சிலர் மகிழ்கிறார்கள். கங்கை நீர் வீட்டுக்கு வந்து ஆவதென்ன? எங்கள் விவசாய நிலத்திற்குத்தானே
வரவேண்டும் என்று இன்றைய புத்தர்கள் கேட்கிறார்கள். இப்படி நாம் எதிலும் அறிவினை பயன்படுத்த
வேண்டும் என்றே அறிவுச் சபையையினை வள்ளற்பெருமான் வடலூரில் ஏற்படுத்தினார். (ஞானசபை
என்றால் அறிவு விளங்கும் இடம் - அறிவாலயம் எனப்பொருள்) சிற்றறிவினைக்கொண்டே நாம் இவ்வளவு
கேள்விகளை எழுப்ப முடிகிறதென்றால் பேரறிவு உடைய ஞானசபையினைக் கொண்ட சுத்த சன்மார்க்கிகள்
இச்சமூகத்தை நோக்கி எவ்வளவு கேள்விகள் எழுப்ப வேண்டும்?
சுத்த சன்மார்க்க சங்கங்கள் சமுதாயத்தில்
நிகழும் மூட நம்பிக்கைக்கு எதிராக குரல் கொடுக்க மறந்துவிட்டன. அன்னதானம், திரு அருட்பெருஞ்ஜோதி
அகவல் பாராயணம் ஆகியவற்றோடு சத்விசாரத்தின் மூலம் இந்த சமுதாயத்தில் நிகழும் மூடநம்பிக்கைகளை
ஊடகங்கள் மூலம் கண்டிக்கவும் வேண்டும். சங்கங்கள் எல்லாம் அறிவார்ந்தக் கருத்துக்களை
மக்கள் சமூகத்திடம் எடுத்துச்செல்ல வேண்டும். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? ஞானசபை
ஜோதி பார்த்துவிட்டு, வள்ளற்பெருமானையும் வாழ்த்தி பேசிவிட்டு மதங்களிலும் சமயங்களிலும்
சடங்குகளிலும் மற்றவர்களைவிட முன்னிலையில் இருந்துக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு
இந்த உலகத்தையும் ஏமாற்றுகிறோம்.
http://www.vallalarspace.com/user/c/V000021579B
or
https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWWE9ab2VZQm5GRjA/view?usp=sharing
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.