Saturday, August 6, 2016

கிறுஸ்து - பேறுபெற்றோர்



01-08-2016 அன்று "சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியானது;

கிறுஸ்து - பேறுபெற்றோர்

ஏழையின் உள்ளத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கபடுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர் ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.

என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே. மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள். ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள். (மத்தேயு 5:3 - 5:12)

ஏழைகள், துயரம் அடைபவர்கள், கனிவுடையோர்கள், நீதிநிலை நாட்டுபவர்கள், இரக்கமுடையோர்கள், தூய்மையான உள்ளம் படைத்தோர்கள், அமைதியை உண்டாக்குபவர்கள், நீதிக்காக துன்பப்படுவோர்கள் ஆகியோர்களே அதிஷ்டசாலிகள் என்கிறார் இயேசு பெருமான்.

இன்றைய உலகில் ஏழைகளும் துயரம் அடைபவர்களும் நீதிக்காக துன்பப்படுபவர்களுமே மிக அதிகமாக வசிக்கின்றனர். இவர்கள் எவ்வகையில் அதிஷ்டசாலியாக இருக்க முடியும்? என்றால், விண்ணுலகில் இவர்களுக்கு  சொகுசான வாழ்வு உண்டு என்கிறது பைபிள்.

அப்படியெனில், விண்ணுலக சட்டப்படி அங்குள்ள ஏழைகள், துயரம் அடைந்தவர்கள், நீதிக்காக துன்பப்பட்டவர்களே தற்போது மண்ணுலகில் இன்பமடைபவர்களாக இருக்க வேண்டும்! ஆக, ஒரு உலகில் துன்பம் அடைவோர் மறு உலகில் இன்பம் அடைவார்கள் என்றே நாம் இதனை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. துன்பமே அல்லாது இரு உலகிலும் இன்பமடைபவர்கள் யார்?

சுத்த சன்மார்க்கத்தின் படி விண்ணுலகம் என்ற ஒன்று இல்லவே இல்லை. நாம் இன்பமுற்றாலும் துன்பமுற்றாலும் ஏதேனும் ஒரு மண்ணுலகில்தான் அதனை அனுபவித்தாக வேண்டும்! எனவே ஏழ்மை, துயரம் ஆகியவைகள் இந்த மண்ணுலகிலிருந்து நீக்கப்படுதல் வேண்டும். அதற்கு சுத்த சன்மாக்கமே ஒரே வழியாக உள்ளது. எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க வேண்டுமென்பதற்காக, ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளராக மாற்றம் கண்டு ஒரு புதிய உலகியல் நடத்த வேண்டும். அம்மக்களே உண்மையில் பேறுபெற்றவர்கள்.

http://www.vallalarspace.com/user/c/V000021579B
          or
https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWWE9ab2VZQm5GRjA/view?usp=sharing

 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.