Saturday, August 6, 2016

கங்கா ஜலம்



01-08-2016 அன்று "சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியானது;

கங்கா ஜலம்

          பர்வதராஜன் மற்றும் மைனாவதி தம்பதியினரின் மகளான கங்கை என்பவள் சிவபெருமானிடம் என்றும் புனித தன்மை உடையவளாகத் திகழ வரம் பெற்றாள். இதனால் தேவலோகத்தினை புனிதம் செய்ய இந்திரன் அழைத்ததால் அவள் தேவலோக நதியாக மாறினாள். இதற்கிடையில் பூலோகத்தில் பகிரதன் என்பவனின் முன்னோர்கள் சாபம் பெற்று சாம்பலாக இருந்தார்கள். அவர்களுக்கு முக்தி கிடைக்க தேவலோகத்தில் உள்ள கங்கை நதி பூமிக்கு வந்தால் மட்டுமே இயலும் என்பதை எப்படியோ அறிந்துக்கொண்டான் பகிரதன். அந்நதி பூமிக்கு வர கங்கையை நோக்கித் தவமிருந்தான். கங்கையும் அவனது தவத்தை மெச்சி தேவலோகத்திலிருந்து பூமிக்கு வர ஒப்புக்கொண்டாள். ஆனால் தாம் பூமிக்கு வரும்பொழுது ஏற்படும் வெள்ளப் பெருக்கினை கட்டுப்படுத்த சிவபெருமானால் மட்டுமே முடியும் என்று கூறினாள். பகிரதன் மீண்டும் சிவபெருமானை நோக்கி தவமிருந்து, கங்கை பூமிக்கு வரும்பொழுது ஏற்படும் வெள்ளப் பெருக்கினை தடுத்து காத்தருள வேண்டும் என்றார். பகிரதன் தவத்தை மெச்சிய சிவபெருமான் அதற்கு ஒப்புக்கொண்டு தேவலோகத்திலிருந்து பூமியை நோக்கி பாய்ந்த கங்கையை தமது சடாமுடியில் தாங்கிப் பூமி தாங்கும் அளவில் மட்டும் கங்கையை வெளிவிட்டார்.


சிவபெருமானை கங்கையுடன் சம்பந்தப்படுத்தி வள்ளற்பெருமான் ஏறத்தாழ நாற்பது பாடல்களில் பாடியிருக்கின்றார். (38, 122, 343, 505, 597, 623, 656, 785, 888, 902, 1070, 1211, 1397, 1410, 1643, 1653, 1791, 1811, 1962-146, 1965-137, 1965-208, 2058, 2173, 2235, 2308, 2315, 2324, 2386, 2428, 2452, 2551, 2579, 2604, 2718, 2757, 2968, 3220, 4967)

"தங்கும் உலகங்கள் சாயாமற் செஞ்சடைமேல்
 கங்கைதனைச் சேர்த்த கடவுள்" - 1965-137

          இதுதான் கங்கை ஆற்றின் புராணக் கதை. இக்கதையை பகுத்தறிவுக்கொண்டு ஆராயப் புகுந்தால், அது அவ்வளவு நன்றாக இருக்காது. இப்படிப்பட்ட புனித கங்கை நீரை பார்சல் மூலம் வீடுகளில் டெலிவரி செய்யும் திட்டத்தை நமது மத்திய அரசு சமீபத்தில் தொடங்கியது. பீகார் தலைநகர் பாட்னாவில் இத்திட்டத்தை மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் மனோஜ் சின்கா ஆகியோர் தொடங்கி வைத்தனர். புனித தலங்களான ரிஷிகேஷ், கங்கோத்திரியில் இருந்து எடுக்கப்படும் கங்கை தீர்த்தத்தை இனி அஞ்சலகம் மூலம் மக்கள் பெறலாம் என்று ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார்.

          அதன்படி அரை லிட்டர் கங்கை நீர் ரூபாய் 35/-க்கும், 200 மில்லி ரூபாய் 25/-க்கும்           ரிஷிகேஷ் நீர் அரை லிட்டர் ரூபாய் 22/-க்கும் 200 மில்லி ரூபாய் 15/-க்கும் அஞ்சலகம் மூலம் விற்பணை செய்யப்படுகின்றது. இந்நீர் விற்பணைக்கு வந்த முதல் நாளான ஜூலை 12-ம் தேதியே அனைத்து பாட்டில்களும் விற்று தீர்ந்துவிட்டன. அதாவது ஒன்பது தபால் நிலையங்களில் மட்டும் விற்பணைக்கு வந்த  மொத்தம் 270 பாட்டில்கள் விற்பணை செய்யப்பட்டுள்ளன. 


          வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்து சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் அனைத்து வரிகளும் உட்பட ஒரு லிட்டர் விலை ரூபாய் 65/-க்கும் டீசல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 56/-க்கும் பெட்ரோலிய நிறுவனங்கள் மக்களுக்கு அளிக்கின்றன. ஆனால் குடிப்பதற்குக் கூட உபயோகமற்ற, ஒரு பயனும் அற்ற நம்நாட்டிலேயே கிடைக்கின்ற ஆற்று நீரை சுத்திகரிக்கப்பட்டு பாட்டிலில் அடைத்து ஒரு லிட்டர் ரூபாய் 70/-க்கும் ரூபாய் 44/-க்கும் விற்பணை செய்கிறது நமது மத்திய அரசு.  மக்களின் மூட வழக்கங்களை மிகச் சரியான முறையில் நமது மத்திய அரசு பயன்படுத்தி, மக்களின் பொருளாதாரத்தை சுரண்டுகின்றது.

          மக்களின் மூட நம்பிக்கைகளைப் பயன்படுத்தி ஒரு அரசு பணம் ஈட்டுவது குற்றமில்லை என்று அர்த்தசாஸ்திரம் கூறுகிறது. இதைத்தான் நமது மத்திய அரசு செய்கிறது. நமது மாநில அரசு மக்களிடம் போதை தரும் நீரை விற்கின்றது. நமது மத்திய அரசு மக்களிடம் ஆற்று நீரை விற்கிறது. முன்னது மது போதையைத் தருகிறது. பின்னது மத போதையைத் தருகிறது.  இவை இரண்டு நீரினாலும் மக்கள் போதையில் தள்ளாடுகின்றனர். நீரின்றி அமையாது உலகு என்பதை நமது அரசுகள் இப்படித்தான் மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன.

          எங்களிடம் பணம் கொடுத்து பாவமன்னிப்புச் சீட்டை வாங்கிக்கொண்டால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அப்பாவங்கள் உங்களைவிட்டு நீங்கிவிடும் என்று அன்று கத்தோலிக்க மதகுருக்கள் தங்கள் மக்களிடம் பணத்தை சுரண்டினர். தற்போது அம்மக்களின் விழிப்புணர்வால் இம்முறை நீக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்து மதத்திலோ ஒவ்வொரு பாவத்திற்கும் ஒரு பரிகார பூசை உள்ளது. நாம் எந்த பாவத்தையும் செய்யலாம். செய்த பிறகு அப்பாவத்தை நீக்க செய்யும் பூசைக்கேற்ற பணத்தை வேதியர்களுக்கு கொடுத்துவிட்டால், யாக பூசை செய்து கடவுளிடம் மந்திரத்தால் பேசி நமது பாவத்தை நீக்கிவிடுவார்களாம் அவர்கள். இப்படி பாவத்தை நீக்கும் ஒரு பொருளாக இந்த கங்கை நீரும் பயன்படுத்தப்படுகிறது.

          உலகிலேயே மிகவும் மாசடைந்த கங்கை நீரில் குரோமியம் 6 என்ற வேதிப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட 50 மடங்கிற்கு மேல் இருப்பதும் கங்கையில் குளித்தால் புற்றுநோய் வருவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதும் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட உண்மைகள். இப்படிப்பட்ட கங்கை ஆற்றை சுத்தப்படுத்த பல கோடிகளை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இவ்வாறு கங்கை நீர் அசுத்தமாக உள்ளது என்பதை ஒரு பக்கம் ஒப்புக்கொண்டு, அதே நீரை மக்களின் மூட வழக்கத்தை பயன்படுத்தி புனித நீர் என்று விற்பணையும் செய்கிறது நமது மத்திய அரசு. மக்களே விழித்துக்கொள்வீர். நமது ஏழேழு ஜென்மத்து பாவங்கள் இந்த எழுபது ரூபாய் ஆற்று நீரினால் நீங்கிவிடாது என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். விழிப்புடன் இருங்கள். ஏனெனில் கங்கை ஆற்று நீரே பாவப்பட்டு இருக்கின்றது.


          மக்களை ஆளுகின்ற அரசானது தம்மக்களின் மூட வழக்கத்தை ஒழித்து அவர்களை அறிவியல் பூர்வமாக யோசிக்கவைத்து அறிவாளிகளாக ஆக்க முற்படவேண்டும். மாறாக மக்களின் மத நம்பிக்கைகளை பயன்படுத்தி அவர்களை பாழுங்கிணற்றில் விழவைத்தல் முறையன்று. ஆறுகளை இணைத்து எங்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்க வேண்டுமென விவசாயிகள் அரசிடம் கேட்கின்றனர். விவசாயத்தை புறந்தள்ளிவிட்டு ஆற்று நீரை புட்டியில் அடைத்து விலை பேசும் அரசானது தனது தவற்றை அறிந்து இப்படிப்பட்ட மத போதையினை தருகின்ற செயலில் இறங்காமல் உருப்படியாக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி நாட்டு மக்களையும் நாட்டினையும் முன்னுக்கு கொண்டுவர வேண்டும்.

          நமது பக்கத்து மாநிலமான கர்நாடக அரசு 2013-ஆம் ஆண்டில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டத்தை கொண்டுவர முடிவு எடுத்தது. அம்முடிவின்படி தற்போது 2016 ஜூலை 08-ஆம் தேதி 'கர்நாடக மூடநம்பிக்கை தடுப்புச்சட்டம் 2016' என்ற சட்ட மசோதாவை முன்வைத்தார் அம்மாநில சட்ட அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா.  அச்சட்டத்திற்கு அம்மாநில பகுத்தறிவாளர் எம்.எம்.கல்புர்கியின் பெயர் சூட்டப்படவுள்ளது.

         
மூடநம்பிக்கை தடுப்புச்சட்டத்தின்படி தொலைக்காட்சிகளில் ஜோதிடம் என்ற பெயரால் நடத்தப்பட்டுவரும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சமூகத்தில் ஒழிக்கப்பட வேண்டிய 13 வகையிலான மூடநம்பிக்கைகள் குறித்து சட்ட முன்வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 11 வகையிலானவை வெளிப்படையாகத் தெரியக் கூடியவைகளாக உள்ளன.

          மாந்தீரிகம், பில்லி சூனியம் என்று கூறி நரபலி கொடுக்கின்ற மூடநம்பிக்கைக்கு முடிவு கட்டும் வகையில் அச்சட்டத்தில் இதுபோன்ற நரபலி செயல்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படும் என சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களிடையே கருவிலேயே ஆணா, பெண்ணா என்று பாலினைத் தேர்வு செய்வது. நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறி கொடுமைப்படுத்துவது, பிற சடங்குகள் என்கிற பெயரால் காயப்படுத்துவது உள்ளிட்ட மூடநம்பிக்கையான செயல்களைத் தடுப்பதற்கு இச்சட்டத்தில் வழிவகை காணப்பட்டுள்ளது.

          இச்சட்டம் நடைமுறைக்கு வருகிறதோ இல்லையோ, ஆனால் இப்படிப்பட்ட முயற்சியினை எடுத்ததற்கு அம்மாநில அரசை பாராட்டியே ஆகவேண்டும். தம் மக்களை அறிவுசார் மக்களாக மாற்ற வேண்டும் என்ற முனைப்பை கர்நாடக அரசு எடுத்துள்ளது. நமது மத்திய அரசும் இப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதே நமது அவா.

          கண்மூடி வழக்கங்கள் மண்மூடிப் போகட்டும். மண்ணின் மாந்தர்கள் அறிவினால் ஓங்கட்டும்.  

http://www.vallalarspace.com/user/c/V000021579B
or
https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWWE9ab2VZQm5GRjA/view?usp=sharing

 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.